Monday, December 20, 2010

சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க..

வணக்கம். மாதத்திற்கு ஒண்ணாவது பதிவு கொடுக்கவில்லையென்றால் நம்ம சொந்தங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்து எதையாவது எழுதி விடுவது என முடிவுக்கு வந்துட்டேன்.

தினமும் அதிகாலையில் எழுந்து நெட்டை கனெக்சன் கொடுத்துவிட்டு சுமார் 2கிமீ நடந்திட்டு வருவது.. வந்து மெயில் பார்ப்பது.. பார்த்து.. நம்ம பிளாக்கில் யாராவது புதிய வரவுகள் வழி தெரியாமல் வந்துவிட்டார்களா.. வந்திருந்தா அவுங்க பக்கம் போயி பார்த்து படித்து கருத்தை பதிவு செய்துவிட்டு வருவது. இப்படியே காலம் தள்ளிவிடலாம் என எண்ணி கொண்டு இருந்த வேளையில்...... தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு...

ஈரோட்டுக்கு இருபத்தாறாம் தேதி போகணும். மெனுவேற போட்டு நாக்கில் எச்சை ஊற வைத்துள்ளார்கள். பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் ஈரோடு போரேன் அப்படின்னு சொன்னா என்ன வேலயா போறீங்க...அப்படின்னு ஒருத்தரும் கேட்பத்தில்லை. நானே.. நம்ம   உலகம் முதல் உள்ளுர் வரையுள்ள நம்ம சொந்தங்களைப்பற்றி சொல்ல  மிரள ஆரம்பித்து விட்டார்கள். நானும் இருபத்தாறாம் தேதி வரை பொறுங்க..அப்புறம் இருக்கு.. மனசுக்குள் போட்டோ ஆதாரத்துடன் வருகிறேன் அப்படீன்னு நினைத்து  கொண்டு இருக்கிறேன்.
 

 

 
சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்
! . தமிழ் 25 . !: ஒரே பார்வையில் பயனுள்ளவை பத்து

! . தமிழ் 25 . !: ஒரே பார்வையில் பயனுள்ளவை பத்து

Monday, November 1, 2010

ஒரு எழுத்துப் பிரச்சனை...ங்க...

எல்லோருக்கும் வணக்கம். நான் நலம். நீங்க நலமா...பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு. எதையாவது பேசனும் அப்படின்னு நெனைச்சுகிட்டு இருந்தப்போ..மாமா என்ற அழைப்புடன் உறவினர் ஒருவர் வந்திருந்தார். வாங்க..வாங்க என வரவேற்று அமரவைத்துபோது.. அழகா தட்டத்தில் தண்ணிருடன் உங்க மொழியில் தங்கமணி.. தண்ணிர் கொடுத்தபடி வரவேற்பு... காபி சாப்பிடுகிறீர்களா?, சாப்பிட்லாம்ங்க....நேற்று இங்க நல்ல மழை போல இருக்குதுங்க.. நம்ம ஊருபக்கம் மழை இல்லைங்களா.? இங்கே போல இல்லைங்க..சும்மா சர்வ வெள்ளம் போல... இப்படியே போச்சுன்னா.. குடிதண்ணிக்கே திண்டாட்டம் வந்திரும்ங்க....புதிதாக பார்க்கிறவர்கள் யாரும் இப்படித்தான் பேச்சை தொடங்குவார்கள்..

ஒரு விசயமாய் உங்களை பார்க்கலாம்மின்னு வந்தேனுங்க..எனது மகள் ஹரிணி பிறப்புச் சான்றிதழில் ஒரு தப்பு ஏற்பட்டு விடட்துங்க..அதை அப்ப சரியா பார்க்காமல் படிக்காமல் விட்டது தப்பா போச்சுங்க..என அவரின் மகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துக்காண்பித்தார். எனது பெயரையும் எனது மகளின் பெயரையும் சரியான உச்சரிப்புடன் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். எனது மனைவி பெயரை கோகிலவாணி என்பதை கோகிலமணி என்றுபதிந்து இருக்கிறது. என் மனைவியின் பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை அனைத்திலும் கோகிலவாணி என்றே உள்ளது..என்ன செய்யலாம்..மாற்றலாமா..இப்படியே விட்டு விடலாமா.. இதில் ஒண்ணும் பிரச்சனையில்லைங்க.. ஒரே எழுத்துத்தான் பிரச்சனை.. நம்ம மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி..ஆகா..வேலை இல்லாம வீட்டில் அதைஎடு.. இதை கொண்டா.. அப்படின்னு அதிகாரம் பண்ணி காலத்தை கடத்துவதிலிருந்து இரண்டு நாளைக்கு விடுதலை.. கவலையை விடுங்க..மாமா எதற்கு இருக்கேன்..நான் பார்த்துக்கொள்கிறேன். முகவரி சான்றுகொடுத்து பெயரை மாற்றி கொள்ளலாம் எனச் சொல்லி...கவனமா படியுங்கள்..நகலை மட்டும் கொடுத்து விட்டு செல்லுங்கள்..மீதியை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன்.

மறுநாள் அய்யா அதி காலையில் எழுந்து சுபயோக சுபவேளை பார்த்து திருத்த பிறப்புச் சான்றிதழ் வாங்க 35 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். காலை மணி 10.30. பிறப்பு இறப்பு பதிவாளர் அறை திறந்தே இருந்தது. யாரையும் காணோம். சரி எங்காவது காபி..கீ.பி..சாப்பிட சென்று இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நின்று கொண்டே இருந்தேன். கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. யாரும் வருவதாக தெரியவில்லை. மே18 யே பொறுத்தவன் இதை பொறுக்க மாட்டேனா. சரியாக 12.24 உதவியாளரைப் போல் ஒருவர் ஒடி வந்து எதையோ எடுத்துக்கொண்டு ஒடினார். ஏதாவது கேட்கலாம் என்றால் ஆள் ஒடியேவிட்டார். சரியாக மணி 1.20 இரண்டு பேர் வந்தார்கள்.ஒருவர் ‘என்னங்க வேணும்? எனக்கேட்க, நான் என் கையில் இருந்த விண்ணப்பத்தை காட்ட..

அதை படித்து விட்டு...அடடே.. ஒரு எழுத்து பிரச்சனை.. சார் அங்கே செல்போன் பேசிக் கொண்டு இருக்காரே அவர்தான் உங்க பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். அவரைப் பார்த்தேன். அவரோ இன்னொரு பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். செல் போனும் கையுமாகவே இருந்தார். இடையில் குறுக்கிட்டால் ‘இன்று போய் நாளை வா’ என சொல்லி விடுவாரோ என்ற பயம். அவரே பேசி முடித்து விட்டு என்னை பார்க்க..நான் உடனே விண்ணப்பத்தை கொடுக்க

அவர் வாங்கி படித்து விட்டு...நாங்கள் எற்கனவே கொடுத்த அசல் சான்றிதழை கேட்டார். நான் ‘அசல் எடுத்து வரவில்லைங்க’ எனச் சொல்ல. அவர் ‘அப்படியா..அப்ப அசல் சான்றிதழ் எடுத்து கொண்டு நாளை வாருங்கள்’ என்றார். எனக்கு சுருக்கென்றது. தப்பு நம்ம மேலேதான் என எண்ணிக்கொண்டு, நம்ம மாப்பிள்ளைக்கு அடித்தேன் போனை. ‘என்னங்க அசல் சான்றிதழை கொடுக்காம போய்விட்டிர்கள்’ என்றேன். ‘நீங்கதானே மாமா நகலைமட்டும் கொடுங்க போதும்’ என்றீர்கள். ‘அப்படிங்களா..தெரியாம சொல்லிட்டேன்.. நாளைக்கு என்னிடம் சேரும்படி அசலை கொடுத்து அனுப்புங்கள்’ என்றேன். சரிங்க ஒருநாள் எப்படியோ நகர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலை ஆள்கின்றவரை வணங்கிவிடடு. அசல் சான்றுடன் சரியாக பத்து மணிக்கு சென்றேன். நம்ம அதிகாரி இருந்தார். நல்ல நேரம் என எண்ணிக் கொண்டு வணக்கம் வைத்தேன். அசல் சான்றுடன் வந்திருக்கிறேன் என்றேன். நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் பொறுங்க அறைச்சாவி வரட்டும் என்றார். சாவி வந்தது. உள்ளே சென்று நம்ம விண்ணப்பத்தை ஆய்வு செய்தார். வெளியே வந்து, அய்யா குழந்தை பிறந்த மருத்துவமனையிலிருந்து திருத்த அறிக்கை பெற்று வரவண்டும் என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘பின்னே’ என்றார். ஓ..நமக்கு நேரம் சரியில்லை என்ற நம்பிக்கையில் தெரிந்த நண்பர் தயவில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்றேன். விசயத்தை சொன்னேன். ஒண்ணும் பிரச்சனையில்லை கோகிலவாணி என்ற பெயருக்கு புருப் நகலுடன் எழுதிக் கேட்டார்கள். நல்லவேளை ஓட்டுனர் உரிமம் கையில் இருந்தது. எழுதிக் கொடுத்தவுடன் வாங்கி கொண்டு ‘இன்று போய் நாளை வாங்க’ என மரியாதையாக சொன்னார்கள். மரியாதையா சொன்னதால் மரியாதையாய் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் ஆண்டவர்களையும், ஆள்பவர்களையும் நினைத்துக் கொண்டு மருத்துவமனையில் திருத்த அறிக்கையுடன் சென்றேன். அய்யா அன்புடன் வரவேற்றார். வாங்கிப் பார்த்தார். விண்ணப்ப வில்லை ஒட்டி பெட்டியில் போடச் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். எப்ப வருவதுங்கு எனக் கேட்டேன். மறுநாள் மாலை வரச்சொன்னார். சென்றேன்..வென்றேன்...

சான்றிதழிலுடன் வெற்றிப்புன்னகையுடன் வெளியே வந்தேன். வம்பர் ஒருவர் சந்தித்தார். மகிழ்ச்சியுடன் தேநீர் வாங்கி கொடுத்து நலம் விசாரித்ததார். என்ன விசியமா வந்தீங்க என்றார். நான் ஒரு வாரமாக அலைந்து ஒரு எழுத்தை திருத்த கதையைச் சொன்னேன். ‘அடப் போய்யா, நீயெல்லாம் எப்படியய்யா அரசு பணியில் இருந்தாய் ஒரு இருநுறு ருபாயை கொடுத்திருந்தால் அன்றே அந்த சான்று கிடைத்திருக்கும்’ என்றார். நண்பா கொடுக்க நான் ரெடி, யாரிடம் கொடுப்பது. யாரும் என்னிடம் கேட்கவில்லையே என்றேன். ‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார். ‘அப்படிங்களா..’என கேட்டு விடைபெற்று வீடு திரும்பினேன்.

வீட்டுத்தொலைக்காட்சியில்..........சுத்துதே சுத்துதே பூமி..போதுமடா போதுமடா சாமீ.. என்கிற பாட்டு. இதனால் அறிவிப்பது என்னவென்றால் சொந்தங்களே... பிறப்பு இறப்பு சான்றுகள் பெறும்போதே கவனமா பொறுமையா எழுத்துக்கு எழுத்து படித்து வாங்குங்கோ. அப்படி வாங்கின்னா உங்க வீட்டில் யாருக்கேனும் ஒரு வாரம் அலைச்சல் மிச்சம் சொந்தங்களே. தீபாவளி யாராவது கொண்டாடினால் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...சுனா..பானா.

***********************************************

Friday, October 1, 2010

ரியல் எஸ்டேட் பிசினஸ்...


கொட்டக்காடு, கோமுட்டி தோட்டம், சாமியங்காடு, குளக்காடு, பாலமரத்துக்காடு, பனைமரத்துத் தோட்டம், ஓட்டையங்காடு, சின்னக்குரை, அனுப்புச்சிகாடு என்னுங்க இது? நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறப்ப... அதாவது 1965/1975 வருடங்களில் இந்த பெயர்களில் விளங்கிய விளைநிலங்கலெல்லாம், அண்ணா நகர், கண்ணன் நகர், சென்னியப்பா நகர், ஹவுசிங் யூனிட், லாயர்ஸ் காலனி, லட்சுமி நகர், ஜீவா நகர் என பெயர் மாறி கான்கீரீட் பயிர்களா உருமாறி காட்சியளிக்குது. என்னைப்போல் உள்ளவங்களுக்கு அந்த காடு தோட்டம் கண்ணுக்குள் வந்து போகுது.

