Tuesday, February 23, 2010

சோகத்தையும் பங்கு வைப்போம்...

சோகத்திலும் ஒரு பங்கு........ம...ரணம். மரணம் தவிர்க்க முடியாததுதான். அதுவே எதிர்பாராமல் ஏற்படும்போது. அதுவும் வாழ்வில் எத்தனையோ கடமைகளை எதிர்நோக்கியுள்ள குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் போது. எத்தனை அதிர்ச்சியை கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒருநிகழ்வு விளங்கியது.


சிரித்து சிரித்து பேசும் என் உறவினர் ஒருவர், பீடி, சிகரெட், தண்ணி போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என அனைத்து தரப்பிலும் தரம் உயர்ந்தவர். ஒரே மகன். எல்லாக் குடும்ப வேலைகளையும் தானே செய்து வந்து மனைவியை ராணி மாதிரி பார்த்துக் கொண்டார். மனைவியின் குடும்பம் மற்றும் தன் குடும்ப பொறுப்புக்களை தானே முன்னின்று செய்து குடும்பத்திலும் முன்னிலை வகித்தார். அவர் திடீரென இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தி. விசாரித்ததில் நெஞ்சு எரிகிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாராம். தைலம் போட்டு தேய்த்து விட்டு உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றார்களாம், அவர் இறந்து ஓருமணி நேரம் இருக்கும் எனச் சொல்லி கை விரித்துவிட்டாராம்.


காலையில் 9மணிக்கு எங்கிட்டக்கூட நல்லா பேசிக்கிட்டிருந்தார் சார், என்ன சார் அநியாயமாக இருக்கு 9 மணிக்கு இருக்கிறார் 10 மணிக்கு இல்லை. 9.15 க்கு பைக்கில் போவதை பார்த்தேனே சார் என பதைபதைக்கும் நண்பர். இன்று இறந்துவிடுவேன் என நேற்றே தெரியும்போல் உள்ளது. அதனால்தான் என்றுமில்லாமல் நேற்று உனக்கு டீ வாங்கி கொடுத்து பிரியவே மனமில்லாமல் பிரிந்தாயா? என மற்றொரு நண்பர். அப்பா அப்பா என்னை டாக்டருக்கு படிக்க வைக்க போவதாக கூறுவீர்களே யாரப்பா என்னை இனி படிக்க வைப்பா என பத்து வயது மகன் பதறும் போதும், என்னையும் கூட்டி போகாமல் நீங்கள் மட்டும் எங்க போனீங்க மாமா, என மனைவி கதறும் போதும், அது தவிர உறவுகளைச் சொல்லி பெண்கள் ஒப்பாரி வைத்து புரள்வதை பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் நமது இதயம் நுழைந்து இறக்கம் கண்ணீராக வெளிவருகிறது. சாவே உனக்கு ஒரு சாவு வந்து சேராதா என கேட்க தோன்றுகிறது.


நம்மோடு அவர் பகிர்ந்த பாச நேரங்களை நினைத்து பார்க்க வைக்கிறது. உலக வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. மனம் ரணமாக உள்ளது. எல்லாமே எல்லோரும் ஒருசில நாட்கள் தான் என நினைத்து ஆறுதல்பட வேண்டியதாகவுள்ளது. தவிர்க்க முடியாமல் கண்ணதாசன் பாடல் வரிகள் மட்டும் ஆறுதல் சொல்ல வருகிறது. போனால் போகட்டும்.


கடமைகளை சுமந்து வாழும் பலர் தன் உடல் நலம் பேண மறந்து விடுகிறோம். நான் உட்பட. தயவு செய்து நண்பர்களே உங்களை நீங்களே கவனித்துக் கொண்டால்தான் நீங்கள் பிறரை கவனிக்க முடியும். கவனம்.



Friday, February 19, 2010

உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா?



உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? கேட்டிருக்கீறிர்களா? உதாரணத்தோட விளக்கினா போச்சு.

