Thursday, April 29, 2010

பசுமை நிறைந்த நினைவுகள்...

சின்ன வயசிலே கேட்ட கதை. எங்கிட்ட யாரும் கதை கேட்கவில்லை என்றாலும் பதிவுகளில் சின்ன வயதுகளில் கேட்ட கதைகளை படிக்கும் போது அடடே இப்படி நம்ம கிட்ட என்ன கதை இருக்குதுன்னு நெனைக்க தோணுதுல்ல.. நினைத்ததை எழுதுவோமில்ல... நினைச்சதை எல்லாம் எழுதி அதைப் பத்து பேர் படித்து என்ன சொல்லறாங்க..? அப்படின்னு பார்க்கிறதில்ல ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுதுங்க. எப்படியோ பொழுதை ஒட்டினா சரிதான் என்னைப்போல உள்ளவங்களுக்கு...ஆனால் உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பலர் நினைத்தால் படைக்கலாம்...படைப்பார்களா? என பார்க்கத்தானே போகிறோம்..கதைக்கு வருவோம்.


ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது படிக்கும் காலம்தான் நம்ம பசங்க வாழ்க்கையில் சுகமான காலம். கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவு மற்றும் முழுப்பரீட்சை லீவு இந்த மூன்று லீவுகள் வந்தால் போதும் பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அந்த கடைசிப் பரீட்சை எழுதி, வீடு திரும்பும் போது இருந்த மகிழ்ச்சி இன்று வரை இல்லை. அந்த நாட்களை நினைக்க வைத்தவர்களுக்கு மீண்டும் நன்றி. லீவு விட்டவுடனே பெரியம்மா ஊரு, அக்காஊரு...என ஊர்களுக்கு போக ரகளை பண்ணி அன்றே கிளம்பி விடுவோம்.

முதலில் பெரியம்மா வீடு. அங்கதான் தோட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அப்புறம் பெரியம்மா சொல்லுகிற கதைகள்.. ஆகா..லீவு போறதே தெரியாதே. ஊருக்கு போன மறுநாளே பெரியம்மா வீட்டு அண்ணாக்களுடன் தோட்டத்திற்கு புறப்பட்டு விடுவோம். தோட்டத்திற்கு போன வுடனே முதலில் தேடுவது அண்ணாக்களின் அன்றைய ஒரே பொழுது போக்கு...அந்த கால சினிமா பாட்டு புத்தகங்கள். அண்ணாக்கள் சினிமா புத்தகங்களை சேகரித்து அதை ஓலைகளில் சொருகி வைத்து இருப்பார்கள். அதை தேடித்தேடி எடுத்துப் படித்து மனப்பாடம் செய்து கொள்வோம். அப்ப பச்சுன்னு மனசுலே ஒட்டுனதுதான் இன்னுமும் துடைக்க முடியலை.



மாடுகள் மேய்க்க சின்ன அண்ணாவுடன் மேற்கே கொறங்காடு (சுற்றிலும் அடைப்புள்ள காடு) கிளம்பி விடுவோம். அந்த காட்டில் அந்த வெலா மரத்து நிழல்.. புள்ளை பூச்சி பிடித்து விளையாட சின்ன அண்ணா செய்யும் டெக்னிக். .அந்த காலத்திலே கொறங்காட்டுக்குள்ளே மறைவான இடங்களில் பதித்து வைத்திருக்கும் சாராய ஊறல்கள்... மண்தாழியை மண்ணுக்குள் சுமார் ஆறடி ஆழத்தில் பதித்து வைத்து .. அதற்குள் பழங்கள்.. விலாம்பட்டை..அய்யோ அவ்வளவுதான் எனக்கு தெரியும்சாமி... என்ன என்னமோ சொல்லுவாங்க.. நான் பார்த்ததில்லை.. அதையெல்லாம் போட்டு ஊறல் போட்டிருப்பாங்க..அந்த இடத்தை யாரு கண்ணுக்கும் தெரியாம அவ்வளவு டெக்னிக்கலா மூடி வைத்துதிருப்பாங்க. எங்க சின்ன அண்ணா கில்லாடியல்ல. அதை கண்டு பிடித்து .. தோண்டி மூடு கல்லை எடுத்து என்னை கூப்பிட்டு காட்டுவாரு.. அப்ப எங்க சின்ன அண்ணன் எனக்கு எம்.ஜி.ஆரா தெரிஞ்சாரு. இன்னைக்கு வரைக்கும்தான்.