நல்ல விவசாய பூமியெல்லாம் கண் முன்னே கான்கீரிட் பூமியாகுது. அதுமட்டுமல்ல காடு மேடெல்லாம் கல் நட்டு சைட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் அங்கிகெனாதபடி எங்கும் பிரகாசமாய் கொடிகட்டி பறக்குது. ஆளப்பிறந்த பாதி பேருக்கு இது தான் வேலை. மீதிப்பேருக்கு என்ன வேலை. அதை நீங்கதான் சொல்ல வேணும். இந்த பூமி பெயர்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லுவார்கள். அதை கேட்கவே சுவராசியமாக இருக்கும். ஊருக்கு ஊரு அண்ணா நகர். நம்ம அண்ணாவை நினைத்து பெயர் வைத்தார்களா? சைட் போட்டவரு அவுங்க அண்ணனை நினைத்து பெயர் வைத்தாரா? ஒண்ணுமே புலப்படவில்லை.

அதாவது பரவாயில்லை..சென்னியப்பன், சம்பத்(இது வேறு சம்பத்துங்கோ) இவுங்க உல்லாம் யாரு? அப்படின்னு என் பேரன் கேட்டால் நான் ஒரு சொல்லணுமே. நம்ம ஊரை கண்டு பிடித்ததே அவுருதான் அப்படின்னு புதுக்கதை ரெடி பண்ணி வைக்க வேண்டும். சரி விவசாய நிலங்களெயெல்லாம் கூறு போட தடை போடுங்க என்று நமது அரசாங்த்திடம் யாராவது ரகசியமாக சொல்லுங்களேன். அதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம் ஏது? அதுவும் சரிதான்.

நம்ம சங்கதிக்கு வருவோம். இப்போ நமக்கு புது சிக்கல் ஒண்ணு உருவாயிருக்கு. நம்ம பேரருக்கு பெயர் வைக்க வேண்டும். நம்ம பேரர் எதிர் காலத்தில் உங்களைப்போல பதிவு திலகமா திகல வேணுமல்ல. அன்பை புகட்ட நானும்...அதுதானுங்க செல்லம் கொடுக்கறது. அறிவை புகட்ட எனது மகளும் மருமகரும் இருப்பார்கள்.

பெயர் வைக்கிற பொறுப்பை நம்ம கிட்ட ஒப்படைத்து விட்டார்கள். என் மூத்தமகள் பெயர் வித்தியப்பிரியா, இளையவள் தமிழினியா. பெரியவள் சொல்கிறாள்.. பெயர் வைத்தே என்னை பழி வாங்கி விட்டீர்களே அப்பா...‘ஆங்கில அகர வரிசையில் வி..எங்கும் கடைசி..எங்கும் காத்திருப்பதே சோதனையா போகிவிட்டது‘ என்று. அதனால் என் அன்பிக்குரிய இணையச்சொந்தங்களே நல்ல தமிழ் பெயராக சொல்லுங்களேன், உங்களிடம் கேட்கச் சொல்லி என் மகள்தான் சொன்னாள். நம்பிக்கையுடன் சான்..பிளாக் எதுக்கெல்லாம் பயன்படுது என எல்லோருக்கும் புரிய வைப்போம்..தெரிய வைப்போம்.

அன்புடன் சூனா பானா.

Tuesday, September 21, 2010

இந்த கதை எப்படி?

வாழ்க்கை ஒரு போராட்டம் பல பேருக்கு. வாழக்கை ஒரு தேரோட்டம் சில பேருக்கு. இந்த காலத்தில் பெண்ணை பெத்தவங்க பெண்ணை வளர்த்தி படிக்க வைச்சு, வேலைக்கு அனுப்பி அழகு பார்த்து, ஆளானதும் இனி நாம துள்ள முடியாதே என வருத்தப்பட்டு பின்பு மகிழ்ந்து..காலம்ஓட...பொண்ணு ஜாதகத்தை எடுத்து சோசியம் பார்க்க அலைந்து நல்ல வரன் கிடைக்க வேண்டி..பெண்ணின் ஜாதகத்தை நகல் எடுத்து விநியோகித்து....நல்ல ஜாதகம் இருக்குது அப்படீன்னு தகவல் வந்தா மனசு இறக்கை கட்டி பறந்து...

பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரிந்தா மகிழ்ச்சியா எதிர் நோக்கி..அவர்களுக்கு பிடித்தா நமக்கு பிடிப்பதில்லை...நமக்கு பிடித்தா அவர்களுக்கு பிடிப்பதில்லை என சலித்து...கையில் இருக்கும் காசுயெல்லாம் கரைந்த நிலையில் பக்கத்து வீட்டு வரனே வந்து கதவைத்தட்ட, தடபுடலா திருமணத்தை நடத்த எண்ணி...காஸ்ட்லியான கல்யாண பத்திரிக்கையில் ஆரம்பித்து..இது நமக்கு தேவையா என யோசித்து..கல்யாணம் முடிந்து..அப்பாடாயென உட்கார்ந்தா..அப்பத்தான் கடமையே தொடங்குதாம்.. எல்லாம் இருக்குதுன்னு அக்கா (சம்பந்தி) சொல்லுவாங்க. என்னதான் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவங்களா இருந்தாலும் நம்மாலை இருக்க முடியுதா?

அருவாமனையிலிருந்து கறிவேப்பிலை வரை பார்த்து பார்த்து வாங்கி தனிக்குடித்தனம் வைத்து ...அடிக்கடி விசிட் செய்து .. விசிட் செய்யும் போதெல்லாம் லக்கேஜ்களுடன் மகள் குடித்தனம் நடத்தும் அழகை பார்த்து ரசித்து திரும்பினால்..மகளிடம் இருந்து அம்மாவுக்கு சிறப்புச் செய்தி...நாட்கள் தள்ளிபோய்விட்டது என்று...உடனே இந்த அம்மா மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து...போன வாரந்தானே திரும்பினோம்..மறுபடியும் துணைக்கு கெளரவ அழைப்பாளரா நம்மையும்....

காசை செலவழித்தால் மட்டும் போதாதுங்க..கால முழுவதும் பொண்ணுக்கு நாமதான் துணையிருக்கணும்..அதுதான் கெளரவம்..பாசம்...அப்படின்னு நமக்கே வகுப்பு எடுத்து...மருத்துவ பரிசோதனையில் ஆரம்பிக்கும் செலவு...அடுத்து வளைக்காப்பு..நமக்கு எதிரி வருகிற சம்மந்தியோ..மாப்பிள்ளைகளோ அல்ல...நம்ம வீட்டு தெய்வங்கதான்...வளைக்காப்புக்கு இத்துணை பவுனுக்கு வளையல் போடவேணும் என தூண்டில் போட்டு மீனைப்புடித்து சாதித்து..வளைக்காப்புக்கு எத்தனை பேரை அழைப்பது..எப்படி சமையல்..எங்கு விழா?..என ஒரு மினி திருமணமே நடத்தி..அப்பாடா என இருக்கமுடியுதா?

எப்படா வரும் மகப்பேறுநாள் என எதிர்பார்த்து ..மகளுக்கு வலி என அறிந்ததும் அத்தனையும் மறந்து ஆளாய் பறந்து..எவ்வளவு பணம் செலவானலும்..என் மகளுக்கு வலியே தெரியக்கூடாது...என மருத்துவத்திற்கே மருத்துவம் பார்த்து....அஞ்சு நிமிடத்தில் அழுகை சத்தம்.... அனுபவித்தவர்கள் நினைத்து பாருங்கள்.. அனுபவிக்காதவர்கள் கால ஓட்டத்தில் கண்டிப்பாக அனுபவிக்க வாழ்த்துக்கள்...

என்னடா இது முற்றுப்புள்ளி வைக்காமையே கதை எழுதி கிழித்திருக்காரு.. அப்படீன்னு யாராவது நினைக்க போறீங்க..மூச்சு விட முடிந்தா தானே முற்றுப்புள்ளி வைப்பது. நேத்து ஆரப்பிச்ச மாதிரி இருக்குது. நேற்று பொண்ணு சொல்லுது ‘பிறந்தது பொண்ணா இருந்திருந்தா..பேசாம உங்க பராமரிப்பிலேயே விட்டுவிடலாம் என்று இருந்தேன்.. பையனா போச்சே.. உங்களை நம்மி விட முடியாது..செல்லம் கொடுத்தே கெடுத்து விடுவீர்கள்’ என்று. இந்த காலத்திலே பையனைத்தான் பொத்தி பொத்தி வளர்க்கணும்..அன்பால கட்டிப்போட்டு அறிவை புகட்டணும். அப்பத்தான் உங்களை மாதிரி அம்மா பேச்சை தட்டாம கேட்கிற மாதிரி என் மகன் அவன் மனைவி பேச்சை ஆயுள் முழுவதும் கேட்பான் அப்படீங்குதுங்க.. எப்படி இருக்குது கதை.. வணக்கமுங்க.Monday, September 13, 2010

உறவுகள் எத்தனை...


தினமும் இணையத்தில் ஒவ்வொருத்தருடைய பதிவுகளை படிக்கும்போதும் அடடே..இவுங்க இப்படி சிந்தித்திருங்காங்களே.. நமங்கு எங்கே போச்சு புத்தி? (மரியாதையா சொன்னா அறிவு..) நமக்கும்தானே அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கு.. ஆனா அதை ஏன் பதிவா போடலை? போடலாம்ன்னு நமக்கு ஏன் தோணலை? சரி போனது போகட்டும் இன்று பதிவு போட ஏதாவது அனுபவம் கிடைக்குமா? என ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டியது..அங்கே போய் பார்த்தா நம்ம அனுபவத்தையே ஒருத்தர் அனுபவித்து எழுதிருப்பார்...நடுரோட்டிலே லிப்ட் கேட்ட ஒருவன் வழிப்பறியா இருப்பானோ? என நமது மனது நினைப்பதைக்கூட பதிவில் தொட்டுப்பார்க்க கதிர்களால் முடிகிறது. ஏன் நம்மால் முடிவதில்லை..இப்படியே காலத்தை ஒட்டாம...நிகழ்வு ஒன்றை பதிவு செய்வதாக முடிவு செய்தாச்சு..

ஒவ்வொருவரும் பிறந்தவுடன் பல உறவுகள் உண்டாகிறது. அம்மா அப்பாவுக்கு மகனாகிறோம், நமக்கு முன்னே நமது பெற்றோர்களுக்கு பிறந்தவங்களுக்கு தம்பியாகிறோம், தாத்தா..பாட்டிக்கு பேரனாகிறோம், அப்படியே உறவுகள் தொடர்கிறது. பெற்றோர்கள் வைக்கும் பெயருக்கு சொந்தகாரர்களாகிறோம், பள்ளி பருவத்தில் நண்பனாகிறோம், தில் இருந்தா காதலனாகிறோம், கல்யாணம் பண்ணிக்கிட்டா கணவராகிறோம். அதனை தொடர்ந்து உறவுகள் மாமன், மச்சான் என ஓட்டிக்கொண்டு உறவாடி மகிழ்ந்து போகிறோம்.

நமக்கென குழந்தைகள் பிறந்தவுடன் அப்பாவாகிறோம். அந்த குழந்தைகளுக்கு மணம்முடித்தவுடன் சம்மந்தியாகிறோம். நமது குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தாத்தா..பாட்டியாகிறோம். முதலில் மகன் என்ற உறவுடன் வந்த நாம்.. தாத்தாவாகி ஓய்வு பெறுகிறோம். என்ன இது? ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..
Monday, August 9, 2010

ஏலம் எடுத்த கதை...

அய்யா வணக்கம். ஞாயமா அய்யோ வணக்கமுன்னு தான் ஆரம்பித்து இருக்க வேணும். ஏன் என்றால் நான் சொல்லப் போகும் கதை அப்படிப்பட்டதுங்க. போன வாரம் பேப்பரில் ஒரு விளம்பரம். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாங்க எங்க பேப்பர் பார்க்கிறோம்? இந்த இணையத்தில் இணைந்ததிலிருந்து பேப்பராவது ஒண்ணாவது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த காகிதத்தை கண்ணுலை பார்த்தாத்தான் பொழுதே விடியுது. அப்படி ஒருபழக்கம் ஏற்பட்டு இருக்குது.

விளம்பரத்துக்கு வருவோம். அரசு அலுவலகம் ஒன்றில் அலுவலர்கள் பயன்படுத்திய வாகனம் ஏலம் விடுவதாகவும், ஏலம் எடுக்க விரும்புவோர்கள் இன்ன தேதியில் இத்தனை மணிக்கு அலுவலகம் வந்து ரூ.5000 பிணையத் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம்...என்ற விளம்பர அறிவிப்பு. இதைப் பார்த்த எனக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் உடனே என்னை அழைத்து, ‘உங்களுக்கு இந்த அலுவலக நடைமுறை ஓரளவு தெரியுமே, நீங்கள் ஏலத்தன்று சென்று பிணைய தொகை கட்டி எப்படியாவது அந்த வாகனத்தை ஏலத்தில் இன்ன விலைக்கு தோதா வந்தா எடுத்து வாருங்கள்’ எனக்கூறினார்.
நானும் ஆகா!! நம்மையும் நம்பி இப்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாரே!! வேலை இல்லாதற்கு இது ஒரு நல்ல வேலைதான் என்று எண்ணிக் கொண்டு ஏலத்தன்று ஜம்மென்று புறப்பட்டேன்.