நம்ம கதையே ஒண்ணு இருக்குதுததல்ல. 1971ல் நாட்குறிப்பை பார்த்துதான் நமக்கே ஞாபகம் வந்தது. கோயமுத்தூரில் நம்ம உறவு ஆத்தா ஓண்ணு கண்ணு ஆப்ரேசனுக்காக ராயல் தியேட்டருக்கு அருகிலுள்ள ஞானா பரணம் கண்ணு ஆஸ்பத்தியிலே பண்ணிக்கிட்டதால துணைக்கு அய்யா போக வேண்டிய பாக்கியம் கிடைத்தது. அப்பவே கோயமுத்தூர் போறதுன்னா நம்ம ஊரில் பெரிய மரியாதையில்ல. நானும் ஐம்முன்னு கிளம்பிட்டேன். கிழவிக்கு காவல் என்ற பெயரில் ராயலில் ஒண்ணு பக்கத்திலே இருதயாவுலே ஒண்ணுன்னு ஒரே ராத்தியிலே இரண்டு படம் பார்த்து போட்டு நல்ல குடி நாச்சி மாதிரியில்ல இருந்தேன். மறுநாள் காலையிலே அப்படியே சும்மா ஒரு பொடி நடை விடலாம்ன்னு மேலாக்கு பாத்துக்கிட்டே நடந்தேன். எதிரில் ஒரு அண்ணன் வந்தாரு. வந்தாரா...ம்..ன்னு சொல்லுங்க. அப்பத்தேன் சுவாரசியமா சொல்ல வரும்.

அண்ணாச்சி என்னைப் பாத்தாரு. நான் அவரைப் பார்த்தேன். கீழே குனிந்து ஓரு பொட்டணத்தை கையில் எடுத்தாரு. எடுத்தாரா.. நான் அவரை பார்த்தேன்.. அவர் என்னை பார்த்தாரு.. எனக்கு தெரியிற மாதிரி தெரியாம பிரிச்சாரு...நான் அவரை பார்த்தேன்..அவர் என்னை பார்த்தாரு. நான் அவரு கையிலிருக்கிற பொட்டணத்தையும் பார்த்துபுட்டேன். நான் பார்த்துபுட்டேன்கிறதை அவரு பாத்துபுட்டாரு. ..புட்டாரா... அழகான சரிகைப் பேப்பரில் தங்க செயின் ஒண்ணு மடித்திருந்தது. உடனே என் கையை பிடித்து தம்பி யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம்... செயினை நான் வைத்து கொண்டு உங்களுக்கு பணம் வேணும்னா தர்றேன் அப்படின்னாரு...எனக்கு வந்ததே கோபம்..நம்மளை கூமட்டையின்னு நெனைச்சுட்டான் போல அப்படின்னு நான் நெனைத்து ..நான் வேணும்னா உனக்கு பணம் தர்றேன் எனக்கு கொடுங்க செயினை அப்படின்னே..

தம்பி தம்பி.. எங்கிட்ட 150ருபாய் தான் இருக்கிது. .அதை வாங்கிட்டு ஒண்ணும் தெரியாம போங்க தம்பி... இந்த சமயத்தலே எங்க எதிரில் ஒருபெரியவர் பதறி அடித்தபடி அழுது கொண்டும் தேடிக் கொண்டும் வந்தார். அய்யா எனது மூணு பவுனு செயினைக் காணாம்.. பார்தீங்களா? நேற்றுதான் ரூ.600 க்கு வாங்கினேன்ன்னு அழுதுகிட்டே போறாரு. நான் உடனே அவரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என நினைக்கும் போது நம்ம அண்ணன்..பாசத்தோட... தம்பி..பேசாம இருங்க செயின் எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை.. நீங்களே வைச்சுங்கோ..ன்னு பாச கயித்தை வீசுனாரு. தப்பிக்க முடியாம ..பாசத்திற்கு கட்டு பட்டு ..அண்ணே எங்கட்ட 110 ரூ. தான் அண்ணே இருக்குது..பரவாயில்லை தம்பி.. அதையாவது சீக்கிரம் கொடுங்க அந்த ஆளு வர்ராரு..பணத்தை புடிங்கிட்டு விட்டாரு சூட்......அது வரை மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்த நான் உடனே பவுனு ரூ.200. ரூ.110க்கு 3 பவுனா அப்படின்னு நினைத்தேன்.

ஆ...ஹா.. நாம எந்த ஊருன்னு தெரிந்து பாசத்திலேயே கட்டி போட்டுட்டு போயிட்டாரே . அண்ணா.........அண்ணா...ன்னு கவிதை பாடின்னா எழுந்து வரவா போராரு. அப்பத்தான் தெரிந்தது கோயமூத்தூர்காரன் உள்ளாளு வைத்து வூட்டியை மடக்கிட்டான்டான்னு. இதல யாரு உள்ளாளு.? பதறி அழுதுகிட்டு வந்தாரே அவருதான் நடிகர் திலகம். இதை வெளியில யாருகிட்டேயும் சொல்ல கூடாதுன்னு பாதுகாத்து வைச்சிருந்தேன். ஆனா ரகசியத்தை பதிவுக்காக பங்கு போட வேண்டியதாக ஆகிப் போச்சு. இது மாதிரி ஊட்டியை மடக்கிய சம்பவம் உங்ககிட்டேயும் இருக்கும் இருந்தால் என்னை மாதிரி வெளியே சொல்லி திரியாதீர்கள். கை கூடி வருது மாதிரி தெரியுது. வணக்கம். வர்றேன் சாமிகளா.



