அருமைச் சுற்றங்களே..வணக்கம்...
போன மாதம் பதிவு போட்டது. பலருடைய பயனுள்ள பதிவுகளைப் படிக்கும் போது, நாம நம்ம சொந்த கதை, சோகக் கதைகளை எழுதி பலரின் பொன்னான நேரங்களை போக்க வேண்டாமே அப்படீன்னு தோணுது...நம்ம பக்கத்துக்கு வந்து படித்து.. மனசு கேட்காம போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்டு நேரத்தை செலவழிக்கிற நேரத்திலே ஒரு நல்ல பதிவை படிக்கலாம்..
அமெரிக்காவில் நடந்த தமிழ் விழாவை அழகா தொகுத்திருக்காரு நம்ம பழமை பேசி.. அதை பார்க்கலாம்.. நம்ம சீனா அய்யா தயவில் வலைச்சரத்திற்கு போனா வகை வகையா, விதவிதமா பகுத்து கொடுக்கிறார்கள் வார ஆசிரியர்கள். ஏதோ நம்ம அறிவுக்கு எட்டிய அளவில் எதோ படித்தமா..பின்னூட்டம் போட்டமா..அதையும் மதித்து பதில் வழங்கி இருக்கிறார்களா.. அதை பார்த்து காலத்தை ஓட்டாம... நினைச்சதை எல்லாம் எழுதி... பதிஞ்சிட்டு நானும் பதிவர் அப்படீன்னு பத்து பேர்கிட்ட சொல்லிட்டு திரிகிறது. அதனால.... ஒரு முடிவு எடுக்கோணும். ஒரு யோசனை பண்ணிச் சொல்லுங்க. இதுல நாம மட்டும் முடிவு எடுக்க முடியாதல்ல. சொந்த பந்தமான உங்களைக் கேட்டுத் தானே ஒரு முடிவு பண்ணோணும்.
பதிவு போடாம இருந்தா நம்ம பழனிச்சாமி அண்ணன் என்ன ஆனாரு? மாசத்திற்கு ஒரு தடவையாவது வந்து காமெடி பண்ணுவார்.. ஆளைக்காணாமே அப்படின்னு கதிர் தம்பி வானம்பாடி அய்யா கிட்ட கேட்க..அவர் கேரக்டர் அப்படின்னு நம்மை பத்தி எழுத..எதுக்கு வம்பு. லீவு போட்டாலும் சொல்ல வேணும்..கோயிலுக்கு போனாலும் சொல்ல வேணும்.. அப்படி ஒரு உறவுல்ல ஏற்பட்டு இருக்கு.
ஆமா.. செம்மொழி மாநாடு, அமெரிக்க தமிழ் விழா எல்லாம் பார்த்தீங்க... ஆளாளுக்கு தமிழை பிரித்து மேய்ந்ததை அதுதாங்க ஆய்வு செய்ததை கேட்டீங்க .. இப்போ நீங்க என்ன செய்கிறீர்கள்? வீட்டிலாவது தமிழ் முழக்கம் செய்கிறீர்களா? வீட்டில் மனைவிடம், குழந்தைகளிடம் தமிழில்தானா பேசுகிறீர்கள்?
நம்ம கதை இப்படி...போன வாரம் ஒரு முடிவோட எழுந்தேன்.. இன்னைக்கு ஒருநாளாவது தமிழில் பேசி பார்ப்போமே .. என் காதில் விழுந்த முதல் வார்த்தை ,
“மாமா குட்மார்னிங்...” அப்படின்னு நம்ம மைத்துனுர் பொண்ணு..
“ஏய்வாலு.. இங்கே வா..”
“ஏனுங்க..”
“ஆமா ஏன் காலை வணக்கமுன்னு அழகா சொல்ல கூடாதா? ” அப்படீன்னா...
“போங்க மாமா உங்களுக்கு வேற வேலை இல்லை..” அப்படீன்னு ஓடீவிட்டது.
அடுத்த தமிழ் மனைவிடம்.... ஏனுங்க உங்களுக்கு காபியா? டீ யா? என்ன சொல்லுவது என நானே குழம்பி விட்டேன்.. தாயே காபிக்கு தமிழில் குளம்பீ அப்படீன்னு சொல்லுவாங்க.. டீ.க்கு வடி நீர்.. என ஆரம்பித்தேன்.. காலையில் ஏங்க கழுத்தை அறுக்கறீங்க.. அப்படீங்கறாங்க.. என்ன சொல்லறதுன்னே புரியலை.?!! கிராமங்களில் ஆங்கிலம் அப்படீன்னா.. என்ன அப்படீன்னு கேட்கறாங்க.. இங்கிலீஸ்.. அப்படீன்னாத்தான் புரியுது....
எனது மகள் படித்தவள்.. அவளிடம் அம்மா உன் இருசக்கர வாகனம் எங்கே? எனக் கேட்டால்... என்னப்பா சொல்லறீங்க..? நாலு நாளும் செம்மொழி மாநாடு அப்படீன்னு டி்வி.. பெட்டி முன்னாலே உட்கார்ந்திருந்து உங்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு...அப்படிங்கீது... அதற்கு பின்பு.. டி்வி.. பஸ்.. செல்போன்.. சைக்கிள்.. கார்.. மிஸ்டு கால்.. மினி பஸ்.. பெட்.. மிக்ஸி.. நம்ம முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தலாமா? அப்படின்னு நினைச்சுட்டேன். செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்க்க பெரிதும் துணை நிற்பது வெள்ளித் திரையா? சின்னத் திரையா? அச்சுத் துறையா? என்ற பட்டி மன்றத்தில் நடுவர் தீர்ப்பைப் போல் முப்படைகளின் தாக்கத்தை மீறி தமிழை வளர்ப்பது அவ்வளவு சுலபமல்ல.. என்று எண்ணினாலும்.. இதை விடப்போவதில்லை
..ஏய்யா இந்த வயதில் உமக்கு வேண்டாத வேலை..அப்படிங்கறீங்களா? உன்னத்தான் பதிவர் அப்படின்னு பட்டம் கொடுத்து வைத்திருக்கிறோமே..பேசாம ஓய்வை ஓய்வா பயன் படுத்தாம.. காடு மேடு எல்லாம்... ‘ஹலோ’ சத்தம்..நேரில் கூப்பிறவங்க கூட ‘ஹலோ’ அப்படின்னுதான் பேசறாங்க. தமிழ் வார்த்தை கூட ஒரு ஆங்கில வார்த்தை (மிக்ஸ்) சாரி..மன்னிக்கவும்..கலந்தாத்தான் நல்லா இருக்குது. எப்படி தமிழை காப்பாற்ற போகிறீர்கள்?... ஒண்ணும் புரியலை.
முப்படையில் ஒருபடையான சின்னத்திரையில் பாட்டு கேட்க அவுங்க பேசற வார்த்தைகளும், இவுங்க பதில் சொல்லுவதும்.....என்ன பண்ணுவதுன்னே தெரியலை. இலவசம் போடாத ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தாத்தான் காரியம் நடக்கும் போல தெரியுது. கடிதம் எழுதி ஒண்ணும் ஆகப்போறதில்லை. எவ்வளவு காசை செலவு பண்ணி எத்துணை மாநாடு போட்டாலும் புண்ணியமில்லை..அதனால..நீங்கதான் சொல்ல வேணும்.. எனக்கு ஒரு கெடாவெட்டு அழைப்பு வந்துள்ளது...போக போறேன்.. நீங்களும் வாங்க.. என்ன நடக்குது அப்படின்னு பார்த்து ஒரு பதிவுக்கு வழி பண்ணுவோம்..