நம்ம பிரமுகரும் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தார்.

‘அய்யா வணக்கம். வண்டியை போயி பார்த்திர்களா?’

‘ஆமாங்க...நல்ல நெம்பர்.. இன்ன விலைக்கு வந்தா எடுக்கலாம்.. நம்ம வாகன ஓட்டியை அனுப்பி வண்டியை பார்த்து விட்டேன்’ என்றார். ‘இன்ன விலைக்கு வந்தா எடுங்க’ என தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி..தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பினார். துணைக்கு தொழில்நுட்ப பணியாளர் வாகன ஓட்டுனர். அலுவலகம் சென்றோம்.

நல்ல நேரம் பார்த்து முன் பிணைய தொகை ரூ.5000 செலுத்தி காத்திருந்தோம். ஏல நேரம் மதியம் மணி 3.00. சரியாக மணி 2.40. ஏலம் நடக்கும் அறை முன்பு கூட்டம் கூடியது. நாங்களும் சென்றோம். அப்போது ஒருவர் கூறினார்..EMT (முன் வைப்பு தொகை) செலுத்தியவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்..எனக்கூறினார். அப்போது தான் தெரிந்தது என்னையும் சேர்த்து 22 நபர்கள் EMT கட்டியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் கூறினார்...‘எல்லோரும் நல்லா கவனிங்க, ஏலம் கேட்டு கவர்மெண்டுக்கு வீணாக காசை கட்டுவதற்கு EMT கட்டியவர்களுக்கு ஆளுக்கு ரூ.1500 தருகிறேன் எல்லோரும் வாங்கி கொண்டு சென்று விடுங்கள்’ என்று.. நானும் கூறினேன்..நான் வேணும்ன்னா ஆளுக்கு ரூ. 1500 தருகிறேன் எனக்கூறினேன். அதில் இன்னொருவர் கூறினார் நான் ஆளுக்கு ரூ.2000ஆக தருகிறேன்... என்று. இதெல்லாம் முடியாது. ஏலமே கூறிக்கொள்ளலாம்..எனக்கூறிக்கொண்டு ஏல அரங்குக்குள் சென்றோம்.

அப்போது உடன்பிறப்பு சீருடையில் நானும் பணம் கட்டியுள்ளேன் என உடன்பிறப்பு வந்தார். ஆளுக்கு ரூ.2500 தருகிறேன் பேசாம வாங்கிட்டு நடையை கட்டுங்க..மீறி ஏலம் கூறினா..என்ன நடக்கும்.. அப்படிங்கிறதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் என அறிவித்தார். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு ரூ.2500 வாங்கி கொண்டு உடன்பிறப்பை தன் ‘உடன்பிறப்பா’ எண்ணி ‘வாழ்த்தி’ச் சென்றார்கள். நாம ஒரு கணக்கு போட்டோம். வாகனத்திற்கு அரசு விலை ரூ.37000.. அதனுடன் ரூ.1000 சேர்த்து ரூ.38 ஆயிரம் அலுவலகத்தில் செலுத்த வேண்டுமாம்.

உடன்பிறப்பையும் சேர்த்து 22 ல் ஒண்ணு போக 21க்கு தலா ரூ.2500..மொத்தம் ரூ.52500.. அலுவலகச் செலவு ரூ.10000 என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாம். அதையும் சேர்த்து 38+52500+10 ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஐநூறு. நம்ம இலக்கு மீறி போனதாலும், உடன்பிறப்பின் மேல் உள்ள பாசத்தினாலும் (பயம் என நினைத்து உடன்பிறப்பின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல) ரூ.2500 அன்புடன் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

அய்யா நம்ம கதையில் வந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே..உண்மையை தவிர வேறில்லை.. அரசின் மானம் மரியாதை கருதி அலுவகத்தின் பெயர் பதிய படவில்லை. கொள்முதல் ரூ.5000 லாபம் ரூ.2500.. அலுவலகத்தை பார்த்து நின்னு ஒரு ராயல் சல்யூட் அடித்து விட்டு வந்தேன். ரூ.5000 மூலதனத்தில் மூன்று மணிநேரத்தில் ரூ.2500 லாபம். நல்ல வேலையா இருக்குதுல்ல..

அடுத்து வாகன ஏலமின்னு பத்திரிக்கையில் வந்தா சொல்லி அனுப்புகிறேன். மறக்காம வாங்க..எல்லோரும் சேர்ந்து கவர்மெண்டை வாழ வைப்போம்ங்க..


Tuesday, July 27, 2010

சென்னைப்பட்டினம் வருகிறேன்ங்க...


அன்புக்குரிய சொந்தங்களே..வணக்கம்.

நான் எதிர்வரும் ஆகஸ்ட் ஒண்ணாம் தேதி சென்னைப்பட்டினம் வருகிறேன். நம்ம நண்பர் பொண்ணு பணியில் சேர்வதற்காக அவருக்கு துணையா இவரு..இவருக்கு துணையா நீங்க இருப்பீங்க என்ற நம்பிக்கையில். சென்னை எனது பார்வையில் எழுத வேண்டும் என்றால், இது வரை ஒருபத்து பதினைந்து தடவை வந்து சென்று இருக்கிறேன். சென்னை போகிறோம் என்று சொன்னாலே அப்படி ஒரு கிக்கில்ல ஏற்படுது. எப்ப எப்ப சென்னை போனோம்.. எதற்கு போனோம்.. முதன் முதலில் எப்ப போனோம்.. உயிரினும் மேலான உடன் பிறப்பே.. அப்படின்னு அன்பா அழைப்பதாக எண்ணி ஓடோடி வந்த ஞாபகமெல்லாம் வருது.

ஒவ்வொரு தடவையும் வரும்போது எங்களைப்போன்ற ஆட்களுக்கு கண்ணை கட்டி ஆற்றில் விட்ட மாதிரியல்ல இருக்கு. அதனால இணைய உறவுகள் வழி காட்டும் என்ற நம்பிக்கையில் வருகிறேன்.. எனது தொலை பேசி..9842087277.Monday, July 19, 2010

கெடாவெட்டு..வாங்க...

அருமைச் சுற்றங்களே..வணக்கம்...

போன மாதம் பதிவு போட்டது. பலருடைய பயனுள்ள பதிவுகளைப் படிக்கும் போது, நாம நம்ம சொந்த கதை, சோகக் கதைகளை எழுதி பலரின் பொன்னான நேரங்களை போக்க வேண்டாமே அப்படீன்னு தோணுது...நம்ம பக்கத்துக்கு வந்து படித்து.. மனசு கேட்காம போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்டு நேரத்தை செலவழிக்கிற நேரத்திலே ஒரு நல்ல பதிவை படிக்கலாம்..

அமெரிக்காவில் நடந்த தமிழ் விழாவை அழகா தொகுத்திருக்காரு நம்ம பழமை பேசி.. அதை பார்க்கலாம்.. நம்ம சீனா அய்யா தயவில் வலைச்சரத்திற்கு போனா வகை வகையா, விதவிதமா பகுத்து கொடுக்கிறார்கள் வார ஆசிரியர்கள். ஏதோ நம்ம அறிவுக்கு எட்டிய அளவில் எதோ படித்தமா..பின்னூட்டம் போட்டமா..அதையும் மதித்து பதில் வழங்கி இருக்கிறார்களா.. அதை பார்த்து காலத்தை ஓட்டாம... நினைச்சதை எல்லாம் எழுதி... பதிஞ்சிட்டு நானும் பதிவர் அப்படீன்னு பத்து பேர்கிட்ட சொல்லிட்டு திரிகிறது. அதனால.... ஒரு முடிவு எடுக்கோணும். ஒரு யோசனை பண்ணிச் சொல்லுங்க. இதுல நாம மட்டும் முடிவு எடுக்க முடியாதல்ல. சொந்த பந்தமான உங்களைக் கேட்டுத் தானே ஒரு முடிவு பண்ணோணும்.

பதிவு போடாம இருந்தா நம்ம பழனிச்சாமி அண்ணன் என்ன ஆனாரு? மாசத்திற்கு ஒரு தடவையாவது வந்து காமெடி பண்ணுவார்.. ஆளைக்காணாமே அப்படின்னு கதிர் தம்பி வானம்பாடி அய்யா கிட்ட கேட்க..அவர் கேரக்டர் அப்படின்னு நம்மை பத்தி எழுத..எதுக்கு வம்பு. லீவு போட்டாலும் சொல்ல வேணும்..கோயிலுக்கு போனாலும் சொல்ல வேணும்.. அப்படி ஒரு உறவுல்ல ஏற்பட்டு இருக்கு.

ஆமா.. செம்மொழி மாநாடு, அமெரிக்க தமிழ் விழா எல்லாம் பார்த்தீங்க... ஆளாளுக்கு தமிழை பிரித்து மேய்ந்ததை அதுதாங்க ஆய்வு செய்ததை கேட்டீங்க .. இப்போ நீங்க என்ன செய்கிறீர்கள்? வீட்டிலாவது தமிழ் முழக்கம் செய்கிறீர்களா? வீட்டில் மனைவிடம், குழந்தைகளிடம் தமிழில்தானா பேசுகிறீர்கள்?

நம்ம கதை இப்படி...போன வாரம் ஒரு முடிவோட எழுந்தேன்.. இன்னைக்கு ஒருநாளாவது தமிழில் பேசி பார்ப்போமே .. என் காதில் விழுந்த முதல் வார்த்தை ,

“மாமா குட்மார்னிங்...” அப்படின்னு நம்ம மைத்துனுர் பொண்ணு..

“ஏய்வாலு.. இங்கே வா..”

“ஏனுங்க..”

“ஆமா ஏன் காலை வணக்கமுன்னு அழகா சொல்ல கூடாதா? ” அப்படீன்னா...

“போங்க மாமா உங்களுக்கு வேற வேலை இல்லை..” அப்படீன்னு ஓடீவிட்டது.

அடுத்த தமிழ் மனைவிடம்.... ஏனுங்க உங்களுக்கு காபியா? டீ யா? என்ன சொல்லுவது என நானே குழம்பி விட்டேன்.. தாயே காபிக்கு தமிழில் குளம்பீ அப்படீன்னு சொல்லுவாங்க.. டீ.க்கு வடி நீர்.. என ஆரம்பித்தேன்.. காலையில் ஏங்க கழுத்தை அறுக்கறீங்க.. அப்படீங்கறாங்க.. என்ன சொல்லறதுன்னே புரியலை.?!! கிராமங்களில் ஆங்கிலம் அப்படீன்னா.. என்ன அப்படீன்னு கேட்கறாங்க.. இங்கிலீஸ்.. அப்படீன்னாத்தான் புரியுது....

எனது மகள் படித்தவள்.. அவளிடம் அம்மா உன் இருசக்கர வாகனம் எங்கே? எனக் கேட்டால்... என்னப்பா சொல்லறீங்க..? நாலு நாளும் செம்மொழி மாநாடு அப்படீன்னு டி்வி.. பெட்டி முன்னாலே உட்கார்ந்திருந்து உங்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு...அப்படிங்கீது... அதற்கு பின்பு.. டி்வி.. பஸ்.. செல்போன்.. சைக்கிள்.. கார்.. மிஸ்டு கால்.. மினி பஸ்.. பெட்.. மிக்ஸி.. நம்ம முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தலாமா? அப்படின்னு நினைச்சுட்டேன். செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்க்க பெரிதும் துணை நிற்பது வெள்ளித் திரையா? சின்னத் திரையா? அச்சுத் துறையா? என்ற பட்டி மன்றத்தில் நடுவர் தீர்ப்பைப் போல் முப்படைகளின் தாக்கத்தை மீறி தமிழை வளர்ப்பது அவ்வளவு சுலபமல்ல.. என்று எண்ணினாலும்.. இதை விடப்போவதில்லை

..ஏய்யா இந்த வயதில் உமக்கு வேண்டாத வேலை..அப்படிங்கறீங்களா? உன்னத்தான் பதிவர் அப்படின்னு பட்டம் கொடுத்து வைத்திருக்கிறோமே..பேசாம ஓய்வை ஓய்வா பயன் படுத்தாம.. காடு மேடு எல்லாம்... ‘ஹலோ’ சத்தம்..நேரில் கூப்பிறவங்க கூட ‘ஹலோ’ அப்படின்னுதான் பேசறாங்க. தமிழ் வார்த்தை கூட ஒரு ஆங்கில வார்த்தை (மிக்ஸ்) சாரி..மன்னிக்கவும்..கலந்தாத்தான் நல்லா இருக்குது. எப்படி தமிழை காப்பாற்ற போகிறீர்கள்?... ஒண்ணும் புரியலை.