Tuesday, February 16, 2010

நாட்குறிப்பு...


உங்களுக்கு டைரி எழுதுற பழக்கம் உண்டா? அந்த காலத்திலே நாங்களும் எழுதினோமில்ல..பார்க்கிறீங்களா?? நான் எழுதியதை 25 வருடங்கள் கழித்து படித்து பாருங்களேன். எப்பொழுதெல்லாம் மனது கனமாக இருக்கிறது எனக் கருதுகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நகலெடுத்து வைத்திருக்கும் டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தால் மனம் லேசாகிவிடும். நானும் ஒரு சில வருடங்கள்தான் எழுதினேன். அப்புறம்...கல்யாணம் ஆகிப்போச்சு....எல்லாம் இவ்வளவு தான். இதுக்கு போயி எதுக்கு? என்ற சலிப்பு. இதோ என் 1981 ஆம் ஆண்டின் டைரி எனக்கு சுவாரசியமான பக்கங்கள் ...உங்களுக்கு எப்படி இருக்குதுன்னுதான் சொல்லுங்களேன்.


அட்டையில்....அனுமதியின்றி.....படிக்காதீர்கள் என்று எழுதியிருந்தேன். இப்போது நான் கூறவில்லை.


ஐனவரி.1. தமிழகத்தில் விவசாயிகள் சிலர் காவல் துறையினரால் சுடப்பட்டார்கள் என்ற துயரச் செய்தியை தாங்கியபடி புத்தாண்டு பிறந்தது.


ஐனவரி.4. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு.


ஐனவரி.7. நீ உன் பார்வையால் கேட்கும் கேள்விகளின் நியாயம் புரிகிறது. உன் மேல் எனக்கு கோபமில்லை. (ஒருகாலத்தில்...............இது இப்போ இந்த அளவில் நிறுத்தியிருக்கிறேன். இதற்குள் ஒருகதையே உள்ளது. அதற்கு தனிப்பதிவு.)


ஐனவரி.19.

பருவத்தின் வாசலிலே

தண்ணீர் குடமெடுத்து

இளங்குமரி நடக்கையிலே

தளதளப்பது

தண்ணீர்க் குடம் மட்டுமல்ல

இளைஞ்ர்களின் உள்ளமும் தான்.

அவளின் ஈரச்சேலை கூட

அவர்களுக்கு வெப்ப கதகதப்பைத் தந்து விடுகிறதே........மு.மேத்தா.


(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)


பிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.


பிப்ரவரி.18. பாவம் பெண். வாழ்க்கையை சரிவர நடத்த தெரியாதவனிடம் சிக்கி சீரழியும் போது என்ன நினைப்பாள். உணர்வுகளை மதிக்க தெரியாதவனிடம் மாட்டி கொண்டவளின் நிலையை எண்ணி கலங்கினேன். வேறென்ன செய்ய முடியும். (ருக்குமணியை நினைத்து)


மார்ச்.30.

உணர்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில்

மனித ஈசல் தவியாய் தவிக்கிறது.

பின்னிப்பின்னி தொடரும் ஆசைகளால்

மனித உள்ளம் கண்ணாடித் துண்டு போல் சிதறுகிறது...

கண்கள் போக முடியாத தூரத்திற்கு நினைவுகள் ஒடுகிறது.


ஏப்ரல்.1. ஏமாறவுமில்லை.....ஏமாற்றவுமில்லை.


ஏப்ரல்.22.

இரவு அங்கே விருந்து.

நான் உன்னை மறந்திருப்பேன்.....

நீ எனனை மறந்திருப்பாய்....

அதனால் சூழ் நிலை நம்மை மறந்திருந்தது.


ஏப்ரல். 23.

மாரியம்மன் தேர்த்திரு விழா

நான் தேரையும் பார்க்க வில்லை.....

யாரையும் பார்க்க வில்லை.

நீ என்மேல் கொண்ட அன்போ...

நான் உன்மேல் கொண்ட அன்போ....

குறைந்து விட்டது என்றுதானே பொருள்.....


