Tuesday, March 23, 2010

திக்கு முக்கு..திருமண விருந்து...

திருமண விருந்துகளில் திணறியிருக்கிறீர்களா? தலை வாழை இலை போட்டு அழகா மேல் பகுதியில் உப்பு, இனிப்பு, கரிப்பு, துவர்ப்பு, புளிப்பு என உணவு வகைகளை வரிசை கட்டி வைத்து அதை போட்டோ வேற எடுத்து அழகு பார்த்திருப்பார்கள்.

கல்யாணத்திற்கு சென்ற நாமோ சகல வியாதிகளுடன் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். ஐம்பதை தாண்டிய எங்களை சொல்லிக்கிறோம். இலையை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊரும். எல்லா வகையிலையும் தொட்டு டேஸ்ட் பார்த்திட்டு ...நல்லா இருக்குதில்ல.. என பக்கத்து இலைகாரரிடம் பாராட்டி விட்டு வெளியே வந்தா அங்கே ஐஸ்கிரீம், பழம், காப்பி, டீ என இன்னொரு வரிசை... எதையும் விட மனமில்லாமல் அதைக்கொஞ்சம், இதைக்கொஞ்சம் வாயை நனைச்சுட்டு பீடாவோட வெளியே வந்து, சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்து மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக என்ன குறை, என்ன நிறை என படடிலிடுகிறோம். விருந்தில் உணவு வகைகளின் ருசிகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்குது. அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கு அவர் சொல்கிற அயிட்டத்தை நாம் தொட்டுகூட பார்க்காமல் விட்டு வி்ட்டோமோ? எப்படி நம்மகிட்டயிருந்து தப்புச்சு? மனசுலே ஒரு அங்கலாப்பு.


இங்கு சாப்பிட்டு விட்டு செல்கிறவர்களின் மனத்தில் நம்ம வீட்டு விசேடத்தில் இதைவிட அயிட்டங்களை போட்டு அசத்த வேண்டும்... என போட்டி வேறு. யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம். யாரும் இதற்கு வெட்கப்படுவதாக தெரிவதில்லை. இதுஒரு முடிவுக்கு வரவும் போவதில்லை. அரசும் கண்டுக்க போவதில்லை. வேறுஎன்ன செய்ய? நம்ம வீட்டு விசேடத்திலும் தூள் கிளப்ப வேண்டியது தான்.

எதையோ சொல்ல நினைத்து சாப்பாட்டில் புகுந்தாச்சு....கல்யாண வீடு மாதிரி ஆகிகிட்டு வருது பதிவுலகம். என்ன பாக்கறீங்க. காலையிலை தமிழ் மணத்தை பார்த்தா அறுசுவை படைத்து கல்யாண வீடா காட்சியளிக்கிறது. நம்ம போல ஆட்களுக்கு எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்...நேரம்.. காலம்... வேண்டுமே. ஏதோ நம்மால் முடிந்த அளவு படித்து ஒட்டையும் போட்டு, பின்னூட்டமும் போட்டு அப்பாடான்னு நகர்ந்துவந்து... வலைச்சரத்தில் போயிப்பார்த்தா ..கல்யாண வீட்டில் சுற்றமும் நட்பும்னு சொல்லுவதைப்போல் அவர் இடுகையை போயி பார்த்திருகிறீர்களா? அவரை.. இவரை ..என அறிமுக படுத்தும் போது அடடே எப்படி விட்டோம் என நினைக்க தோணுது. அவசர அவசரமா போயிப்பார்க்கும்போது த்து .. சிலன மனதில் எச்சில் ஊறத்தான் செய்யுது. இதைப்போல ஒரு நாளைக்கு எத்தனையோ.. ஒரு ஐந்தை படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் பத்த மாட்டீங்கதே. என்ன செய்ய.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்குமா? தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க ....அப்படித்தானே..வரட்டுங்களா.


Monday, March 15, 2010

எனக்கு பிடித்தப் பெண்கள் (தொடர் பதிவு) அக்பர் தயவு...

எனக்கு பிடித்த பெண்கள் (மாட்டி விட்ட மகராஐன் அக்பர்) என்னையும் மதித்து அழைத்த அன்புள்ள சிநேகிதா...

அன்னை தெரசா, தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி... இவர்களெல்லாம் நானும் நீங்களும் படித்து அறிந்த பெண்களில் பிடித்தவர்கள்.

இன்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களின் திறமையான பேச்சுக்கள், செயல்பாடுகளை பார்க்கும் போதும் படிக்கும் போதும் நச்சுன்னு நம்ம மனசுல ஒட்டத்தான் செய்யறாங்க. சமீபத்தில் கூட மேடை ஆளுமையில் தமிழ்ச்சி தங்க பாண்டியன் சிறப்பாக செயல் பட்டதாக படித்ததும் நச்சுன்னு ஒட்டத்தான் செய்யறாங்க.