முப்படையில் ஒருபடையான சின்னத்திரையில் பாட்டு கேட்க அவுங்க பேசற வார்த்தைகளும், இவுங்க பதில் சொல்லுவதும்.....என்ன பண்ணுவதுன்னே தெரியலை. இலவசம் போடாத ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தாத்தான் காரியம் நடக்கும் போல தெரியுது. கடிதம் எழுதி ஒண்ணும் ஆகப்போறதில்லை. எவ்வளவு காசை செலவு பண்ணி எத்துணை மாநாடு போட்டாலும் புண்ணியமில்லை..அதனால..நீங்கதான் சொல்ல வேணும்.. எனக்கு ஒரு கெடாவெட்டு அழைப்பு வந்துள்ளது...போக போறேன்.. நீங்களும் வாங்க.. என்ன நடக்குது அப்படின்னு பார்த்து ஒரு பதிவுக்கு வழி பண்ணுவோம்..

Wednesday, June 16, 2010

சினிமா..ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...

சினிமா..சினிமாவே பார்த்திராதவர் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதிசயமான கேள்விதான். எனது நண்பன் ஒருவன் இதுவரை ஒரு சினிமாக்கூட பார்த்ததில்லை. அவனுக்கு வயது 57. B.A.B.Ed., படித்துள்ளார். அது சரி..தண்ணி போடுவாரா? இல்லை.. சிகரெட்..புகையிலை.. வகைகள்..இல்லவே இல்லை.. கவுண்டமணி பாணியிலே கமெண்ட் கொடுக்கறீங்களா? கவலையே இல்லை. இப்படியும் சிலர் உங்களோடும் இருக்கத்தான் செய்வார்கள்.

நாம சினிமா ஞாயத்திற்கு வருவோம். சினிமாவைப்பற்றி யோசிப்போம். நம்ம வாழ்க்கையிலே இந்த சினிமாவை முதன் முதல் எப்ப பார்த்தோம். ஏதாவது நினைவு வருகிறதா? ஏதோ கொஞ்சம் ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவில்... (அப்பவெல்லாம்..மைல்தானுங்க.. அதற்கு பின்னாலதான் கிலோமீட்டர்..ஒ..உங்களுக்கு கி.மீ. ல சொன்னாத்தான் புரியும்..சரி.சரி..3.கி.மீ.) தொலைவிலுள்ள வசந்தா தியேட்டருதான் எனக்கு சினிமாவை காட்டியது. அது சரி..முதன் முதலில் யார் சினிமாவுக்கு கூட்டிச் சென்றார்கள்..படுத்துகிட்டே யோசித்து கண்டுபிடித்து விட்டோமல்ல. விவசாய தொழிலாளர்கள், பல்வினை கலைஞர்கள் அதிகமாக அன்றும் இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தில் ஒரு தச்சு தொழில் கலைஞர் தான் என்னை சினிமாவுக்கு முதன்முதலில் அழைத்துச் சென்றார். படம் என்ன? யாரோ இரண்டு பேர் தண்ணீருக்குள் சண்டை போடும் காட்சி மட்டும் உடனே ஞாபகத்திற்கு வருது.

எம்.ஜி.ஆர் முகம் மட்டும் டக்குன்னு தெரியுது. ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து விட்டோம்ல்ல. நான் பார்த்த முதல் படம் நல்லவன் வாழ்வான். இறுதி காட்சியில் எம்.ஜி.ஆர்க்கும் எம.ஆர். ராதாவுக்கும் தண்ணீர்க்குள் ஃபைட் நடக்கும்.... ஃபைட்டுன்னு சொன்னாத்தான் ஒரு எபக்ட் கிடைக்குதுல்ல. நாங்க அப்ப இருந்துல்ல தமிழை வளர்த்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லாததால் எங்களிடம் பேசினார்கள். நாங்கள் அறை குறை படிப்பு..உங்களிடம் பேசி சொல்லி கொடுத்தோம். நீங்க அப்படியா? நல்ல தமிழை உங்க குழந்தையுடன் பேசிப்பாருங்கள்..தமிழ்தானே வளரும்... கிழவன் சொன்னா கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா? (பழமொழிக்கு தனி கதை இருக்கு...)

உங்க குழந்தை மம்மீ..டாடீன்னு சொல்ல வைத்து அழகுபார்க்கிறவங்களாச்சே நீங்கள்..எங்க காலத்திலே அப்பான்னு கூட சொன்னதில்லை. ‘அய்யன்’னு சொல்ல சொல்லுவாங்க. இன்றும் எங்க அய்யன் அப்படின்னுதான் சொல்ல வருதுங்க. என் குழந்தையிடம் அப்பான்னு சொல்லுன்னா சொல்லமாட்டுது. நர்சரியில் டாடீன்னு சொல்லி கொடுத்து அப்பான்னா கேலியா தெரியுற அளவுக்கு ஆயிடுச்சி. ஆரம்பத்திலேயே திருத்தாதது எங்க தப்புதான். ஆனா நீங்க மெத்த படித்தவங்களாச்சே. நாங்க செய்த தப்பையே நீங்களும் செய்திட வேண்டாம். இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.

கிராமத்தில் ஆரம்பத்தில் எல்.டீ பேங்க் அப்படீன்னாத்தான் தெரியும். நில வள வங்கி அப்படீன்னு அரசு பெயர் மாற்றிய போது சங்கடமாத்தான் இருந்தது. இப்ப எல்.டீ பேங்க்ன்னா என்னன்னே தெரியாது. ஆரம்பத்தில் அரசும் பெயர்களை மாற்றி தமிழை வளர்க்க பார்த்தது. ஆனால் வீட்டில் தமிழை வளர்க்க மறந்து நர்சரி பள்ளிகளிடம் தமிழை வளர்க்க விட்டுவிட்டது. அதனால்தான் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றியும் நாம் பஸ் ஸ்டேண்டுலேயே நிற்கிறோம். சினிமாவிலே ஆரம்பித்து சினிமா தமிழை வளர்க்க பயன்படுது. நல்லதுதானே.

விபரம் தெரிந்த பின்பு பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? என சுயநலமில்லாவரின் தமிழ் வரிகளுக்காக தேடி ஓடிஓடி சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று சுயநலத்துடன் கூடிய தமிழ்வரிகள் பெண் சிங்கமாக தோற்குது. அந்த கரகரத்த குரலில்..பூம்புகார்..இதுதான் இன்றைய பூம்புகார்...காவேரி புகும் பட்டிணம் எத்தனையோ ..என ஆரம்பித்த வரிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்து பாராட்டு வாங்குவேன்..ஆனால்.. வேண்டாங்க விடுங்க......

எங்களுரிலிருந்து நானும் சில நண்பர்களும் மிதிவண்டியில் பழனி சென்று ஒரே நாளில் நான்கு சினிமா பார்த்தோம். காலை பத்து மணி நான் ஆணையிட்டால், மதியம் மோட்டார் சுந்தரம்பிள்ளை, இரவு முதல் காட்சி அன்பே வா, அடுத்து இரவுக்காட்சி சித்தி..பார்த்து 35 கி.மீ திரும்பி வந்து காலையிலே நல்ல குடி நாச்சி மாதரி பள்ளிக்கு சென்று விடுவோம். எங்க காலத்திலே வந்த சினிமாக்களை நினைத்தாலே இன்னைக்கும் இனிக்குதே. பாசமலர்,பாகப்பிரிவினை,படிக்காத மேதை..போன்ற சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த ப வரிசை திரைப்படங்கள், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத்தட்டாதே, தாலிபாக்கியம் என எம்.ஜி. ஆரின் தா வரிசை திரைப்படங்கள், நெஞ்சில் ஒரு ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, பஞ்சவர்ணக்கிளி போன்ற நெஞ்சை தொட்ட திரைப்படங்கள் , திருவிளையாடல்,கந்தன் கருணை என A.P. நாகராஐன் அவர்களின் தேன் தமிழ் நடையில் வெளிவந்த பக்தியுடன் கூடிய படங்கள் எல்லாமே எங்க காலத்தில் வெளி வந்தவைகள்தான்..எல்லா படத்திலும் எல்லா பாட்டும் இன்னைக்கும் என்னைக்கும் மனசிலே நிற்குமே.

ஆயிரத்தில் ஒருவனா? எங்க வீடடுபிள்ளையா? எங்கள் தங்கமா? எம்.ஜி.ஆரின் படமென்றால் முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் பார்த்தால்தான் பசியே தீரும். அதுவும் எங்கள் ஊரில் நான் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற பொருளாளர் ஆயிற்றே. பூந்து விளையாடி இருக்கோம்ல்ல. கொட்டும் முழக்கோடு ஊர்வலமா சென்று கொடி கட்டி இனிப்பு வழங்கி பேனர் கட்டி பார்த்து ரசித்திருப்போம். படத்தில் எல்லோரும் நடிப்பார்கள்..இப்போ எல்லோரும் துடிக்கிறார்கள். நீங்க சுறாவை பார்த்திட்டு வந்த கடுப்பில் இருப்பீர்கள்.. நான்வேற கடுப்பை ஏற்றி விட்டால் எக்கு தப்பா ஏதாவது ஆகிப்போச்சுன்னா? மே .18.க்கு பின்னால மனது இருகி போய்கிடக்கிறோம்..என்ன நடந்தாலும் ஒண்ணும் ஆகாது..அப்படிங்கிறீங்களா? அதுவும் உண்மைதான்.. நான் வரட்டுங்களா......


Monday, May 24, 2010

வாங்க காற்று வாங்கலாம்..வாங்க காற்று வாங்கலாம்.. வெய்யிலிலிருந்து விடுதலை. எங்க ஊரில் காற்று சித்திரையில் சீர் பூட்டி விடும். ஜுன், ஜுலை மாதங்களில் எங்க ஊருப்பக்கம் வந்து பாருங்க. வந்து பார்த்தவங்களுக்கு தெரியும். அடிக்கின்ற காற்றில் அம்மியே பறக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும் சூறைக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சொய்...சொய்வென இறைச்சலுடன் காற்று வீசும் அழகே தனி. காடு மேடெல்லாம் புழுதி பறக்கும். வீட்டுக்குள்ளே மண்ணை கூட்டி மாளாது. பாழாய் போன காத்து என இயற்கையை நொந்தபடி வீட்டை கூட்டுவார்கள் எங்க வீட்டு அரசிகள். அடிக்கின்ற காற்றை அதிசியமாக பார்ப்பார்கள் புதிதாக இந்த பக்கம் வருகிறவர்கள். பழனியை பார்க்க வருகிறவர்கள் எங்க ஊரு வழியாகத்தானே போகணும். அது ஒண்ணுதான் எங்க ஊருக்கு பெருமை.. அப்புறம் காற்று.. காத்துன்னுதான் சொல்லி பழக்கம்.

பாலக்காட்டு கணவாய் இடைவெளியில் எங்கஊரு வருவதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பல்லடம், உடுமலைப்பேட்டை, பழனி, தாராபுரம், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் என ஒருரவுண்டு கட்டி காற்று வீசும். மணல் மழை பொழியறதை நேரில் பார்க்கலாம். இன்னும் பார்த்ததில்லையா? அப்ப கண்டிப்பாக ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் எங்க ஊருபக்கம் வாங்க.. வந்து அடிக்கிற காத்தில கொஞ்ச நேரம்நின்னு பாருங்க. உங்க தலையிலேயே நல்ல மணலை கொண்டு செல்லலாம். பத்து பேரு வந்தீங்கன்னா ஒரு அறை லோடு மணலை கடத்தி விடலாம். அது சரி.. எதையோ சொல்ல வந்து காற்று திசைமாற்றி விட்டது. அக்பர் வரை எல்லோரும் சேட்டையில் விளையாட ஆரம்பித்து விட்டதால் நாமும் கொஞ்சம்..

எதிர் வரும் வாரம் கல்யாண வாரம்.. பகுத்தறியா பதர்கள் நேரம் காலத்தை பகுத்து.. மூகூர்த்த நாள் இதுன்னு குறித்து வைத்து விடுகிறார்களா? எல்லாநாளும் நல்ல நாளே என்ற நினைப்பு மாறி மூகூர்த்த நாள் எதுன்னு பார்த்து ஒரே நாளில் எல்லோரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை வைத்து விடுகிறார்கள்...அதனால் நமக்கில்ல கண்ணுமுழி பிதுங்குது. ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது. எல்லாமே நெருங்கிய சுற்றமும் நட்பும். எங்க போறது என்ன பண்ணுவது ஒண்ணும் தெரியமாடீங்கிது. கோயமுத்தூரில் ஒண்ணு பொள்ளாச்சியில இன்னொன்னு உடுமலையில் மற்றொன்று பழனியிலும் ஒண்ணு.. உள்ளூரில் ஆறு.... ஏ..அப்பா.. போயி தலையை கூட காட்ட முடியாது போல இருக்குதே.. பஞ்சா பறக்க வேண்டியதுதான்.. எங்க போயி மணமக்களை வாழ்த்துவது...

