Monday, May 24, 2010

வாங்க காற்று வாங்கலாம்..



வாங்க காற்று வாங்கலாம்.. வெய்யிலிலிருந்து விடுதலை. எங்க ஊரில் காற்று சித்திரையில் சீர் பூட்டி விடும். ஜுன், ஜுலை மாதங்களில் எங்க ஊருப்பக்கம் வந்து பாருங்க. வந்து பார்த்தவங்களுக்கு தெரியும். அடிக்கின்ற காற்றில் அம்மியே பறக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும் சூறைக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சொய்...சொய்வென இறைச்சலுடன் காற்று வீசும் அழகே தனி. காடு மேடெல்லாம் புழுதி பறக்கும். வீட்டுக்குள்ளே மண்ணை கூட்டி மாளாது. பாழாய் போன காத்து என இயற்கையை நொந்தபடி வீட்டை கூட்டுவார்கள் எங்க வீட்டு அரசிகள். அடிக்கின்ற காற்றை அதிசியமாக பார்ப்பார்கள் புதிதாக இந்த பக்கம் வருகிறவர்கள். பழனியை பார்க்க வருகிறவர்கள் எங்க ஊரு வழியாகத்தானே போகணும். அது ஒண்ணுதான் எங்க ஊருக்கு பெருமை.. அப்புறம் காற்று.. காத்துன்னுதான் சொல்லி பழக்கம்.

பாலக்காட்டு கணவாய் இடைவெளியில் எங்கஊரு வருவதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பல்லடம், உடுமலைப்பேட்டை, பழனி, தாராபுரம், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் என ஒருரவுண்டு கட்டி காற்று வீசும். மணல் மழை பொழியறதை நேரில் பார்க்கலாம். இன்னும் பார்த்ததில்லையா? அப்ப கண்டிப்பாக ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் எங்க ஊருபக்கம் வாங்க.. வந்து அடிக்கிற காத்தில கொஞ்ச நேரம்நின்னு பாருங்க. உங்க தலையிலேயே நல்ல மணலை கொண்டு செல்லலாம். பத்து பேரு வந்தீங்கன்னா ஒரு அறை லோடு மணலை கடத்தி விடலாம். அது சரி.. எதையோ சொல்ல வந்து காற்று திசைமாற்றி விட்டது. அக்பர் வரை எல்லோரும் சேட்டையில் விளையாட ஆரம்பித்து விட்டதால் நாமும் கொஞ்சம்..

எதிர் வரும் வாரம் கல்யாண வாரம்.. பகுத்தறியா பதர்கள் நேரம் காலத்தை பகுத்து.. மூகூர்த்த நாள் இதுன்னு குறித்து வைத்து விடுகிறார்களா? எல்லாநாளும் நல்ல நாளே என்ற நினைப்பு மாறி மூகூர்த்த நாள் எதுன்னு பார்த்து ஒரே நாளில் எல்லோரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை வைத்து விடுகிறார்கள்...அதனால் நமக்கில்ல கண்ணுமுழி பிதுங்குது. ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது. எல்லாமே நெருங்கிய சுற்றமும் நட்பும். எங்க போறது என்ன பண்ணுவது ஒண்ணும் தெரியமாடீங்கிது. கோயமுத்தூரில் ஒண்ணு பொள்ளாச்சியில இன்னொன்னு உடுமலையில் மற்றொன்று பழனியிலும் ஒண்ணு.. உள்ளூரில் ஆறு.... ஏ..அப்பா.. போயி தலையை கூட காட்ட முடியாது போல இருக்குதே.. பஞ்சா பறக்க வேண்டியதுதான்.. எங்க போயி மணமக்களை வாழ்த்துவது...

எதை எதையோ புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்க.. இதுக்கு ஒரு மாற்று உட்கார்ந்து யோசிக்க மாட்டேங்கிறாங்களே. என்னமோ நெனச்சேன்...பதிவும் போட்டுட்டேன்.பதில் போடுங்க...




Thursday, May 6, 2010

மர ஆசை..



அன்பிற்குரியவர்களே..வணக்கம்,

நண்பர் பனித்துளி சங்கர் அவர்கள் இயற்கையை அழிப்பதால் ஏற்படப்போகும் பேராபத்தை அறிய அறிவியல் பூர்வமான பதிவை வழங்கியுள்ளார். அவருக்கு எனது பாராட்டை பதிவு செய்தவுடன் ..கனமான மனதுடன் அவர் பதிவில் வேண்டியபடி இது குறித்து தொடர் பதிவில் என் மனதில் தோன்றுவதை எழுதுகிறேன்.

கிராமங்களில் இன்னும் பலர் பல் துலக்க பல்குச்சித்தான் பயன் படுத்தி வருகிறார்கள். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... வேப்பங்குச்சி, வேலங்குச்சி போன்ற குச்சிகளை மரத்திலிருந்து ஒடித்து பயன்படுத்துவார்கள். நானும் ஒரு சில சமயங்களில் வேப்பங்குச்சியை பயன்படுத்துவேன். அதன் மிதமான கசப்பும், வேலங்குச்சியின் துவர்ப்பும் சுகமான அனுபவம்தான். நண்பரின் பதிவை படித்தவுடன் இனிமேல் பல் துலக்க கூட பல் குச்சியை ஒடிக்க மாட்டேன் என என் கருத்தை பதிவு செய்தேன்.



மீண்டும் யோசித்தேன்..சென்ற வாரம் உறவினர் ஒருவர் கட்டும் புதுவீட்டுக்கு மரம் வாங்க என்னையும் கூட்டிப்போனார். எல்லா மரக்கடையும் ஏறி இறங்கியும் அவர் விருப்பப்பட்ட படி மரம் கிடைக்கவில்லை. மரக்கடையில் அவர் சொன்னார்.. என்ன விலையானாலும் பரவாயில்லை.. நல்ல விளைந்த மரமா இருக்கு வேண்டும். இவ்வளவு மரம் வேண்டும்.. என மர வியாபாரியிடம் ஆசையை சொல்லிவிட்டார். இனி என்ன நடக்க போகிறது..மரவியாபாரி தான் மரம் வாங்கும் இடத்தில் தன் வியாபார திறமையை காட்டுவார். அவருக்கு மரம் தருபவர்கள் தன் கை வரிசையை இயற்கையிடம் காட்டத்தான் போகிறார்கள்.. நமது தேவைகளுக்கு எந்த எந்த மரங்கள் உயிர் விடப் போகிறதோ.. ??



நமக்கு வேண்டியது நம்ம வீட்டுக்கு தேக்கு மரத்திலே கதவு...ஐன்னல்கள்...மரப்பீரோ..மரக்கட்டில்..மரவேளைப்பாடுகளுடன் கூடிய சமையல் அறைகள் ...இன்னும்பிற...பிற.. எப்படி அழிக்கப்படாமல் இருக்கும் காடுகள்... முதலில் இதை நிறுத்த சொல்லுவோம்..மரம் வாங்கவே ஆளில்லை என்ற நிலை வரும் போது எவனாவது மரத்தை வெட்டி காட்டை அழிப்பானா? இதுக்காகவும் காட்டை அழிக்கிறாங்கல்ல... மரஆசையை விடுங்க மகாராஜாக்களே... ஏதோ எனக்கு தெரிந்தது. கருத்துப்பிழை, எழுத்து ப்பிழை.. இருந்தால்...(இருக்கும்...) சுட்டி காட்டுங்கோ.. கொட்டி காட்டாதீங்க..

(நன்றி பனித்துளி சங்கர்.)