Tuesday, December 13, 2011

தமிழ்ச்செல்வி...கள்


“வணக்கம் அண்ணா.. நான் தமிழ்ச்செல்வி பேசுகிறேன்..”

“வணக்கம்மா.. என்ன விஷயம்மா..?”

“ஒண்ணுமில்லைண்ணா...” அப்படின்னு எங்க உரையாடல் ஐந்து நிமிடம் தொடர்ந்து முடிந்ததும் மீண்டும் சிந்தனை.. என்ன இழவடா இது,  ஒரு எழவும் கிடைக்காது போல இருக்குது அப்படின்னு நினைத்தால்..

மீண்டும் தமிழ்ச்செல்வி என்ற பெயர் நினைவுக்கு வருகிறது. யார் இந்த தமிழ்ச்செல்வி? இந்த பொண்ணை நம்ம வாழ்க்கையிலே எப்ப முதன்முதலா சந்தித்தோம்? இது இருக்கட்டும், அப்பறம் பார்ப்போம். நமக்கு வயது அறுபதை நெருங்குது. இந்த அறுபது வயதில் நம்ம வாழ்க்கையில் எத்துனை தமிழ்ச்செல்வின்னு பெயர் உள்ள பெண்களை சந்தித்து இருக்கிறோம்? அப்படி போகுது சிந்தனை.

ஆகா பொழுது போகாமல் இருக்கும் நமக்கு.. பொழப்பு ஓட்ட ஒரு விசயம் கிடைத்து இருக்குது, அதை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் அப்படிங்கிற நினைப்புடன் நினைவு ரயிலை இயக்கினால்.. அது முன்னோக்கில்ல செல்லுது. ஒரு சுண்டு சுண்டி பின்னோக்கி இழுத்தேன்,  போயே போயிட்டேன். ஆரம்ப பள்ளியில எங்க அய்யன் கொண்டு போய் சேர்த்திய நினைவு எல்லாம் வருகிறது. அப்படியே வந்தா அப்ப நம்மகூட படித்த தோழிகள் நினைவுக்கு வருகிறார்கள். கமலாத்தாள், வள்ளியம்மாள், நாச்ச்ம்மாள், கோவிந்தம்மாள், பாப்பம்மாள்.....  இந்த.... மாள்களுக்கு நடுவிலே ஒரு தமிழ்ச்செல்வியும் இருந்தது. நான் சொல்லுவது 1957 கால கட்டமுங்கோ.. அந்த காலத்திலேயே தமிழ் உணர்வில் பெயர் வைத்த பெரியவரை நினைத்துப் பார்த்தேன்...

அவரு பெயர் நாச்சிமுத்து...கொத்துக்கார அண்ணன் என எங்க ஊர் மக்கள் அவரை அடையாளம் காட்டுவார்கள்.. அவரை நினைவுக்கு கொண்டு வந்தா.. அந்த நினைவு வந்தே தீரும்.. அதை சொன்னாத்தான் தமிழ்ச்செல்விக்கும் பெருமை....

1957 லோ 58டோ நினைவுக்குவர மாட்டேங்குது. சீனா யுத்த காலம் அப்டின்னு நினைக்கிறேன். எங்க ஊருக்கு மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் வந்தாரு. எங்க ஊரு பிரசிடெண்ட் அப்ப காங்கிரஸ் கட்சியில் இருந்தாரு.  அவரு அழைப்பை ஏற்று வருகை தந்திருக்காரு. எங்க ஊரு சாவடிக்கு முன்னால் கூட்ட மேடை. எங்க ஊரு சாவடிக்கு முன்பு ரெண்டு வேப்பமரம் இருக்கும். அப்படிஓரு அழகு. இப்பவும் மரம் அப்படியே இருக்குது. ஆனால் அந்த அழகு போச்சு. ஏன்னா அந்த சாவடி இடிந்து குட்டிச்சுவர் ஆகி விட்டது. 

சரி இப்ப எதற்குங்க அந்த கதை. நம்ம கதைக்கு வருவோம். அந்த ரெண்டு வேப்ப மரத்துக்கு நடுவிலே மாத்து விரித்து மேசை போட்டு நான்கு நாற்காலி. அவ்வளவுதான் மத்திய அமைச்சருக்கு மேடை ரெடி. முன் வரிசையில் நாங்க உட்கார வைக்கப்பட்டோம். என்ன என்னமோ பேசினார்கள். ஒண்ணுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் அதை நினைத்தால் தமிழ்ச்செல்வியோட அப்பா நாச்சிமுத்து அண்ணன் மட்டும் டக்குன்னு நினைவுக்கு வந்து விடுகிறார். ஏன்னா அந்த கூட்டத்தில் அவர் செய்த காரியம் அப்படிபட்டது. 

அவரும் கூட்டத்தில் பேசினார்..பேசிக்கொண்டு இருக்கும் போதே தன் சட்டையை கழட்டி தன் இடுப்பில் வைத்திருந்த மடக்கு பேனா கத்தியை எடுத்து அவர் மார்பில் நான்கு முறை கீரிக்கொண்டு பேனாவை எடுத்தாரு. இங்க்...க்கு பதிலா தன் மார்பில் வடியும் இரத்தத்தை பிடித்து அமைச்சர் முன்பு இரத்த கையெழுத்து போட்டாரு. அண்ணன் கழக கண்மணி.. தன் முதல் மகனுக்கு செங்குட்டுவன் என்றும், இளைய மகனுக்கு அன்பழகன், மகளுக்கு தமிழ்ச்செல்வி‘ன்னு பெயர் வைத்து, ஊரோட சேர்ந்து வாழாம தனியாக பகுத்தறிவு நடை போட்டாரு.

அவரு மகள்தான் தமிழ்ச்செல்விங்கிற பெயரில் நான் சந்தித்த முதல் பெண்.. சில மாதத்திற்கு முன்பு நம்ம ஊரில் ஒரு பெரிய காரியம் ஆகி போச்சு. பெரிய காரியம் அப்படின்னா கிராமபுறங்களில் வயதானவர்கள் இயற்கை எய்தி விட்டால் அந்த நிகழ்வை பெரிய காரியம் என மரியாதையா சொல்லுவார்கள். அப்படிவொரு பெரிய காரிய நிகழ்வில் தமிழ்ச் செல்வியை பார்த்தேன்.. நான் பத்து வயதில் பார்த்த அந்த பெண், ஆத்தாவாகி இருக்கிறாள். அப்பாடா ஒரு தமிழ்ச்செல்வியோட நினைவை அசை போட்டு எடுத்தாச்சு.. அடுத்த தமிழ்ச் செல்வி... கொஞ்சகொஞ்சமா அசை போடுறேனுங்க..