Friday, October 1, 2010

ரியல் எஸ்டேட் பிசினஸ்...


கொட்டக்காடு, கோமுட்டி தோட்டம், சாமியங்காடு, குளக்காடு, பாலமரத்துக்காடு, பனைமரத்துத் தோட்டம், ஓட்டையங்காடு, சின்னக்குரை, அனுப்புச்சிகாடு என்னுங்க இது? நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறப்ப... அதாவது 1965/1975 வருடங்களில் இந்த பெயர்களில் விளங்கிய விளைநிலங்கலெல்லாம், அண்ணா நகர், கண்ணன் நகர், சென்னியப்பா நகர், ஹவுசிங் யூனிட், லாயர்ஸ் காலனி, லட்சுமி நகர், ஜீவா நகர் என பெயர் மாறி கான்கீரீட் பயிர்களா உருமாறி காட்சியளிக்குது. என்னைப்போல் உள்ளவங்களுக்கு அந்த காடு தோட்டம் கண்ணுக்குள் வந்து போகுது.

நல்ல விவசாய பூமியெல்லாம் கண் முன்னே கான்கீரிட் பூமியாகுது. அதுமட்டுமல்ல காடு மேடெல்லாம் கல் நட்டு சைட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் அங்கிகெனாதபடி எங்கும் பிரகாசமாய் கொடிகட்டி பறக்குது. ஆளப்பிறந்த பாதி பேருக்கு இது தான் வேலை. மீதிப்பேருக்கு என்ன வேலை. அதை நீங்கதான் சொல்ல வேணும். இந்த பூமி பெயர்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லுவார்கள். அதை கேட்கவே சுவராசியமாக இருக்கும். ஊருக்கு ஊரு அண்ணா நகர். நம்ம அண்ணாவை நினைத்து பெயர் வைத்தார்களா? சைட் போட்டவரு அவுங்க அண்ணனை நினைத்து பெயர் வைத்தாரா? ஒண்ணுமே புலப்படவில்லை.

அதாவது பரவாயில்லை..சென்னியப்பன், சம்பத்(இது வேறு சம்பத்துங்கோ) இவுங்க உல்லாம் யாரு? அப்படின்னு என் பேரன் கேட்டால் நான் ஒரு சொல்லணுமே. நம்ம ஊரை கண்டு பிடித்ததே அவுருதான் அப்படின்னு புதுக்கதை ரெடி பண்ணி வைக்க வேண்டும். சரி விவசாய நிலங்களெயெல்லாம் கூறு போட தடை போடுங்க என்று நமது அரசாங்த்திடம் யாராவது ரகசியமாக சொல்லுங்களேன். அதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம் ஏது? அதுவும் சரிதான்.

நம்ம சங்கதிக்கு வருவோம். இப்போ நமக்கு புது சிக்கல் ஒண்ணு உருவாயிருக்கு. நம்ம பேரருக்கு பெயர் வைக்க வேண்டும். நம்ம பேரர் எதிர் காலத்தில் உங்களைப்போல பதிவு திலகமா திகல வேணுமல்ல. அன்பை புகட்ட நானும்...அதுதானுங்க செல்லம் கொடுக்கறது. அறிவை புகட்ட எனது மகளும் மருமகரும் இருப்பார்கள்.

பெயர் வைக்கிற பொறுப்பை நம்ம கிட்ட ஒப்படைத்து விட்டார்கள். என் மூத்தமகள் பெயர் வித்தியப்பிரியா, இளையவள் தமிழினியா. பெரியவள் சொல்கிறாள்.. பெயர் வைத்தே என்னை பழி வாங்கி விட்டீர்களே அப்பா...‘ஆங்கில அகர வரிசையில் வி..எங்கும் கடைசி..எங்கும் காத்திருப்பதே சோதனையா போகிவிட்டது‘ என்று. அதனால் என் அன்பிக்குரிய இணையச்சொந்தங்களே நல்ல தமிழ் பெயராக சொல்லுங்களேன், உங்களிடம் கேட்கச் சொல்லி என் மகள்தான் சொன்னாள். நம்பிக்கையுடன் சான்..பிளாக் எதுக்கெல்லாம் பயன்படுது என எல்லோருக்கும் புரிய வைப்போம்..தெரிய வைப்போம்.

அன்புடன் சூனா பானா.