எதை எதையோ புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்க.. இதுக்கு ஒரு மாற்று உட்கார்ந்து யோசிக்க மாட்டேங்கிறாங்களே. என்னமோ நெனச்சேன்...பதிவும் போட்டுட்டேன்.பதில் போடுங்க...
Thursday, May 6, 2010

மர ஆசை..அன்பிற்குரியவர்களே..வணக்கம்,

நண்பர் பனித்துளி சங்கர் அவர்கள் இயற்கையை அழிப்பதால் ஏற்படப்போகும் பேராபத்தை அறிய அறிவியல் பூர்வமான பதிவை வழங்கியுள்ளார். அவருக்கு எனது பாராட்டை பதிவு செய்தவுடன் ..கனமான மனதுடன் அவர் பதிவில் வேண்டியபடி இது குறித்து தொடர் பதிவில் என் மனதில் தோன்றுவதை எழுதுகிறேன்.

கிராமங்களில் இன்னும் பலர் பல் துலக்க பல்குச்சித்தான் பயன் படுத்தி வருகிறார்கள். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... வேப்பங்குச்சி, வேலங்குச்சி போன்ற குச்சிகளை மரத்திலிருந்து ஒடித்து பயன்படுத்துவார்கள். நானும் ஒரு சில சமயங்களில் வேப்பங்குச்சியை பயன்படுத்துவேன். அதன் மிதமான கசப்பும், வேலங்குச்சியின் துவர்ப்பும் சுகமான அனுபவம்தான். நண்பரின் பதிவை படித்தவுடன் இனிமேல் பல் துலக்க கூட பல் குச்சியை ஒடிக்க மாட்டேன் என என் கருத்தை பதிவு செய்தேன்.மீண்டும் யோசித்தேன்..சென்ற வாரம் உறவினர் ஒருவர் கட்டும் புதுவீட்டுக்கு மரம் வாங்க என்னையும் கூட்டிப்போனார். எல்லா மரக்கடையும் ஏறி இறங்கியும் அவர் விருப்பப்பட்ட படி மரம் கிடைக்கவில்லை. மரக்கடையில் அவர் சொன்னார்.. என்ன விலையானாலும் பரவாயில்லை.. நல்ல விளைந்த மரமா இருக்கு வேண்டும். இவ்வளவு மரம் வேண்டும்.. என மர வியாபாரியிடம் ஆசையை சொல்லிவிட்டார். இனி என்ன நடக்க போகிறது..மரவியாபாரி தான் மரம் வாங்கும் இடத்தில் தன் வியாபார திறமையை காட்டுவார். அவருக்கு மரம் தருபவர்கள் தன் கை வரிசையை இயற்கையிடம் காட்டத்தான் போகிறார்கள்.. நமது தேவைகளுக்கு எந்த எந்த மரங்கள் உயிர் விடப் போகிறதோ.. ??நமக்கு வேண்டியது நம்ம வீட்டுக்கு தேக்கு மரத்திலே கதவு...ஐன்னல்கள்...மரப்பீரோ..மரக்கட்டில்..மரவேளைப்பாடுகளுடன் கூடிய சமையல் அறைகள் ...இன்னும்பிற...பிற.. எப்படி அழிக்கப்படாமல் இருக்கும் காடுகள்... முதலில் இதை நிறுத்த சொல்லுவோம்..மரம் வாங்கவே ஆளில்லை என்ற நிலை வரும் போது எவனாவது மரத்தை வெட்டி காட்டை அழிப்பானா? இதுக்காகவும் காட்டை அழிக்கிறாங்கல்ல... மரஆசையை விடுங்க மகாராஜாக்களே... ஏதோ எனக்கு தெரிந்தது. கருத்துப்பிழை, எழுத்து ப்பிழை.. இருந்தால்...(இருக்கும்...) சுட்டி காட்டுங்கோ.. கொட்டி காட்டாதீங்க..

(நன்றி பனித்துளி சங்கர்.)


Thursday, April 29, 2010

பசுமை நிறைந்த நினைவுகள்...

சின்ன வயசிலே கேட்ட கதை. எங்கிட்ட யாரும் கதை கேட்கவில்லை என்றாலும் பதிவுகளில் சின்ன வயதுகளில் கேட்ட கதைகளை படிக்கும் போது அடடே இப்படி நம்ம கிட்ட என்ன கதை இருக்குதுன்னு நெனைக்க தோணுதுல்ல.. நினைத்ததை எழுதுவோமில்ல... நினைச்சதை எல்லாம் எழுதி அதைப் பத்து பேர் படித்து என்ன சொல்லறாங்க..? அப்படின்னு பார்க்கிறதில்ல ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுதுங்க. எப்படியோ பொழுதை ஒட்டினா சரிதான் என்னைப்போல உள்ளவங்களுக்கு...ஆனால் உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பலர் நினைத்தால் படைக்கலாம்...படைப்பார்களா? என பார்க்கத்தானே போகிறோம்..கதைக்கு வருவோம்.


ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது படிக்கும் காலம்தான் நம்ம பசங்க வாழ்க்கையில் சுகமான காலம். கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவு மற்றும் முழுப்பரீட்சை லீவு இந்த மூன்று லீவுகள் வந்தால் போதும் பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அந்த கடைசிப் பரீட்சை எழுதி, வீடு திரும்பும் போது இருந்த மகிழ்ச்சி இன்று வரை இல்லை. அந்த நாட்களை நினைக்க வைத்தவர்களுக்கு மீண்டும் நன்றி. லீவு விட்டவுடனே பெரியம்மா ஊரு, அக்காஊரு...என ஊர்களுக்கு போக ரகளை பண்ணி அன்றே கிளம்பி விடுவோம்.

முதலில் பெரியம்மா வீடு. அங்கதான் தோட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அப்புறம் பெரியம்மா சொல்லுகிற கதைகள்.. ஆகா..லீவு போறதே தெரியாதே. ஊருக்கு போன மறுநாளே பெரியம்மா வீட்டு அண்ணாக்களுடன் தோட்டத்திற்கு புறப்பட்டு விடுவோம். தோட்டத்திற்கு போன வுடனே முதலில் தேடுவது அண்ணாக்களின் அன்றைய ஒரே பொழுது போக்கு...அந்த கால சினிமா பாட்டு புத்தகங்கள். அண்ணாக்கள் சினிமா புத்தகங்களை சேகரித்து அதை ஓலைகளில் சொருகி வைத்து இருப்பார்கள். அதை தேடித்தேடி எடுத்துப் படித்து மனப்பாடம் செய்து கொள்வோம். அப்ப பச்சுன்னு மனசுலே ஒட்டுனதுதான் இன்னுமும் துடைக்க முடியலை.மாடுகள் மேய்க்க சின்ன அண்ணாவுடன் மேற்கே கொறங்காடு (சுற்றிலும் அடைப்புள்ள காடு) கிளம்பி விடுவோம். அந்த காட்டில் அந்த வெலா மரத்து நிழல்.. புள்ளை பூச்சி பிடித்து விளையாட சின்ன அண்ணா செய்யும் டெக்னிக். .அந்த காலத்திலே கொறங்காட்டுக்குள்ளே மறைவான இடங்களில் பதித்து வைத்திருக்கும் சாராய ஊறல்கள்... மண்தாழியை மண்ணுக்குள் சுமார் ஆறடி ஆழத்தில் பதித்து வைத்து .. அதற்குள் பழங்கள்.. விலாம்பட்டை..அய்யோ அவ்வளவுதான் எனக்கு தெரியும்சாமி... என்ன என்னமோ சொல்லுவாங்க.. நான் பார்த்ததில்லை.. அதையெல்லாம் போட்டு ஊறல் போட்டிருப்பாங்க..அந்த இடத்தை யாரு கண்ணுக்கும் தெரியாம அவ்வளவு டெக்னிக்கலா மூடி வைத்துதிருப்பாங்க. எங்க சின்ன அண்ணா கில்லாடியல்ல. அதை கண்டு பிடித்து .. தோண்டி மூடு கல்லை எடுத்து என்னை கூப்பிட்டு காட்டுவாரு.. அப்ப எங்க சின்ன அண்ணன் எனக்கு எம்.ஜி.ஆரா தெரிஞ்சாரு. இன்னைக்கு வரைக்கும்தான்.

அப்ப அடித்தது பாருங்க ஓருவாடை ..அய்யோ ..இப்போ நெனைத்தாலும் விடமாட்டீங்குது. நாங்க இந்த வேலையில் இருக்க மாடுகள் கொறையை விட்டு கொறை தாவி அடுத்த தோட்டத்து வெள்ளாமையில் புகுந்து விடும். தோட்டத்துகாரர் பார்த்து எங்களை துரத்தினா...நாங்க எடுத்தா ஓட்டம்...எழுத எழுத எல்லாம் ஞாபகம் வருதுங்கோ. எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. புலி வாலை பிடித்த கதையா இருக்குதே. எது எது ஞாபகம் வருதோ அதெ எல்லாம் எழுதி போடறதுங்கிற முடிவோட உட்காந்தாச்சுங்கோ.

மாலையில் வீடு திரும்பும் போது எருமை மாட்டு மேல என்னை உட்கார வைத்து வீட்டுக்கு கூட்டி வருவார் சின்ன அண்ணா. இரவு நிலா வெளிச்சத்தில் உணவு. எல்லோரும் ஒன்றாக அமர்ந்தவுடன் பெரியம்மா உருண்டை பிடித்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்து உண்ணும் அழகை பார்த்திருப்பாங்க...அப்புறம் விளையாட்டு.. படுக்க பத்து பதினொரு மணி ஆகிவிடும். அப்போது ஆளுக்கு ஒரு கதைசொல்ல வேண்டும். எல்லோரும் கதை சொன்னார்கள் ...கேட்டேன்..நானும் கதை சொன்னேன். எதுவுமே ஞாபகமில்லை.ஆனால் எங்க பெரியம்மா சொன்ன திருவாத்தான் கதை மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. அது சரி...பள்ளிக்கூடங்கள்தான் லீவு விட்டாச்சே..உங்கள் செல்வங்களை பெரியம்மா சின்னம்மா ஊருக்கு அனுப்பிச்சாச்சா? இந்த காலத்திலே அங்கே போனாலும் நம்ம செல்வங்கள் மட்டையும் கையுமாவுள்ள இருக்கறாங்க. கிராமங்களில் வேகாத வெய்யில் காடுமேடு எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டாவுள்ள இருக்குது.
அந்த காலத்திலே வெளியவே விடமாட்டாங்க. பகலில் அக்காக்களுடன் புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. நல்ல உடல் பயிற்சியான விளையாட்டு. உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க இத்துடன் முடித்துக்கொள்கிறேன். திருவாத்தான் கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி..வணக்கம்.
Tuesday, April 13, 2010

வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?“வணக்கம்ங்க..வாங்க .அடையாளம் தெரியுதுங்களா?”

“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது.. சட்டுன்னு ஞாபகம் வர மாட்டீங்கிது.”

“சார் நான் தாரா... ”

“ஓ..இப்ப ஞாபகம் வந்திருச்சு..ரொம்ப சந்தோசம்..எப்ப வந்தீங்க? காப்பி சாப்பிடுறீங்களா? ”

“இப்பதாங்க... அய்யோ காப்பி வேண்டாங்க.. கொடுமையான வெயில் மோரு கீறு இருந்தா கொடுங்க...

“கீறு இல்லை..கூல்டீரிங்ஸ் ஏதாவது சாப்பிடரீங்களா?

“எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..அது மட்டும் வேண்டாங்க. சில்லுன்னு ஓரு டம்ளர் தண்ணி கொடுங்க..

“எது வேணும்னாலும் கேளுங்க தண்ணி மட்டும் கேட்காதீங்க.. தண்ணீர் சிக்கனம் பற்றிய பதிவுகளை படிக்கரீங்களா?

“.....ரொம்ப செளரியமாக போச்சு.. நீங்களே வந்துட்டீங்க விசயத்திற்கு....

“சரி..சரி..ஈரோடு எப்ப வந்தீங்க?.. உங்க ஊரு வெயில் எப்படி?

“என்ன இருந்தாலும் எங்க ஊரைப்போல் வருமா?....வெயில் பொறுக்க முடியாமத்தான் தண்ணீர், மரம் என பதிவுகள் போட வேண்டியதாகிப் போச்சு.

