Monday, March 7, 2011

ஏமாந்த கதை தொடருது....ங்கோ...

1971.. அப்படின்னு ஆரம்பித்தாலே..அய்யா.. நான் அப்பத்தான் பிறந்தேன் அப்படின்னு நிறைய பேரு சொல்லுவது  கேட்குது. நம்ம தொடரையும் படிக்க அமெரிக்காவில் இருந்து பழமைபேசி, தமிழ் டி்.வி பார்க்க முடியாததால் ஆவலோடு சித்ரா.. வழக்கம் போல ஊக்குவிக்கும் கதிரு.. வருடம் முழுவதும் காலத்தை கடத்தலாம் என்ற திட்டத்தோடு பதிவு போட வந்தா  இப்பவே காலி பண்ணச் சொல்லும் வானம்பாடியார்.. அண்ணாக்கள்.. எல்.கே, சென்னைபித்தன், நம்ம கோவை அக்ரி ஆபீசர் ஆகியோருக்கு நன்றி சொல்லி ஏமாந்த கதையை தொடர்கிறேன்.

பெற்ற தாய்க்கு சாப்பாடு போடாம பாசம் பொத்துக்கிட்டு வந்த மாதிரி..தாய் மொழி தமிழை தெரிஞ்சுக்க விரும்பாம வெறும் பாசம் வைக்க மட்டும் அடுக்கு மொழிச்சுவை பயன்பட்டது. சுவையா பேச தெரிந்தவர் அப்பவே தாய்மொழி கல்விக்கு விதை போட்டடிருந்தா.. இன்னைக்கு நாய் பேயெல்லாம் கோர்ட்டுக்கு போகுமா.. எனக்கும் நீதிமன்றம் அப்படின்னு எழுதாம கோர்ட்டுன்னு எழுத வருமா.. எதைபற்றியும் சிந்திக்காம பண்ணிபோட்டாரு.. கைது பண்ணியதாலேயே ஒருவர் குற்றவாளியல்ல அப்படின்னு அவரு சொன்னா.. ஊரே அதைத்தானே சொல்லுது.. நல்லா வியாக்கானம் பேசி கை கண்டுக்கிட்டாரு. இவ்வளவு தொலைத் தொடர்பு வந்த பின்பும் உங்களையே 
ஏமாற்றுகிறார் என்றால் எங்களை.. இல்லை என்னை எவ்வளவு ஏமாற்றி இருப்பார். கதைக்கு வருவோம்..

 
1969ல் அண்ணா இறந்தார்..அப்ப நம்ம தலைவரு பாடினாரு பாரு ஒரு ஒப்பாரி.. இதயத்தை இரவலா கேட்டாரு.. அதை கேட்ட நான்.. அண்ணா கொடுத்திட்டுத்தான் போயிட்டாருன்னு நம்பினேன். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரு.. வந்த ரயில் தானே நின்னுது அவ்வளவு சக்தி அப்படின்னெல்லாம் மேடைப் பேச்சை கேட்டு கேட்டு முதலில் அதை நாங்க நம்பி ஊரையே நம்ப வைத்து, அப்ப டி.வியே நாங்க தானே.. இவரு எங்கே பேசினாலும் ஓடோடிச் சென்று அதை கேட்டு ரசித்து அதை அப்படியே அவரு குரலில் எங்க ஊரில் பேசிக்காட்டியிருக்கிறேன். என் பேச்சையே ரசித்த எங்க ஊரு சொந்த பந்தங்கள் மனதில் உதய சூரியனை வார்த்தை பசைபோட்டுல்ல ஒட்டினேன். இன்னொரு விசயம், கதா நாயகனைப் பற்றி சொல்லாம கதையை ஆரம்பிக்கக்கூடாதில்ல. அதுதான் நம்ம எம்.ஜி.ஆர். காதுக்கு அவரு.. கணண்ணுக்கு இவரு.. காட்சிக்குன்னு வைச்சுக்கங்க. அவரு பேச்சு இவரு நடிப்பு. அது இருக்கட்டும். காலம் ஒடுது..1971 ஆம் வருடம்.. காங்கிரஸ் உடையுது. அய்யாக்களே நான் வரலாற்று ஆசிரியர் இல்லை, வருடங்கள் முன்ன பின்ன வரும். குற்றம் கண்டு பிடிச்சா மனசுகு்ள்ள வைத்து கொள்ளுங்கள்.


இந்திரா காந்தி அவர்களுக்கு வந்த நெருக்கடி காரணமாக தேர்தல் வந்தது. 1967ல் தி.மு.க கூட்டணியிலிருந்த சுதந்திராக் கட்சி காமராசருடன் கூட்டணி சேர்ந்து தி.மு.க‘வை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்குது. காமராசரை ஒரு தேசத்துரோகியாக தன் பேச்சால் எங்களைப் போன்ற இளைஞர்கள் மனதில் பதிய வைத்து விட்டார் கலைஞர். நாங்களும் எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் மந்திரித்து விட்ட கோழி மாதிரிக்கு அவரு பேச்சுக்கு அடிமையாக் கிடந்தோம். தேர்தல் வந்தது, ஊரே பேசுது... தி.மு.க அவுட்டுன்னு.. இவரு உடன்பிறப்பே அப்படின்னு பாசவலையைப் போட்டு எங்களை உசுப்பி விட்டுடாரு.... அப்பவெல்லாம் காலையிலே முரசொலி பார்த்துபோட்டுத்தானே பல் துலக்குவோம்.. முரசொலி வரவில்லை என்றால் பல்லே துலக்க மாட்டீங்களா.. அப்படின்னு யாரோ கேட்க நினைக்கறீங்க.. அந்த கூத்தை வேற சொல்லனுமா.. கதைக்கு வருவோம்.

காமராசர் தலைமையில் போட்டி போடும் கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு. அந்த தேர்தலில் பம்பரமா பணியாற்றி முதன்முதலில் ஓட்டு போட்டேன். அந்த தேர்தலில் ஆற்றிய பணியைப் பற்றி.. அவரு நடையிலே சொன்னா... நினைக்கிறேன் மணக்கிறது..என் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.... அதைப்பற்றியும் களப்பணிகள் பற்றியும்  அடுத்த பதிவில் விரைவில்... வணக்கமுங்கோ...


...