அப்ப அடித்தது பாருங்க ஓருவாடை ..அய்யோ ..இப்போ நெனைத்தாலும் விடமாட்டீங்குது. நாங்க இந்த வேலையில் இருக்க மாடுகள் கொறையை விட்டு கொறை தாவி அடுத்த தோட்டத்து வெள்ளாமையில் புகுந்து விடும். தோட்டத்துகாரர் பார்த்து எங்களை துரத்தினா...நாங்க எடுத்தா ஓட்டம்...எழுத எழுத எல்லாம் ஞாபகம் வருதுங்கோ. எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. புலி வாலை பிடித்த கதையா இருக்குதே. எது எது ஞாபகம் வருதோ அதெ எல்லாம் எழுதி போடறதுங்கிற முடிவோட உட்காந்தாச்சுங்கோ.

மாலையில் வீடு திரும்பும் போது எருமை மாட்டு மேல என்னை உட்கார வைத்து வீட்டுக்கு கூட்டி வருவார் சின்ன அண்ணா. இரவு நிலா வெளிச்சத்தில் உணவு. எல்லோரும் ஒன்றாக அமர்ந்தவுடன் பெரியம்மா உருண்டை பிடித்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்து உண்ணும் அழகை பார்த்திருப்பாங்க...அப்புறம் விளையாட்டு.. படுக்க பத்து பதினொரு மணி ஆகிவிடும். அப்போது ஆளுக்கு ஒரு கதைசொல்ல வேண்டும். எல்லோரும் கதை சொன்னார்கள் ...கேட்டேன்..நானும் கதை சொன்னேன். எதுவுமே ஞாபகமில்லை.ஆனால் எங்க பெரியம்மா சொன்ன திருவாத்தான் கதை மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. அது சரி...பள்ளிக்கூடங்கள்தான் லீவு விட்டாச்சே..உங்கள் செல்வங்களை பெரியம்மா சின்னம்மா ஊருக்கு அனுப்பிச்சாச்சா? இந்த காலத்திலே அங்கே போனாலும் நம்ம செல்வங்கள் மட்டையும் கையுமாவுள்ள இருக்கறாங்க. கிராமங்களில் வேகாத வெய்யில் காடுமேடு எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டாவுள்ள இருக்குது.




அந்த காலத்திலே வெளியவே விடமாட்டாங்க. பகலில் அக்காக்களுடன் புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. நல்ல உடல் பயிற்சியான விளையாட்டு. உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க இத்துடன் முடித்துக்கொள்கிறேன். திருவாத்தான் கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி..வணக்கம்.




Tuesday, April 13, 2010

வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?



“வணக்கம்ங்க..வாங்க .அடையாளம் தெரியுதுங்களா?”

“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது.. சட்டுன்னு ஞாபகம் வர மாட்டீங்கிது.”

“சார் நான் தாரா... ”

“ஓ..இப்ப ஞாபகம் வந்திருச்சு..ரொம்ப சந்தோசம்..எப்ப வந்தீங்க? காப்பி சாப்பிடுறீங்களா? ”

“இப்பதாங்க... அய்யோ காப்பி வேண்டாங்க.. கொடுமையான வெயில் மோரு கீறு இருந்தா கொடுங்க...

“கீறு இல்லை..கூல்டீரிங்ஸ் ஏதாவது சாப்பிடரீங்களா?

“எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..அது மட்டும் வேண்டாங்க. சில்லுன்னு ஓரு டம்ளர் தண்ணி கொடுங்க..