என் உறவினர் ஒருவர் கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டு கொல்லம் பாளையத்தில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்தேன். நண்பகல் நேரம்.... வீராசாமி அண்ணன் தயவுல மூன்று மணிக்குத்தான் கரண்டு வருமாம். வெயிலின் தாக்கம் தாங்க முடியாம வீட்டுக்கு வெளியே சைடு ரோட்டில் புங்க மரத்தடியில் நிக்க வேண்டியதாப் போச்சு. அப்போது நண்பகல் 1.30. தீடிரென எனது காலுக்கு கீழே சொய்ய்ய்ய்ய்.....என்ற சத்தத்துடன் தண்ணீர் பீரிட்டு கிளம்பி காவேரிக்கு போட்டியா ஒடி சாக்கடையில் கலக்குது.

“என்னடா அது ...பெரியார் பிறந்த மண்ணுலை அதிசியம்...வால்பையன் தம்பிக்கு தெரிந்தால் என்ன ஆகும்” என யோசித்து கொண்டே அருகில் இருந்த என் உறவினரிடம் கேட்டேன்... “என்னுங்க இது ?” என்று..

“வேறொன்றுமில்லைங்க..இப்பத்தான் (மா)நகராட்சியிலருந்து தண்ணீர் முறை வைத்து விட்டிருக்காங்க. ஏதோ பைப் லைன் உடைந்துவிட்டது போல உள்ளது. அதுதான் தண்ணீர் வருது..” என கூறினார்.

சமீபத்தில் ஈரோடு பதிவர்களின் பதிவுகளை படித்த நமக்கு கண்ணீர் இல்ல வருது....

உடனே நான் ஆராயிச்சியில் இறங்கினேன். “ஈராட்டில் யார் ஆட்சி? எத்தனை நாளா இப்படி தண்ணீர் வீணாகுது? இதை ஏன் சமூக அக்கரையுள்ள யாரும் உரிய அதிகார அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வில்லை?” என எனக்குள்ளேயே நினைத்து கொண்டு ....

“இந்த இடத்திற்கு என்ன பேறுங்க?” எனக் கேட்டேன்.

“காசி பாளையம் , கொல்லம் பாளையம்..” எனக்கூறினார்..

பைபாஸ்லிருந்து நேரா வந்தா முதல் லெப்ட் கட்... சில அடிதூரத்தில் பெரிய காட்டுத்தோட்டம் என்ற பெயர் பலகை ரைட் சைடில் உள்ளது. ஈரோட்டில் தண்ணீர் வீணாவதை பார்த்த போது நம்ம ‘கதிர்’கள் உள்ள ஊரில்.....

“போனை போடலாமா” என யோசித்தேன்.. நேற்று மரம் வளர்க்கும் மாமனிதர்களை அறிமுகப்படுத்திய நிழலில் இளைப்பாறும் அவரை ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இரவு முழுவதும் வீரிட்டு கிளம்பி வெளியே வந்து சாக்கடையில் கலக்கும் தண்ணீரின் ஞாபகம். காலையில் முதல் பார்வையில் கண்ணில் பட்டதும் தமிழ்மணத்தில் வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை கோடியில் இருவர்.

“என்ன ஆனாலும் சரி அவரு இ..மெயிலுக்கு நம்ம கருத்தை அனுப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்த பின்... தீடிரென ஒரு யோசனை...நாமத்தான் பதிவு போட்டு பத்து நாளாச்சே.. இதையே நீட்டி முழங்கி கணக்கில் ஒண்ணு சேர்திட்ட மாதிரியும் ஆச்சு.... உடனே ஈரோட்டுக்கு கதிர் அவர்களை பார்க்க புறப்பட்டு விட்டேன். ஈரோடு வாழ் பதிவர்கள் தெரிந்து அக்கரையுள்ள ஒருவர் என்னைப் போல் அறைகுறையாக இல்லாமல் நிறைகுடமாக மாற ஆசையுடன்.........வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?


Friday, April 2, 2010

பொண்ணு பார்த்த கதை...

பொண்ணு பார்த்த கதை... ஒண்ணு நம்மகிட்டவும் இருக்குதில்ல...

ஆனா இது நம்ம கதை இல்ல. பொண்ணு பார்த்து கல்யாணம் கடடிக்கிற பாக்கியமெல்லாம் நமக்கு இல்லாம போச்சு. சின்ன வயசிலிருந்து பார்த்துகிட்டே இருந்த பொண்ணை காலம் முழுவதும் பார்த்துக்கோ அப்படீன்னு நம்ம கையிலே பிடித்து கொடுத்திட்டாங்க... இதனால்தான் வாழ்க்கையே தடம் மாறிப்போச்சு. என் வீட்டுக்காரிய வலுக்கட்டாயமா நான் கூட்டிக்கிட்டு போன ஒரே சினிமா முந்தானை முடிச்சு. அன்னைக்கு அது சொல்லுச்சு... இந்த வேளையெல்லாம் இன்னையோட விட்டுறுங்க..அப்படின்னு. அன்னைக்கு விட்டவன்தான்....அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் குடும்பம் ..குடும்பம் சார்ந்த உறவுகள்..குழந்தைகள் நலன்....அதனால் தான் அய்யா ஜாலியாக காலம் தள்ள முடிந்தது. இல்லையின்னா ஐம்பத்தெட்டு வயசுல்ல பொண்ணு பார்த்த கதை எழுத முடியுமா? கதைக்கு உதவாதது எதற்கு...நம்ம கதைக்கு வருவோம்.

எங்க ஊரில் எனது பெரியப்பா குடும்பம் மணியகாரர் குடும்பம். அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை. நான்கு பெண்கள் மட்டுமே. மூத்த அக்காவுக்கும் அடுத்த அக்காவுக்கும் ஒரே சமயத்தில் மாப்பிள்ளைகள் பார்த்து திருமணம் நிச்சியக்கப்பட்டது. சின்ன அக்காவுக்கு உறவுக்குள்ளேயே ஒரு மாப்பிள்ளை . பெரிய அக்காவுக்குத்தான் அசலூர் மாப்பிள்ளை. பெரியவர்களா பார்த்து முடிவு செய்து விடுவார்கள். பெண் பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயத்திற்கு முன்பு தனது சாமர்த்தியத்தை உபயோகப்படுத்தி மாப்பிள்ளை பெண்ணை பார்த்தால் தான் உண்டு. நிச்சியத்தன்று கூட மாப்பிள்ளை வர மாட்டார். மாப்பிள்ளையும் பெண்ணையும் கருத்து கேட்கின்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் மாப்பிள்ளைகள் தங்கள் வீர தீர செயல்களின் மூலம் பெண்ணை பார்த்து விடுவார்கள். அந்த காலத்தில் கிராமப்புறங்களில் ஒருசில குடும்ப பெண்கள் வீட்டை விட்டு வெளியேயும் வர மாட்டார்கள். எப்படி பெண்ணை பார்ப்பது??... எங்க மாப்பிள்ளை கதை இப்படி......

பகல் நேரங்களில் தங்களது வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தோழியர் சூழ விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவிகளுக்கு எங்களைப்போன்ற தம்பிகள். அதுபோன்ற ஒரு நாளில் வீதியில் சேலை வியாபாரி ஒருவர் சேலை சேலை என கூவி விற்று கொண்டு சென்றார். கல்யாணப் பெண்களுக்கு சேலை வாங்க வேண்டும் என்ற ஆசை. அக்கம்பக்கத்து பெரிசுகள் விடுதா... என்னை அழைத்து...டேய் அப்பா..கூப்பிடடா சேலை வியாபாரியை எனச்சொல்ல நான் அதற்காகவே காத்திருந்தவன் போல...டூர்ர்ர்ர்ர்ர்...என ஓடி சேலை வியாபாரியை பிடித்து வந்தேன். அவரும் எந்த தெருவுக்கும் போகாமல் எங்க வீதியையே சுற்றி சுற்றி வந்தார். பவ்வியமாக வந்த அவரும் சேலைக்கட்டை கீழே இறக்கி வைத்து நல்ல கைதேர்ந்த சேலை வியாபாரி போல் சேலைகளை எடுத்து வைத்தாரு. சேலைகளை எடுத்து பார்த்த பெரிசுகளும் அக்காகளும்.. பிடித்த சேலைகளுக்கு விலையை கேட்க.... விலை என்னுங்க விலை... எதுபிடிக்கிறதோ அதை எடுத்துங்கோ ..என அவர் அன்பை அள்ளி விட.. அது தான் சமயம் என்று அடிமாட்டு விலைக்கு அக்காக்கள் கேட்க.. அவர் மறுப்பது போல் நடிக்க ..சேலை வியாபாரம் கேலியும் கிண்டலுமாக கலைகட்டியது. கடைசியில் அக்காக்கள் கேட்ட விலைக்கே இரண்டு சேலைகளை கொடுத்து விட்டார். சேலை வியாபாரிக்கு மோர் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

அதற்கு பின்பு நிச்சியம் முடிந்து முகூர்த்த நாளும் நெருங்கியது. கல்யாண வீடும் கலைகட்டியது. பந்தல், தோரணம், மேளம், தாளம்.... மாப்பிள்ளை குதிரை மேல் வருதல் என்ற சிறப்பு சீர் வரிசை.... மின் விளக்குகள் எட்டி பார்க்காத அந்த நாளில் ஏகாளி தீ பந்தம் பிடிக்க அந்த ஒளியில் தான் மாப்பிள்ளை அழைப்பு...மாப்பிள்ளையை யாரும் சரியாக பார்க்க முடியவில்லை. நம்ம வீட்டுக்கு வருகின்ற மாப்பிள்ளை தானே காலையில் நல்லா பார்த்துகிட்டாபோச்சுன்னு இருந்திட்டேன்....

அதிகாலையில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து நிற்க சுப மூகூர்த்தம். வலுக்கட்டாயமா என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி புது சட்டையெல்லாம் போட்டு மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அய்யா அப்பத்தான் மாப்பிள்ளையை நல்லா பார்த்தேன். பார்த்த உடனே .. மாப்பிள்ளை என்னை பார்த்து மொரைத்தார் . நான் மாப்பிள்ளையை பார்த்து போட்டு உடனே.. அக்கா.. மாப்பிள்ளை அன்னைக்கு வந்த சேலை வியாபாரி அக்கா..என ஒரே கத்து. அருகில் இருந்த மாப்பிள்ளை நண்பர் ஒருவர் என் வாயை பொத்தி அப்படியே அலேக்கா தூக்கிட்டு போயே போயிட்டாரு.

அதற்கு பின்பு மச்சான் தன் சாமர்த்தியத்தை சொல்லிச் சொல்லி மாப்பிள்ளை உறவை மணக்கச் செய்தது மறக்கவே முடியாத நினைவுதானே. அதற்கு பின்பு அந்த மச்சான் மேல் உறவுகள் கேலி செய்து விளையாடிய, மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் எழுதிப் புரிய வைக்க முடியாது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடை பெற்ற இந்த நிகழ்வை நினைக்க செய்த பொண்ணு பார்த்த கதை சொன்ன .....ராணிக்கு நன்றி.


Tuesday, March 23, 2010

திக்கு முக்கு..திருமண விருந்து...

திருமண விருந்துகளில் திணறியிருக்கிறீர்களா? தலை வாழை இலை போட்டு அழகா மேல் பகுதியில் உப்பு, இனிப்பு, கரிப்பு, துவர்ப்பு, புளிப்பு என உணவு வகைகளை வரிசை கட்டி வைத்து அதை போட்டோ வேற எடுத்து அழகு பார்த்திருப்பார்கள்.

கல்யாணத்திற்கு சென்ற நாமோ சகல வியாதிகளுடன் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். ஐம்பதை தாண்டிய எங்களை சொல்லிக்கிறோம். இலையை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊரும். எல்லா வகையிலையும் தொட்டு டேஸ்ட் பார்த்திட்டு ...நல்லா இருக்குதில்ல.. என பக்கத்து இலைகாரரிடம் பாராட்டி விட்டு வெளியே வந்தா அங்கே ஐஸ்கிரீம், பழம், காப்பி, டீ என இன்னொரு வரிசை... எதையும் விட மனமில்லாமல் அதைக்கொஞ்சம், இதைக்கொஞ்சம் வாயை நனைச்சுட்டு பீடாவோட வெளியே வந்து, சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்து மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக என்ன குறை, என்ன நிறை என படடிலிடுகிறோம். விருந்தில் உணவு வகைகளின் ருசிகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்குது. அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கு அவர் சொல்கிற அயிட்டத்தை நாம் தொட்டுகூட பார்க்காமல் விட்டு வி்ட்டோமோ? எப்படி நம்மகிட்டயிருந்து தப்புச்சு? மனசுலே ஒரு அங்கலாப்பு.


இங்கு சாப்பிட்டு விட்டு செல்கிறவர்களின் மனத்தில் நம்ம வீட்டு விசேடத்தில் இதைவிட அயிட்டங்களை போட்டு அசத்த வேண்டும்... என போட்டி வேறு. யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம். யாரும் இதற்கு வெட்கப்படுவதாக தெரிவதில்லை. இதுஒரு முடிவுக்கு வரவும் போவதில்லை. அரசும் கண்டுக்க போவதில்லை. வேறுஎன்ன செய்ய? நம்ம வீட்டு விசேடத்திலும் தூள் கிளப்ப வேண்டியது தான்.