படித்ததில் பிடித்தவர்கள்... பார்த்ததில் பிடித்தவர்கள்... பழகியதில் பிடித்தவர்கள்..... நமதுவாழ்க்கையில் நாம் பார்த்து பழகிய பெண்களில் நச்சுன்னு ஞாபகம் வருகிற பத்து பெண்கள் பற்றி தொடர் பதிவுகள் படிக்கும் போதெல்லாம் நினைப்பேன்.....

நெ.ஒண்ணு....

நமது கிராமபுறங்களில் அரசு ஊழியர்களாய் கிராம நல செவிலியர்கள்(v.h.n) என்ற பெயரில் பயணிபுரிந்து வருகின்ற அந்த சகோதரிகளை அருகில் இருந்து பார்த்ததால் எனக்கு நெ.ஒண்ணாக தெரிகிறார்கள். தமிழக கிராமப்புறங்களில் அரசு கட்டித்தந்த அறைகுறை குடியிருப்புகளில் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் அடைத்துக்கொண்டும், கிராமபுறத்தில் எந்த கல்வி கிடைக்கிறதோ அதை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, மக்கள் சேவையே மகேசன் சேவை என பலர் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அன்பு சகோதரிகளின் வாழ்க்கையின் ஒரங்களை ஒரளவு தெரிந்ததால் நினைச்சவுடன் தெரிகிறார்கள்.


எண் இரண்டு......

ஒவ்வொரு நாளும் பேருந்தில் செல்லும் போது அதிகாலையில் தளவாய்ப்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து பஸ் ஏறுவார்கள். ஐம்பது அறுபது பேர்கள் ஒரே சமயத்தில் அறுவாளும் கையுமாக...வயல் அறுக்க..நாத்துநட... அவர்களுக்கு தெரியுமா ?? நாம நமக்காக மட்டுமல்ல...இந்த உலகத்திற்கே உணவு கொடுக்க பணி புரிகின்றோமென்று...மறக்கவே கூடாத மகராசிகள்.


மூன்று....


தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆச்சரிய பெண்கள். அவுங்க வாங்கற சம்பளத்திற்கும் செய்கின்ற பணிகளுக்கும் தொடர்பு உள்ளதா? கடந்த இருபது வருடங்களாக நமது குழந்தைகளின் கல்வித் தரம் உயர காரணமானவர்கள் அவர்கள் அல்லவா? நன்றிக்குரிய அந்த சகோதரிகளில் பலர் எனக்குப் பிடிக்கும்.


நெ.4.


அங்கன்வாடிப் பணியாளர்கள்....என்னும் அந்த அன்பு சகோதரிகளில் பலர் கிராமப்புறங்களில் மவராஐன் கொண்டு வந்த சத்துணவு மையத்தில் உணவு தயாரித்து விவசாயக் கூலி வேளைக்கு சென்றுவிட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாயினும் சாலப்பரிந்து உணவு ஊட்டும் அழகை ஒரே தடவை பாருங்கள்... உங்களுக்கும் அவர்களைப்பிடிக்கும். அரசு பணி என்றாலும் சேவை செய்ய ஒரு மனசு வேணும்... சேவை செய்யும் போது பார்த்த பலரைத்தான் பிடித்ததாக சொல்கிறேன்.


ஐந்து....


நகர வாழ்க்கையில் நகரவே முடியாத இடத்தில் இருப்பவர்கள். நீங்கள் தினமும் இவர்களை சந்தித்தே ஆக வேண்டும். அவர்கள் ஐவுளிக் கடைகளில் சேல்ஸ் வுமன்களாய், டெலிபோன் பூத் சகோதரிகளாய், இன்னும் பிற இடங்களில் பணி புரியும் அன்பான உபசரிப்புகளையே மூலதனமாக்கி வாழ்க்கையை நகர்த்தும் அந்த நகரா சகோதரிகளில் பலரை நான் அறிவேன்.


.6.


அக்பர் எழுதியதைப்போல தயிர், பால், கீரை என கூவி கூவி சத்தம் போட்டு அழைத்து நமக்கும் நமது குழந்தைகளுக்கும் சத்தை தரும் பெண்கள். இப்படி உழைக்கும் பெண்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்.

இவர்களில் பத்து பேரை மட்டும் அடையாளம் காட்டுவது சரியல்ல. இவர்களில் சேவை உணர்வை மதித்து பலரின் பெயர், குடும்ப பின்னணி உட்பட அறிந்து வைத்துள்ளேன். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால்...நம்மால் முடிந்தது.. அவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் பெற்று தருதல், மருத்துவ ஆலோசனை மறறும் உதவி பெற்றுத் தருதல் இப்படி செய்து கொண்டே இருப்போம்..இருங்கள்.... யாரும் உங்களை வாழ்த்த வேண்டாம்... எந்த கோவிலுக்கும் போக வேண்டாம்..... நமது குழந்தைகள் நல்லா இருக்கும் என்று நம்புவோம்.