“எது வேணும்னாலும் கேளுங்க தண்ணி மட்டும் கேட்காதீங்க.. தண்ணீர் சிக்கனம் பற்றிய பதிவுகளை படிக்கரீங்களா?

“.....ரொம்ப செளரியமாக போச்சு.. நீங்களே வந்துட்டீங்க விசயத்திற்கு....

“சரி..சரி..ஈரோடு எப்ப வந்தீங்க?.. உங்க ஊரு வெயில் எப்படி?

“என்ன இருந்தாலும் எங்க ஊரைப்போல் வருமா?....வெயில் பொறுக்க முடியாமத்தான் தண்ணீர், மரம் என பதிவுகள் போட வேண்டியதாகிப் போச்சு.

என் உறவினர் ஒருவர் கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டு கொல்லம் பாளையத்தில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்தேன். நண்பகல் நேரம்.... வீராசாமி அண்ணன் தயவுல மூன்று மணிக்குத்தான் கரண்டு வருமாம். வெயிலின் தாக்கம் தாங்க முடியாம வீட்டுக்கு வெளியே சைடு ரோட்டில் புங்க மரத்தடியில் நிக்க வேண்டியதாப் போச்சு. அப்போது நண்பகல் 1.30. தீடிரென எனது காலுக்கு கீழே சொய்ய்ய்ய்ய்.....என்ற சத்தத்துடன் தண்ணீர் பீரிட்டு கிளம்பி காவேரிக்கு போட்டியா ஒடி சாக்கடையில் கலக்குது.

“என்னடா அது ...பெரியார் பிறந்த மண்ணுலை அதிசியம்...வால்பையன் தம்பிக்கு தெரிந்தால் என்ன ஆகும்” என யோசித்து கொண்டே அருகில் இருந்த என் உறவினரிடம் கேட்டேன்... “என்னுங்க இது ?” என்று..

“வேறொன்றுமில்லைங்க..இப்பத்தான் (மா)நகராட்சியிலருந்து தண்ணீர் முறை வைத்து விட்டிருக்காங்க. ஏதோ பைப் லைன் உடைந்துவிட்டது போல உள்ளது. அதுதான் தண்ணீர் வருது..” என கூறினார்.

சமீபத்தில் ஈரோடு பதிவர்களின் பதிவுகளை படித்த நமக்கு கண்ணீர் இல்ல வருது....

உடனே நான் ஆராயிச்சியில் இறங்கினேன். “ஈராட்டில் யார் ஆட்சி? எத்தனை நாளா இப்படி தண்ணீர் வீணாகுது? இதை ஏன் சமூக அக்கரையுள்ள யாரும் உரிய அதிகார அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வில்லை?” என எனக்குள்ளேயே நினைத்து கொண்டு ....

“இந்த இடத்திற்கு என்ன பேறுங்க?” எனக் கேட்டேன்.

“காசி பாளையம் , கொல்லம் பாளையம்..” எனக்கூறினார்..

பைபாஸ்லிருந்து நேரா வந்தா முதல் லெப்ட் கட்... சில அடிதூரத்தில் பெரிய காட்டுத்தோட்டம் என்ற பெயர் பலகை ரைட் சைடில் உள்ளது. ஈரோட்டில் தண்ணீர் வீணாவதை பார்த்த போது நம்ம ‘கதிர்’கள் உள்ள ஊரில்.....

“போனை போடலாமா” என யோசித்தேன்.. நேற்று மரம் வளர்க்கும் மாமனிதர்களை அறிமுகப்படுத்திய நிழலில் இளைப்பாறும் அவரை ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இரவு முழுவதும் வீரிட்டு கிளம்பி வெளியே வந்து சாக்கடையில் கலக்கும் தண்ணீரின் ஞாபகம். காலையில் முதல் பார்வையில் கண்ணில் பட்டதும் தமிழ்மணத்தில் வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை கோடியில் இருவர்.