எதையோ சொல்ல நினைத்து சாப்பாட்டில் புகுந்தாச்சு....கல்யாண வீடு மாதிரி ஆகிகிட்டு வருது பதிவுலகம். என்ன பாக்கறீங்க. காலையிலை தமிழ் மணத்தை பார்த்தா அறுசுவை படைத்து கல்யாண வீடா காட்சியளிக்கிறது. நம்ம போல ஆட்களுக்கு எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்...நேரம்.. காலம்... வேண்டுமே. ஏதோ நம்மால் முடிந்த அளவு படித்து ஒட்டையும் போட்டு, பின்னூட்டமும் போட்டு அப்பாடான்னு நகர்ந்துவந்து... வலைச்சரத்தில் போயிப்பார்த்தா ..கல்யாண வீட்டில் சுற்றமும் நட்பும்னு சொல்லுவதைப்போல் அவர் இடுகையை போயி பார்த்திருகிறீர்களா? அவரை.. இவரை ..என அறிமுக படுத்தும் போது அடடே எப்படி விட்டோம் என நினைக்க தோணுது. அவசர அவசரமா போயிப்பார்க்கும்போது த்து .. சிலன மனதில் எச்சில் ஊறத்தான் செய்யுது. இதைப்போல ஒரு நாளைக்கு எத்தனையோ.. ஒரு ஐந்தை படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் பத்த மாட்டீங்கதே. என்ன செய்ய.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்குமா? தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க ....அப்படித்தானே..வரட்டுங்களா.


Monday, March 15, 2010

எனக்கு பிடித்தப் பெண்கள் (தொடர் பதிவு) அக்பர் தயவு...

எனக்கு பிடித்த பெண்கள் (மாட்டி விட்ட மகராஐன் அக்பர்) என்னையும் மதித்து அழைத்த அன்புள்ள சிநேகிதா...

அன்னை தெரசா, தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி... இவர்களெல்லாம் நானும் நீங்களும் படித்து அறிந்த பெண்களில் பிடித்தவர்கள்.

இன்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களின் திறமையான பேச்சுக்கள், செயல்பாடுகளை பார்க்கும் போதும் படிக்கும் போதும் நச்சுன்னு நம்ம மனசுல ஒட்டத்தான் செய்யறாங்க. சமீபத்தில் கூட மேடை ஆளுமையில் தமிழ்ச்சி தங்க பாண்டியன் சிறப்பாக செயல் பட்டதாக படித்ததும் நச்சுன்னு ஒட்டத்தான் செய்யறாங்க.

படித்ததில் பிடித்தவர்கள்... பார்த்ததில் பிடித்தவர்கள்... பழகியதில் பிடித்தவர்கள்..... நமதுவாழ்க்கையில் நாம் பார்த்து பழகிய பெண்களில் நச்சுன்னு ஞாபகம் வருகிற பத்து பெண்கள் பற்றி தொடர் பதிவுகள் படிக்கும் போதெல்லாம் நினைப்பேன்.....

நெ.ஒண்ணு....

நமது கிராமபுறங்களில் அரசு ஊழியர்களாய் கிராம நல செவிலியர்கள்(v.h.n) என்ற பெயரில் பயணிபுரிந்து வருகின்ற அந்த சகோதரிகளை அருகில் இருந்து பார்த்ததால் எனக்கு நெ.ஒண்ணாக தெரிகிறார்கள். தமிழக கிராமப்புறங்களில் அரசு கட்டித்தந்த அறைகுறை குடியிருப்புகளில் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் அடைத்துக்கொண்டும், கிராமபுறத்தில் எந்த கல்வி கிடைக்கிறதோ அதை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, மக்கள் சேவையே மகேசன் சேவை என பலர் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அன்பு சகோதரிகளின் வாழ்க்கையின் ஒரங்களை ஒரளவு தெரிந்ததால் நினைச்சவுடன் தெரிகிறார்கள்.


எண் இரண்டு......

ஒவ்வொரு நாளும் பேருந்தில் செல்லும் போது அதிகாலையில் தளவாய்ப்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து பஸ் ஏறுவார்கள். ஐம்பது அறுபது பேர்கள் ஒரே சமயத்தில் அறுவாளும் கையுமாக...வயல் அறுக்க..நாத்துநட... அவர்களுக்கு தெரியுமா ?? நாம நமக்காக மட்டுமல்ல...இந்த உலகத்திற்கே உணவு கொடுக்க பணி புரிகின்றோமென்று...மறக்கவே கூடாத மகராசிகள்.


மூன்று....


தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆச்சரிய பெண்கள். அவுங்க வாங்கற சம்பளத்திற்கும் செய்கின்ற பணிகளுக்கும் தொடர்பு உள்ளதா? கடந்த இருபது வருடங்களாக நமது குழந்தைகளின் கல்வித் தரம் உயர காரணமானவர்கள் அவர்கள் அல்லவா? நன்றிக்குரிய அந்த சகோதரிகளில் பலர் எனக்குப் பிடிக்கும்.


நெ.4.


அங்கன்வாடிப் பணியாளர்கள்....என்னும் அந்த அன்பு சகோதரிகளில் பலர் கிராமப்புறங்களில் மவராஐன் கொண்டு வந்த சத்துணவு மையத்தில் உணவு தயாரித்து விவசாயக் கூலி வேளைக்கு சென்றுவிட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாயினும் சாலப்பரிந்து உணவு ஊட்டும் அழகை ஒரே தடவை பாருங்கள்... உங்களுக்கும் அவர்களைப்பிடிக்கும். அரசு பணி என்றாலும் சேவை செய்ய ஒரு மனசு வேணும்... சேவை செய்யும் போது பார்த்த பலரைத்தான் பிடித்ததாக சொல்கிறேன்.


ஐந்து....


நகர வாழ்க்கையில் நகரவே முடியாத இடத்தில் இருப்பவர்கள். நீங்கள் தினமும் இவர்களை சந்தித்தே ஆக வேண்டும். அவர்கள் ஐவுளிக் கடைகளில் சேல்ஸ் வுமன்களாய், டெலிபோன் பூத் சகோதரிகளாய், இன்னும் பிற இடங்களில் பணி புரியும் அன்பான உபசரிப்புகளையே மூலதனமாக்கி வாழ்க்கையை நகர்த்தும் அந்த நகரா சகோதரிகளில் பலரை நான் அறிவேன்.


.6.


அக்பர் எழுதியதைப்போல தயிர், பால், கீரை என கூவி கூவி சத்தம் போட்டு அழைத்து நமக்கும் நமது குழந்தைகளுக்கும் சத்தை தரும் பெண்கள். இப்படி உழைக்கும் பெண்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்.

இவர்களில் பத்து பேரை மட்டும் அடையாளம் காட்டுவது சரியல்ல. இவர்களில் சேவை உணர்வை மதித்து பலரின் பெயர், குடும்ப பின்னணி உட்பட அறிந்து வைத்துள்ளேன். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால்...நம்மால் முடிந்தது.. அவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் பெற்று தருதல், மருத்துவ ஆலோசனை மறறும் உதவி பெற்றுத் தருதல் இப்படி செய்து கொண்டே இருப்போம்..இருங்கள்.... யாரும் உங்களை வாழ்த்த வேண்டாம்... எந்த கோவிலுக்கும் போக வேண்டாம்..... நமது குழந்தைகள் நல்லா இருக்கும் என்று நம்புவோம்.


நன்றிங்க அக்பர்....


Friday, March 12, 2010

மனிதம் மறக்க காரணமாகிறது...

நானும் எனது மனைவியும் எங்களூரிலிருந்து பெங்களூருக்கு இரண்டு பை மற்றும் மகளுக்கான அன்பை லக்கேஜ் வழியாக எடுத்துக்கொண்டு அதிகாலையில் சுபயோக சுபவேளைப் பார்த்து புறப்பட்டோம். கூட்டம் குறைவாகவுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் ஏறினோம். முன்பக்கம் ஏறிய எனதருமை மனைவி, நடத்துனர் இருக்கைக்கு இரு இருக்கை தள்ளி அமர்ந்து லக்கேஜ்ஜையும் வைத்து விட்டார். பின்பக்கம் ஏறிய நான் காற்றோட்டமாக அமரலாமே என எண்ணி இருக்கை தேடியபடி இருந்தேன்.

அன்புள்ள மனைவி அழைத்தார். ஏனுங்க..இங்கேயே வாங்க..கூட்டம் ஏதுமில்லை..இறங்குவதற்கும் செளரியமாக இருக்குமென்று அன்புடன் அழைத்தார். அப்போ என் உள் மனசுசொல்லுது..‘டேய் பாசக்காரா..மனைவி பேச்சை கேட்காதே..உனக்கு தோதான இடமா பார்த்து இடத்தை பிடி’என்று..அடப்போ..அன்போடு கூப்பிடறாங்க.. அவிங்க சொல்லை தட்டலாமா? என மனசு சொன்னதை தட்டி விட்டுமனைவி அமர்ந்த சீட்டில் மூன்றாவதாக காலியுள்ள சீட்டில்அமர்தேன். பயணம் இனிதே தொடங்கியது.

ஏறத்தாழ பேருந்து நிரம்பி விட்டது. பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது. நான் சின்னப்பையனா இருக்கும் போது இடம் இல்லை என ஒட்டுனர் கையை அழகா விரித்துவிட்டு சொல்லுவார். பார்க்கவே அழகா இருக்கும், இப்ப அப்படியில்லை. படியில் கூட்டம் நிரம்பி வழிந்தால்கூட கருணை மனம் கொண்ட இந்த கால ஒட்டுனர்கள் பஸ்ஸை நிறுத்தி மனிதப் பொதிகளை அள்ளி போடாத குறையாக ஏற்றிக் கொள்கிறார்கள். அவசர உலகத்தில் பிறந்து விட்ட நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏறிக்கொள்கிறோம்.

கதைக்கு வருவோம்..ஆனந்தமாக பிரயாணத்தை தொடர்ந்தோம். சுமார் 3 கி.மீ. தூரம் கடந்ததும் பத்து பேர் கொண்ட குடும்பம் பேருந்தை நிறுத்தியது. ஓட்டுனரும் ஓரம் கட்டினார். பத்து பேரும் ஏறினர். பாதிப் பேருக்கு இருக்கைகள் கிடைத்தது. நால்வருக்கு இருக்கைகள் இல்லை. அதில் ஒரு பெரியவரும் பெரியம்மாவும் இருக்கையில்லாமல் என்னருகில் நிற்கின்றனர். நின்றுகொண்டே என்னை பார்த்தார்கள். என்நிலைமை கவலைக்கிடம் ஆகி விட்டது போல் தோன்றியது. அவர்கள் என்னைப் பார்க்க நான் மனைவியை பார்க்க என் இல்லம் மெதுவா சொல்லுது,..‘பேசாம கண்ணை மூடி படுங்க’. மனைவி சொல்லைதட்டாம நானும் கண்ணை மூடி தூங்குவதுபோல் நடித்தேன். எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அடடா..காலை வேளையில் அனைவரும் தூங்கினர். இனி மேலும் நாம தூங்கினா நம்ம ஊருக்கே கெட்டப்பேரு வந்துவிடும் என எண்ணி....திரும்பி திருமதியை ஒரு மொறை மொறைத்து விட்டு எழுந்து பவ்யமாக அந்த பெரியம்மாவை உட்காருங்க அம்மா என கூறினேன். அவரும் அதற்காவே காத்திருந்ததைப்போல அமர்ந்தார்.

வெற்றி புன்னகை யோடு 75 .கிமீ,நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைத்தது. பேசாம ஒரம் சாரமா அமர்ந்து வந்திருப்பேன். மனைவி சொல்லைக்கேட்டு மயக்கம் வரும் நிலை. இது யார் குற்றம்? நமது மாநில போக்குவரத்துத்துறை ஏன் இப்படி தொலை தூர பேருந்துகளில் கூட இருக்கைகளுக்கு மேல் ஆட்களை ஏற்றி ஒரு சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து மனிதத்தையே மறக்க செய்ய காரணமாகிறது.

Tuesday, February 23, 2010

சோகத்தையும் பங்கு வைப்போம்...

சோகத்திலும் ஒரு பங்கு........ம...ரணம். மரணம் தவிர்க்க முடியாததுதான். அதுவே எதிர்பாராமல் ஏற்படும்போது. அதுவும் வாழ்வில் எத்தனையோ கடமைகளை எதிர்நோக்கியுள்ள குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் போது. எத்தனை அதிர்ச்சியை கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒருநிகழ்வு விளங்கியது.


