Monday, February 21, 2011

ஏமாந்த கதை - 1

புது வருடம் பிறந்து புறப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகப் போகுது. பொங்கல் வந்துதிட்டு போயிருச்சு. வழக்கமா வாழ்த்துக்களைச் சொல்லி வாழ்த்துக்களைப்பெற்று எப்படியோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லோரும் எல்லாமும் இலவசமா பெற்று நல்லா இருப்போம்...எவன் செத்தா நமக்கென்ன?

எனக்கு உறக்கம் போயி இரண்டு மாசம் ஆச்சு.. எனது ஒய்வுக்கு ஒய்வு கொடுக்க சிலர் விரும்பியதால் தொழிலதிபர் ஆகலாம் என்ற நல்ல ஆசையில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.. என்ன தொழில்? என்ன விபரம்?  என்ற விவரத்தை எல்லாம் சொல்ல கூடாதல்ல.. அது தொழில் ரகசியம். உங்ககிட்ட சொல்லாமையா...பொறுமையா இருங்க சொல்லுகிறேன்.

கரும்பு வியாபாரம் பண்ணுன கதை ஆகிடகூடாதல்ல... அது என்ன கரும்பு வியாபாரம்.. நம்ம வாய் உளறிக்கொட்டி  எப்பவும் மாட்டிக்கும்.. அதையும் சொல்லுகிறேன். அது சரி.. இப்ப நாம எதற்காக வந்தோம்.. என்ன விபரம்.. அப்படிங்கிறதை மட்டும் முதலில் பார்ப்போம். இப்ப நாம எல்லோரும் மே மாதம் விரைவில் வராதா என ஆவலோடு எதிர்பார்க்கிறோம்... மே மாதத்தை நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குதில்ல. அதுக்கு பரிகாரமா மேமாதத்திலேயே முடிவுக்கு வரவேண்டும் என்ற நல்லாசை.
 
நாட்டிலே எங்கபார்த்தாலும் தேர்தல் காய்ச்சல். யாரை தொட்டு பார்த்தாலும் வெது வெதுன்னு இருக்குது. கதை முடிந்தது அப்படின்னு பலபேரு. சிலர் கூட்டணியை பொறுத்துதான் சொல்ல முடியும் அப்படிங்கிறாங்க. இன்னும் சிலர் இலவசம் வெற்றி பெறும் அப்படின்னு குண்டை துக்கி போடறாங்க. பாதாளம் வரைக்கும் பாய வரப்போகுது, எங்க பக்கம்மெல்லாம் இப்பவே வந்துவிட்டது அப்படிங்கிறாங்க. எனக்கு உறக்கமே வர மாட்டேன்ங்குது. 

தமிழ்நாட்டை ‘ஆண்டவனே’ மீண்டும் ஆண்டால், கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது அப்படின்னு சொல்ல யாராச்சும் வருவாங்களா.. என சிலர் ஏங்கி தவிக்கிறாங்க. தினம் தினம் சுடசுடச் செய்திகள்.. கைது  ஒருநாள். டெல்லிக்கே ஓடி இவரு ஓண்ணை சொல்ல  இங்க அவரு ஒண்ணை சொல்ல, உடனே மாத்தி சொல்ல நெருங்கி வருகிற மாதிரியும் தெரிய வைத்து வராத மாதிரியும் புரிய வைத்து..படிக்கிறவனயெல்லாம்  கேனபயலா நினைத்து..வார்த்தைகளில் பம்மாத்து பண்ணி ஊரை ஏமாற்ற போறாங்க. இதே வார்த்தைகளுக்கு மயங்கிதானே நம்மை நாம் தொலைத்தோம். நம்மைன்னு சொல்லலை.. என்னைன்னு சொல்லிக்கிறேன்.  

அப்ப வருடம் 1965..நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று இருந்த கால கட்டம். அப்பத்தான் நான் ஏமாந்தேன். எப்படின்னு நான் சொல்லுவதைவிட..என் வயதை ஒத்த கவி வைரமுத்து அவர்களின்...இதுவரை நான் என்னும்தொடரில் இப்படி சொல்கிறார்..அதில் கொஞ்சம் படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

(அந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தமிழ் இயக்கங்களும் அவற்றின் ருசியான வாக்கியங்களும் மொழியின் மீது நான் கெண்டிருந்த பற்றை வெறியாய் வளர்த்தன, ........ரின் வாலிப வாக்கியங்கள் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்தன. அடடா பரவசமூட்டும்  அந்த பதினாறு வயது வார்தைகளுக்கு இன்னும் வயசாகி விடவில்லை.  

நகை நட்டு ஏதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள் புகையொத்த கொடி போல நெளிந்தாடும் உருவத்தாள் இடையோ ஒரு பிடிக்கும் காணாத இளம்பிடி இதழ்களிலோ தேன் ஒரு படி. இந்த வாசனை வாக்கியங்களை நாங்கள் உச்சரித்த உல்லாசப் பொழுதுகளில் காற்றும் நின்று கேட்டு விட்டு போனதே...) இப்படி போகுது அவரு கதை.

அந்த கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்குது... எங்க ஊரு வசந்தா தியேட்டர் பேட்டையில் கூட்டம்.. எங்க அண்ணன் தெய்வசிகாமணி அவர்கள் கூட போனேன். அண்ணன்தான் மாலைமணி முரசொலி போன்ற பத்திரிக்கைகளை எனக்கு  வாங்கி கொடுத்து கர கர குரலில் அடுக்கு மொழிகளைப் படிக்க வைத்து ரசிப்பார். அப்ப தெரியவில்லை அது அடுக்கு மொழியில்லை ‘கொடுக்கு’ மொழின்னு. அந்த வார்த்தை ஜாலங்களில் சிக்கித்தானே என்னை போன்றவர்கள் உடன்பிறப்புக்களாக மாறி எவன் சொல்லுவதையும் நம்பாம அவரு என்ன சொன்னாலும் நம்பி நாசமாப்போனாம். சோலையின் நடுவிலே சோசலிச தந்தை.. அப்படின்னாரு.. நாங்களும் ஊர் ஊருக்கு திண்ணை பேச்சாளர்களா மாறி அவரு சொன்னதை எல்லோரையும் நம்ப வைத்தோம். 

அண்ணா இறந்தாரு.. நாவலரை ஓரங்க கட்டி எம்.ஜி.ஆரை வளைத்துப்போட்டு அண்ணன் மன்னன் ஆனாரு.. அப்புறம்.. காங்கிரஸ் ஒடையுது... மன்னன்  மன்னாதி மன்னன் ஆன கதை.. நான் முதன் முதலில் ஓட்டுப் போட்ட கதை..  இன்னும் பல விபரங்கள்.விரைவில்...வணக்கமுங்க...



.