“என்ன ஆனாலும் சரி அவரு இ..மெயிலுக்கு நம்ம கருத்தை அனுப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்த பின்... தீடிரென ஒரு யோசனை...நாமத்தான் பதிவு போட்டு பத்து நாளாச்சே.. இதையே நீட்டி முழங்கி கணக்கில் ஒண்ணு சேர்திட்ட மாதிரியும் ஆச்சு.... உடனே ஈரோட்டுக்கு கதிர் அவர்களை பார்க்க புறப்பட்டு விட்டேன். ஈரோடு வாழ் பதிவர்கள் தெரிந்து அக்கரையுள்ள ஒருவர் என்னைப் போல் அறைகுறையாக இல்லாமல் நிறைகுடமாக மாற ஆசையுடன்.........வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?


Friday, April 2, 2010

பொண்ணு பார்த்த கதை...

பொண்ணு பார்த்த கதை... ஒண்ணு நம்மகிட்டவும் இருக்குதில்ல...

ஆனா இது நம்ம கதை இல்ல. பொண்ணு பார்த்து கல்யாணம் கடடிக்கிற பாக்கியமெல்லாம் நமக்கு இல்லாம போச்சு. சின்ன வயசிலிருந்து பார்த்துகிட்டே இருந்த பொண்ணை காலம் முழுவதும் பார்த்துக்கோ அப்படீன்னு நம்ம கையிலே பிடித்து கொடுத்திட்டாங்க... இதனால்தான் வாழ்க்கையே தடம் மாறிப்போச்சு. என் வீட்டுக்காரிய வலுக்கட்டாயமா நான் கூட்டிக்கிட்டு போன ஒரே சினிமா முந்தானை முடிச்சு. அன்னைக்கு அது சொல்லுச்சு... இந்த வேளையெல்லாம் இன்னையோட விட்டுறுங்க..அப்படின்னு. அன்னைக்கு விட்டவன்தான்....அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் குடும்பம் ..குடும்பம் சார்ந்த உறவுகள்..குழந்தைகள் நலன்....அதனால் தான் அய்யா ஜாலியாக காலம் தள்ள முடிந்தது. இல்லையின்னா ஐம்பத்தெட்டு வயசுல்ல பொண்ணு பார்த்த கதை எழுத முடியுமா? கதைக்கு உதவாதது எதற்கு...நம்ம கதைக்கு வருவோம்.

எங்க ஊரில் எனது பெரியப்பா குடும்பம் மணியகாரர் குடும்பம். அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை. நான்கு பெண்கள் மட்டுமே. மூத்த அக்காவுக்கும் அடுத்த அக்காவுக்கும் ஒரே சமயத்தில் மாப்பிள்ளைகள் பார்த்து திருமணம் நிச்சியக்கப்பட்டது. சின்ன அக்காவுக்கு உறவுக்குள்ளேயே ஒரு மாப்பிள்ளை . பெரிய அக்காவுக்குத்தான் அசலூர் மாப்பிள்ளை. பெரியவர்களா பார்த்து முடிவு செய்து விடுவார்கள். பெண் பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயத்திற்கு முன்பு தனது சாமர்த்தியத்தை உபயோகப்படுத்தி மாப்பிள்ளை பெண்ணை பார்த்தால் தான் உண்டு. நிச்சியத்தன்று கூட மாப்பிள்ளை வர மாட்டார். மாப்பிள்ளையும் பெண்ணையும் கருத்து கேட்கின்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் மாப்பிள்ளைகள் தங்கள் வீர தீர செயல்களின் மூலம் பெண்ணை பார்த்து விடுவார்கள். அந்த காலத்தில் கிராமப்புறங்களில் ஒருசில குடும்ப பெண்கள் வீட்டை விட்டு வெளியேயும் வர மாட்டார்கள். எப்படி பெண்ணை பார்ப்பது??... எங்க மாப்பிள்ளை கதை இப்படி......

