Wednesday, September 14, 2011

எங்க ஊரு இப்பவே களைகட்டுது..ங்கோ...

.

அன்புள்ள இணையச் சொந்தங்களே.. வணக்கம். 

‘ஐந்து மாதமா அண்ணன் காணாமப் போய்ட்டு இப்ப வந்து சொந்தம் கொண்டாடுகிறாரே என்ன சங்கதி?’ எனக் கேட்டு விடாதீர்கள். ஏமாந்த கதையின்னு நான் எழுத.. அதைப் படித்து தான் தமிழ்நாடே திருந்திவிட்டதாக கிடைத்த மகிழ்ச்சியிலே எழுதமுடியல.. ஒரே  மொத்தாவுல்ல தமிழ்நாடே சேர்ந்து மொத்து மொத்துன்னு மொத்திட்டாங்கல்ல.. போததற்கு அம்மா வேறு மொத்தறாங்கல்ல.. அனுதாபமா.. அவுங்க மேலையா.. இப்போதைக்கு காணவில்லை.

அதுசரி... நாட்டு நடப்பை பார்ப்போம். கடந்த ஒரு மாதமா எங்க ஊரு களைகட்ட தொடங்கி விட்டது. குடவோலை முறையில் ஓட்டு போட்டு ஊரை ஆள ஆட்களை அடையாளம் காட்டத் தயாராகி விட்டார்கள். மகனும் நிற்கிறார்.. மருமகனும் நிற்கிறார்.. யாருகூட போனாலும் பொல்லாப்பு.. கண்ணாமுழி பிதுங்குது.

தினமும் நாட்டுக்காக வீட்டுப்பணத்தை எடுத்து செலவு செய்கிறார்கள்.. என்ன சொல்லுகிறீர்கள்.. அறுவடைக்கு விதைக்கிறார்கள் என்கிறீர்களா..? அதுவும் சரிதான். மாமன் கொடுக்கிறான்.. மச்சான் வாங்குறான் ஊழலை எப்படி ஒழிக்க முடியுமிண்ணே..?? அப்படின்னு ஒரு மகராஐன் சொன்னாரே ..காமராஐர்.. அவரை தெரியுமுங்களா.? ஏய் பெரிசு எங்களுக்குத் தெரியும் உனக்கு தெரியுமா.. அப்படிங்கிறீர்களா..? அவரை நாங்கள் புரிந்திருந்தா உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்.

1972..ல்  அவருக்கு எதிரா முதன் முதலில் இவர்கள் வாய் ஜாலத்தில் மயங்கி உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு உங்களுக்கு இவ்வளவு சிரமத்தை உண்டு பண்ணியதே நாங்கதான் அப்படிங்கிறதை இப்ப உணருகிறோம். 

சரிங்க, நாட்டு நடப்புக்கு வருவோம். எங்க ஊரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக ஊரு களை கட்ட தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்படி  வெற்றிபெறுவது.. யாரை எப்படி வளைப்பது.. ஒட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது.. பத்து நாளைக்கு ஊருக்கே சாப்பாடு போட்டு மயங்க வைக்கலாமா..? எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று ஒருவர் சொல்கிறார் ‘சரக்கு வாங்கி கொடுத்து கட்டுபடியாகாதுங்க’ன்னு..

ஏதோ புதிதாக ஒரு இயந்திரம் வந்திருக்காம்.. மொத்த பணத்தை கொண்டு போய் கட்டிவிட்டால் நம்ம ஊருக்கே கொண்டு வந்து பொருத்தி விடுவார்களாம்.. தேர்தலில் பாடுபடும் தொண்டர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் ஒரு பட்டனை ஒரு அழுத்து அழுத்தினா போதுமாம்.. அதுவா கலந்து கொட்டுமாம். என்ன செலவு ஆனாலும் எங்க ஊருக்கு அந்த இயந்திரம் வருமாம். ஒரு தம்பியிடம் நான் கேட்டேன், தம்பி அப்படி ஒரு இயந்திரம் வந்துவிட்டதா? அப்படின்னு அந்ததம்பி சொல்லுது.. புதுசா கண்டு பிடுச்சிட்டா போகுதுங்க அப்படிங்கிறார். ஐனநாயம் படும்பாடு பளிச்சுன்னு தெரியுது.. இவங்கதான் ஊராட்சியில் வெற்றி பெற்று நாளை தமிழ்நாட்டுக்கு அமைச்சர்களா வந்து புகுந்து விளையாட போகிறவர்கள். கட்சி கொடியே பறக்காத எங்க ஊரே இப்படின்னா... மற்றைய ஊருககெல்லாம் எப்படியோ..!!!

கடைசி ரவுண்டுகட்டி அடிக்க பிளான் போடுகிறார்கள். தினமும் கிடா வெட்டுவது என முடிவு பண்ணிருக்காங்க.. கரன்சியை காத்துல பறக்கவிட்டாலும் விடுவாங்க.. எங்கஊரு இப்பவே களை கட்டுது..ங்கோ....


.