சிரித்து சிரித்து பேசும் என் உறவினர் ஒருவர், பீடி, சிகரெட், தண்ணி போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என அனைத்து தரப்பிலும் தரம் உயர்ந்தவர். ஒரே மகன். எல்லாக் குடும்ப வேலைகளையும் தானே செய்து வந்து மனைவியை ராணி மாதிரி பார்த்துக் கொண்டார். மனைவியின் குடும்பம் மற்றும் தன் குடும்ப பொறுப்புக்களை தானே முன்னின்று செய்து குடும்பத்திலும் முன்னிலை வகித்தார். அவர் திடீரென இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தி. விசாரித்ததில் நெஞ்சு எரிகிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாராம். தைலம் போட்டு தேய்த்து விட்டு உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றார்களாம், அவர் இறந்து ஓருமணி நேரம் இருக்கும் எனச் சொல்லி கை விரித்துவிட்டாராம்.


காலையில் 9மணிக்கு எங்கிட்டக்கூட நல்லா பேசிக்கிட்டிருந்தார் சார், என்ன சார் அநியாயமாக இருக்கு 9 மணிக்கு இருக்கிறார் 10 மணிக்கு இல்லை. 9.15 க்கு பைக்கில் போவதை பார்த்தேனே சார் என பதைபதைக்கும் நண்பர். இன்று இறந்துவிடுவேன் என நேற்றே தெரியும்போல் உள்ளது. அதனால்தான் என்றுமில்லாமல் நேற்று உனக்கு டீ வாங்கி கொடுத்து பிரியவே மனமில்லாமல் பிரிந்தாயா? என மற்றொரு நண்பர். அப்பா அப்பா என்னை டாக்டருக்கு படிக்க வைக்க போவதாக கூறுவீர்களே யாரப்பா என்னை இனி படிக்க வைப்பா என பத்து வயது மகன் பதறும் போதும், என்னையும் கூட்டி போகாமல் நீங்கள் மட்டும் எங்க போனீங்க மாமா, என மனைவி கதறும் போதும், அது தவிர உறவுகளைச் சொல்லி பெண்கள் ஒப்பாரி வைத்து புரள்வதை பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் நமது இதயம் நுழைந்து இறக்கம் கண்ணீராக வெளிவருகிறது. சாவே உனக்கு ஒரு சாவு வந்து சேராதா என கேட்க தோன்றுகிறது.


நம்மோடு அவர் பகிர்ந்த பாச நேரங்களை நினைத்து பார்க்க வைக்கிறது. உலக வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. மனம் ரணமாக உள்ளது. எல்லாமே எல்லோரும் ஒருசில நாட்கள் தான் என நினைத்து ஆறுதல்பட வேண்டியதாகவுள்ளது. தவிர்க்க முடியாமல் கண்ணதாசன் பாடல் வரிகள் மட்டும் ஆறுதல் சொல்ல வருகிறது. போனால் போகட்டும்.


கடமைகளை சுமந்து வாழும் பலர் தன் உடல் நலம் பேண மறந்து விடுகிறோம். நான் உட்பட. தயவு செய்து நண்பர்களே உங்களை நீங்களே கவனித்துக் கொண்டால்தான் நீங்கள் பிறரை கவனிக்க முடியும். கவனம்.Friday, February 19, 2010

உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா?உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? கேட்டிருக்கீறிர்களா? உதாரணத்தோட விளக்கினா போச்சு.

நம்ம கதையே ஒண்ணு இருக்குதுததல்ல. 1971ல் நாட்குறிப்பை பார்த்துதான் நமக்கே ஞாபகம் வந்தது. கோயமுத்தூரில் நம்ம உறவு ஆத்தா ஓண்ணு கண்ணு ஆப்ரேசனுக்காக ராயல் தியேட்டருக்கு அருகிலுள்ள ஞானா பரணம் கண்ணு ஆஸ்பத்தியிலே பண்ணிக்கிட்டதால துணைக்கு அய்யா போக வேண்டிய பாக்கியம் கிடைத்தது. அப்பவே கோயமுத்தூர் போறதுன்னா நம்ம ஊரில் பெரிய மரியாதையில்ல. நானும் ஐம்முன்னு கிளம்பிட்டேன். கிழவிக்கு காவல் என்ற பெயரில் ராயலில் ஒண்ணு பக்கத்திலே இருதயாவுலே ஒண்ணுன்னு ஒரே ராத்தியிலே இரண்டு படம் பார்த்து போட்டு நல்ல குடி நாச்சி மாதிரியில்ல இருந்தேன். மறுநாள் காலையிலே அப்படியே சும்மா ஒரு பொடி நடை விடலாம்ன்னு மேலாக்கு பாத்துக்கிட்டே நடந்தேன். எதிரில் ஒரு அண்ணன் வந்தாரு. வந்தாரா...ம்..ன்னு சொல்லுங்க. அப்பத்தேன் சுவாரசியமா சொல்ல வரும்.

அண்ணாச்சி என்னைப் பாத்தாரு. நான் அவரைப் பார்த்தேன். கீழே குனிந்து ஓரு பொட்டணத்தை கையில் எடுத்தாரு. எடுத்தாரா.. நான் அவரை பார்த்தேன்.. அவர் என்னை பார்த்தாரு.. எனக்கு தெரியிற மாதிரி தெரியாம பிரிச்சாரு...நான் அவரை பார்த்தேன்..அவர் என்னை பார்த்தாரு. நான் அவரு கையிலிருக்கிற பொட்டணத்தையும் பார்த்துபுட்டேன். நான் பார்த்துபுட்டேன்கிறதை அவரு பாத்துபுட்டாரு. ..புட்டாரா... அழகான சரிகைப் பேப்பரில் தங்க செயின் ஒண்ணு மடித்திருந்தது. உடனே என் கையை பிடித்து தம்பி யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம்... செயினை நான் வைத்து கொண்டு உங்களுக்கு பணம் வேணும்னா தர்றேன் அப்படின்னாரு...எனக்கு வந்ததே கோபம்..நம்மளை கூமட்டையின்னு நெனைச்சுட்டான் போல அப்படின்னு நான் நெனைத்து ..நான் வேணும்னா உனக்கு பணம் தர்றேன் எனக்கு கொடுங்க செயினை அப்படின்னே..

தம்பி தம்பி.. எங்கிட்ட 150ருபாய் தான் இருக்கிது. .அதை வாங்கிட்டு ஒண்ணும் தெரியாம போங்க தம்பி... இந்த சமயத்தலே எங்க எதிரில் ஒருபெரியவர் பதறி அடித்தபடி அழுது கொண்டும் தேடிக் கொண்டும் வந்தார். அய்யா எனது மூணு பவுனு செயினைக் காணாம்.. பார்தீங்களா? நேற்றுதான் ரூ.600 க்கு வாங்கினேன்ன்னு அழுதுகிட்டே போறாரு. நான் உடனே அவரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என நினைக்கும் போது நம்ம அண்ணன்..பாசத்தோட... தம்பி..பேசாம இருங்க செயின் எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை.. நீங்களே வைச்சுங்கோ..ன்னு பாச கயித்தை வீசுனாரு. தப்பிக்க முடியாம ..பாசத்திற்கு கட்டு பட்டு ..அண்ணே எங்கட்ட 110 ரூ. தான் அண்ணே இருக்குது..பரவாயில்லை தம்பி.. அதையாவது சீக்கிரம் கொடுங்க அந்த ஆளு வர்ராரு..பணத்தை புடிங்கிட்டு விட்டாரு சூட்......அது வரை மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்த நான் உடனே பவுனு ரூ.200. ரூ.110க்கு 3 பவுனா அப்படின்னு நினைத்தேன்.

ஆ...ஹா.. நாம எந்த ஊருன்னு தெரிந்து பாசத்திலேயே கட்டி போட்டுட்டு போயிட்டாரே . அண்ணா.........அண்ணா...ன்னு கவிதை பாடின்னா எழுந்து வரவா போராரு. அப்பத்தான் தெரிந்தது கோயமூத்தூர்காரன் உள்ளாளு வைத்து வூட்டியை மடக்கிட்டான்டான்னு. இதல யாரு உள்ளாளு.? பதறி அழுதுகிட்டு வந்தாரே அவருதான் நடிகர் திலகம். இதை வெளியில யாருகிட்டேயும் சொல்ல கூடாதுன்னு பாதுகாத்து வைச்சிருந்தேன். ஆனா ரகசியத்தை பதிவுக்காக பங்கு போட வேண்டியதாக ஆகிப் போச்சு. இது மாதிரி ஊட்டியை மடக்கிய சம்பவம் உங்ககிட்டேயும் இருக்கும் இருந்தால் என்னை மாதிரி வெளியே சொல்லி திரியாதீர்கள். கை கூடி வருது மாதிரி தெரியுது. வணக்கம். வர்றேன் சாமிகளா.Tuesday, February 16, 2010

நாட்குறிப்பு...


உங்களுக்கு டைரி எழுதுற பழக்கம் உண்டா? அந்த காலத்திலே நாங்களும் எழுதினோமில்ல..பார்க்கிறீங்களா?? நான் எழுதியதை 25 வருடங்கள் கழித்து படித்து பாருங்களேன். எப்பொழுதெல்லாம் மனது கனமாக இருக்கிறது எனக் கருதுகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நகலெடுத்து வைத்திருக்கும் டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தால் மனம் லேசாகிவிடும். நானும் ஒரு சில வருடங்கள்தான் எழுதினேன். அப்புறம்...கல்யாணம் ஆகிப்போச்சு....எல்லாம் இவ்வளவு தான். இதுக்கு போயி எதுக்கு? என்ற சலிப்பு. இதோ என் 1981 ஆம் ஆண்டின் டைரி எனக்கு சுவாரசியமான பக்கங்கள் ...உங்களுக்கு எப்படி இருக்குதுன்னுதான் சொல்லுங்களேன்.


அட்டையில்....அனுமதியின்றி.....படிக்காதீர்கள் என்று எழுதியிருந்தேன். இப்போது நான் கூறவில்லை.


ஐனவரி.1. தமிழகத்தில் விவசாயிகள் சிலர் காவல் துறையினரால் சுடப்பட்டார்கள் என்ற துயரச் செய்தியை தாங்கியபடி புத்தாண்டு பிறந்தது.


ஐனவரி.4. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு.


ஐனவரி.7. நீ உன் பார்வையால் கேட்கும் கேள்விகளின் நியாயம் புரிகிறது. உன் மேல் எனக்கு கோபமில்லை. (ஒருகாலத்தில்...............இது இப்போ இந்த அளவில் நிறுத்தியிருக்கிறேன். இதற்குள் ஒருகதையே உள்ளது. அதற்கு தனிப்பதிவு.)


ஐனவரி.19.

பருவத்தின் வாசலிலே

தண்ணீர் குடமெடுத்து

இளங்குமரி நடக்கையிலே

தளதளப்பது

தண்ணீர்க் குடம் மட்டுமல்ல

இளைஞ்ர்களின் உள்ளமும் தான்.

அவளின் ஈரச்சேலை கூட

அவர்களுக்கு வெப்ப கதகதப்பைத் தந்து விடுகிறதே........மு.மேத்தா.


(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)


பிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.


பிப்ரவரி.18. பாவம் பெண். வாழ்க்கையை சரிவர நடத்த தெரியாதவனிடம் சிக்கி சீரழியும் போது என்ன நினைப்பாள். உணர்வுகளை மதிக்க தெரியாதவனிடம் மாட்டி கொண்டவளின் நிலையை எண்ணி கலங்கினேன். வேறென்ன செய்ய முடியும். (ருக்குமணியை நினைத்து)


மார்ச்.30.

உணர்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில்

மனித ஈசல் தவியாய் தவிக்கிறது.

பின்னிப்பின்னி தொடரும் ஆசைகளால்

மனித உள்ளம் கண்ணாடித் துண்டு போல் சிதறுகிறது...

கண்கள் போக முடியாத தூரத்திற்கு நினைவுகள் ஒடுகிறது.


ஏப்ரல்.1. ஏமாறவுமில்லை.....ஏமாற்றவுமில்லை.


ஏப்ரல்.22.

இரவு அங்கே விருந்து.

நான் உன்னை மறந்திருப்பேன்.....

நீ எனனை மறந்திருப்பாய்....

அதனால் சூழ் நிலை நம்மை மறந்திருந்தது.


ஏப்ரல். 23.

மாரியம்மன் தேர்த்திரு விழா

நான் தேரையும் பார்க்க வில்லை.....

யாரையும் பார்க்க வில்லை.

நீ என்மேல் கொண்ட அன்போ...

நான் உன்மேல் கொண்ட அன்போ....

குறைந்து விட்டது என்றுதானே பொருள்.....


அய்யா இன்னைக்கு இது போதும். எனக்கே போர் அடிக்குது. உங்க ஆதரவை பார்த்த பின்பு........வரேன்ங்க..வருவேன்ங்க......