நன்றிங்க அக்பர்....


Friday, March 12, 2010

மனிதம் மறக்க காரணமாகிறது...

நானும் எனது மனைவியும் எங்களூரிலிருந்து பெங்களூருக்கு இரண்டு பை மற்றும் மகளுக்கான அன்பை லக்கேஜ் வழியாக எடுத்துக்கொண்டு அதிகாலையில் சுபயோக சுபவேளைப் பார்த்து புறப்பட்டோம். கூட்டம் குறைவாகவுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் ஏறினோம். முன்பக்கம் ஏறிய எனதருமை மனைவி, நடத்துனர் இருக்கைக்கு இரு இருக்கை தள்ளி அமர்ந்து லக்கேஜ்ஜையும் வைத்து விட்டார். பின்பக்கம் ஏறிய நான் காற்றோட்டமாக அமரலாமே என எண்ணி இருக்கை தேடியபடி இருந்தேன்.

அன்புள்ள மனைவி அழைத்தார். ஏனுங்க..இங்கேயே வாங்க..கூட்டம் ஏதுமில்லை..இறங்குவதற்கும் செளரியமாக இருக்குமென்று அன்புடன் அழைத்தார். அப்போ என் உள் மனசுசொல்லுது..‘டேய் பாசக்காரா..மனைவி பேச்சை கேட்காதே..உனக்கு தோதான இடமா பார்த்து இடத்தை பிடி’என்று..அடப்போ..அன்போடு கூப்பிடறாங்க.. அவிங்க சொல்லை தட்டலாமா? என மனசு சொன்னதை தட்டி விட்டுமனைவி அமர்ந்த சீட்டில் மூன்றாவதாக காலியுள்ள சீட்டில்அமர்தேன். பயணம் இனிதே தொடங்கியது.

ஏறத்தாழ பேருந்து நிரம்பி விட்டது. பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது. நான் சின்னப்பையனா இருக்கும் போது இடம் இல்லை என ஒட்டுனர் கையை அழகா விரித்துவிட்டு சொல்லுவார். பார்க்கவே அழகா இருக்கும், இப்ப அப்படியில்லை. படியில் கூட்டம் நிரம்பி வழிந்தால்கூட கருணை மனம் கொண்ட இந்த கால ஒட்டுனர்கள் பஸ்ஸை நிறுத்தி மனிதப் பொதிகளை அள்ளி போடாத குறையாக ஏற்றிக் கொள்கிறார்கள். அவசர உலகத்தில் பிறந்து விட்ட நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏறிக்கொள்கிறோம்.

கதைக்கு வருவோம்..ஆனந்தமாக பிரயாணத்தை தொடர்ந்தோம். சுமார் 3 கி.மீ. தூரம் கடந்ததும் பத்து பேர் கொண்ட குடும்பம் பேருந்தை நிறுத்தியது. ஓட்டுனரும் ஓரம் கட்டினார். பத்து பேரும் ஏறினர். பாதிப் பேருக்கு இருக்கைகள் கிடைத்தது. நால்வருக்கு இருக்கைகள் இல்லை. அதில் ஒரு பெரியவரும் பெரியம்மாவும் இருக்கையில்லாமல் என்னருகில் நிற்கின்றனர். நின்றுகொண்டே என்னை பார்த்தார்கள். என்நிலைமை கவலைக்கிடம் ஆகி விட்டது போல் தோன்றியது. அவர்கள் என்னைப் பார்க்க நான் மனைவியை பார்க்க என் இல்லம் மெதுவா சொல்லுது,..‘பேசாம கண்ணை மூடி படுங்க’. மனைவி சொல்லைதட்டாம நானும் கண்ணை மூடி தூங்குவதுபோல் நடித்தேன். எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அடடா..காலை வேளையில் அனைவரும் தூங்கினர். இனி மேலும் நாம தூங்கினா நம்ம ஊருக்கே கெட்டப்பேரு வந்துவிடும் என எண்ணி....திரும்பி திருமதியை ஒரு மொறை மொறைத்து விட்டு எழுந்து பவ்யமாக அந்த பெரியம்மாவை உட்காருங்க அம்மா என கூறினேன். அவரும் அதற்காவே காத்திருந்ததைப்போல அமர்ந்தார்.

வெற்றி புன்னகை யோடு 75 .கிமீ,நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைத்தது. பேசாம ஒரம் சாரமா அமர்ந்து வந்திருப்பேன். மனைவி சொல்லைக்கேட்டு மயக்கம் வரும் நிலை. இது யார் குற்றம்? நமது மாநில போக்குவரத்துத்துறை ஏன் இப்படி தொலை தூர பேருந்துகளில் கூட இருக்கைகளுக்கு மேல் ஆட்களை ஏற்றி ஒரு சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து மனிதத்தையே மறக்க செய்ய காரணமாகிறது.