அய்யா இன்னைக்கு இது போதும். எனக்கே போர் அடிக்குது. உங்க ஆதரவை பார்த்த பின்பு........வரேன்ங்க..வருவேன்ங்க......



Saturday, February 6, 2010

தயவு செய்து இதப்பாருங்க...


பிப்ரவரி 7ல் கூடுதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 7 இரண்டாம் சுற்று கூடுதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் கடந்த ஐனவரி 10ம் தேதி 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் சுற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும் பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் சொட்டு மருந்து கொடுத்தால் தான் போலியோ என்ற கொடிய நோயிலிருந்து நமது குழந்தைச் செல்வங்களைப் பாதுகாக்க முடியும். கடந்த பதினாறு வருடங்களாக தொடர்ந்து நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமின் பயனால்தான் தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தக் குழந்தையும் போலியோ காரணமாக பாதிக்கப்படவில்லை.

போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். தயவு செய்து இதப்பாருங்க.






Tuesday, February 2, 2010

எங்கே கூட்டிப்போகிறார்கள்........


நண்பர் ஒருவர் ஆசிரியப்பணியே அறப்பணி என்று வாழ்ந்து வருபவர். அவரை நேற்று சந்தித்தேன்.மிகவும் சோர்வாக இருந்தார். ஏண்டா இந்த வேளைக்கு வந்தோம் என்று இருக்குது என சலித்துக் கொண்டார். நான் கிண்டலாக மவராசன் ஆட்சியிலே உங்களுக்குதான் அள்ளி அள்ளி கொடுத்திட்டாரே.. அப்புறமென்ன நண்பா..என்றேன். அதன் பின்பு அவர்கள் துறையில் போட்டி போட்டு நடந்து வரும் பொறுப்பில்லாத அதிகாரிகளின் போக்கை பார்த்து மனம் வெதும்புவதாக கூறினார். நானும் பதிவுக்கு நல்ல மேட்டர் கிடைக்கும் போல இருக்குது என எண்ணி கொஞ்சம் விரிவாத்தான் சொல்லுங்களேன் என்றேன்.


தமிழ்நாட்டில் பள்ளி கல்வித் துறையில் தேர்ச்சியை அதிகரித்து காட்ட வேண்டும் என்று மானாவாரியாக செயல்பட்டு கல்வியை சீரழித்து வருகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ? என்றார். எப்படி என்று கேட்டேன். ஒரு மாணவன் 25 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சியளிக்கவேண்டும் என்பது பள்ளி கல்வித் துறையின் விதி. மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மேற்காண் விதி முறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.


ஆனால் இன்று நடப்பது என்னவென்றால் ஒருபள்ளியில் தேர்ச்சி விகிதத்தை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற எடுத்துச்சென்றால் 5 சதவீதம், 8 சதவீதம், 10 சதவீதம் உட்பட மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களையும் 25 சதவீதமாக உயர்த்தி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டினால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கும் என சாட்டையடியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். வாத்தியார்களும் ..ஒ..கே.. வாத்தியார்களுக்கே வகுப்பா என ஒருமுடிவுக்கு வந்து எவன் படித்தால் என்ன,,,படிக்காட்டி என்ன..நமக்கு படி வருதா..மானாவாரியா எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக போய் வருக என ஆசி வழங்கி மேல் வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.


போனா போகுது விடு நண்பா என்று ஆறுதல் கூறினால், அவர் மிகவும் வருத்தமாக உள்ளது. தனது மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் தரம் அறியாமல் மாணவர்களின் தராதரம் பார்க்காமல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டின் பள்ளி கல்வியின் எதிர் காலம் என்னாகுமோ என கவலைப்பட்டார். இதனை வெளியே சொல்ல முடியாமல் சில ஆசியர்கள் மனம் வெதும்பி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே விட்டுவிட்டார்களாம். நாட்டு நடப்பை அனுசரித்து நாட்களை கடத்துங்கள் நண்பா என வாத்தியார்ருக்கே வகுப்பு எடுத்து விடை பெற்றேன்.


இதை படிக்கும் யாருக்காவது எதையாவது சிந்திக்க தோன்றினால் வெளியே யாரிடமும் சொல்லாமல் சிந்தித்து சிரிக்க முடிந்தால் சிரித்து அழ முடிந்தால் அழூது தொலையுங்கள். இந்த நாட்டில் எதை எவனிடம் சொல்லி என்ன நடக்கப்போகிறது. வணக்கம். வரட்டுங்களா....