பகல் நேரங்களில் தங்களது வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தோழியர் சூழ விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவிகளுக்கு எங்களைப்போன்ற தம்பிகள். அதுபோன்ற ஒரு நாளில் வீதியில் சேலை வியாபாரி ஒருவர் சேலை சேலை என கூவி விற்று கொண்டு சென்றார். கல்யாணப் பெண்களுக்கு சேலை வாங்க வேண்டும் என்ற ஆசை. அக்கம்பக்கத்து பெரிசுகள் விடுதா... என்னை அழைத்து...டேய் அப்பா..கூப்பிடடா சேலை வியாபாரியை எனச்சொல்ல நான் அதற்காகவே காத்திருந்தவன் போல...டூர்ர்ர்ர்ர்ர்...என ஓடி சேலை வியாபாரியை பிடித்து வந்தேன். அவரும் எந்த தெருவுக்கும் போகாமல் எங்க வீதியையே சுற்றி சுற்றி வந்தார். பவ்வியமாக வந்த அவரும் சேலைக்கட்டை கீழே இறக்கி வைத்து நல்ல கைதேர்ந்த சேலை வியாபாரி போல் சேலைகளை எடுத்து வைத்தாரு. சேலைகளை எடுத்து பார்த்த பெரிசுகளும் அக்காகளும்.. பிடித்த சேலைகளுக்கு விலையை கேட்க.... விலை என்னுங்க விலை... எதுபிடிக்கிறதோ அதை எடுத்துங்கோ ..என அவர் அன்பை அள்ளி விட.. அது தான் சமயம் என்று அடிமாட்டு விலைக்கு அக்காக்கள் கேட்க.. அவர் மறுப்பது போல் நடிக்க ..சேலை வியாபாரம் கேலியும் கிண்டலுமாக கலைகட்டியது. கடைசியில் அக்காக்கள் கேட்ட விலைக்கே இரண்டு சேலைகளை கொடுத்து விட்டார். சேலை வியாபாரிக்கு மோர் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

அதற்கு பின்பு நிச்சியம் முடிந்து முகூர்த்த நாளும் நெருங்கியது. கல்யாண வீடும் கலைகட்டியது. பந்தல், தோரணம், மேளம், தாளம்.... மாப்பிள்ளை குதிரை மேல் வருதல் என்ற சிறப்பு சீர் வரிசை.... மின் விளக்குகள் எட்டி பார்க்காத அந்த நாளில் ஏகாளி தீ பந்தம் பிடிக்க அந்த ஒளியில் தான் மாப்பிள்ளை அழைப்பு...மாப்பிள்ளையை யாரும் சரியாக பார்க்க முடியவில்லை. நம்ம வீட்டுக்கு வருகின்ற மாப்பிள்ளை தானே காலையில் நல்லா பார்த்துகிட்டாபோச்சுன்னு இருந்திட்டேன்....

அதிகாலையில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து நிற்க சுப மூகூர்த்தம். வலுக்கட்டாயமா என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி புது சட்டையெல்லாம் போட்டு மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அய்யா அப்பத்தான் மாப்பிள்ளையை நல்லா பார்த்தேன். பார்த்த உடனே .. மாப்பிள்ளை என்னை பார்த்து மொரைத்தார் . நான் மாப்பிள்ளையை பார்த்து போட்டு உடனே.. அக்கா.. மாப்பிள்ளை அன்னைக்கு வந்த சேலை வியாபாரி அக்கா..என ஒரே கத்து. அருகில் இருந்த மாப்பிள்ளை நண்பர் ஒருவர் என் வாயை பொத்தி அப்படியே அலேக்கா தூக்கிட்டு போயே போயிட்டாரு.

அதற்கு பின்பு மச்சான் தன் சாமர்த்தியத்தை சொல்லிச் சொல்லி மாப்பிள்ளை உறவை மணக்கச் செய்தது மறக்கவே முடியாத நினைவுதானே. அதற்கு பின்பு அந்த மச்சான் மேல் உறவுகள் கேலி செய்து விளையாடிய, மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் எழுதிப் புரிய வைக்க முடியாது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடை பெற்ற இந்த நிகழ்வை நினைக்க செய்த பொண்ணு பார்த்த கதை சொன்ன .....ராணிக்கு நன்றி.