Monday, August 9, 2010

ஏலம் எடுத்த கதை...

அய்யா வணக்கம். ஞாயமா அய்யோ வணக்கமுன்னு தான் ஆரம்பித்து இருக்க வேணும். ஏன் என்றால் நான் சொல்லப் போகும் கதை அப்படிப்பட்டதுங்க. போன வாரம் பேப்பரில் ஒரு விளம்பரம். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாங்க எங்க பேப்பர் பார்க்கிறோம்? இந்த இணையத்தில் இணைந்ததிலிருந்து பேப்பராவது ஒண்ணாவது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த காகிதத்தை கண்ணுலை பார்த்தாத்தான் பொழுதே விடியுது. அப்படி ஒருபழக்கம் ஏற்பட்டு இருக்குது.

விளம்பரத்துக்கு வருவோம். அரசு அலுவலகம் ஒன்றில் அலுவலர்கள் பயன்படுத்திய வாகனம் ஏலம் விடுவதாகவும், ஏலம் எடுக்க விரும்புவோர்கள் இன்ன தேதியில் இத்தனை மணிக்கு அலுவலகம் வந்து ரூ.5000 பிணையத் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம்...என்ற விளம்பர அறிவிப்பு. இதைப் பார்த்த எனக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர் உடனே என்னை அழைத்து, ‘உங்களுக்கு இந்த அலுவலக நடைமுறை ஓரளவு தெரியுமே, நீங்கள் ஏலத்தன்று சென்று பிணைய தொகை கட்டி எப்படியாவது அந்த வாகனத்தை ஏலத்தில் இன்ன விலைக்கு தோதா வந்தா எடுத்து வாருங்கள்’ எனக்கூறினார்.
நானும் ஆகா!! நம்மையும் நம்பி இப்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாரே!! வேலை இல்லாதற்கு இது ஒரு நல்ல வேலைதான் என்று எண்ணிக் கொண்டு ஏலத்தன்று ஜம்மென்று புறப்பட்டேன்.

நம்ம பிரமுகரும் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தார்.

‘அய்யா வணக்கம். வண்டியை போயி பார்த்திர்களா?’

‘ஆமாங்க...நல்ல நெம்பர்.. இன்ன விலைக்கு வந்தா எடுக்கலாம்.. நம்ம வாகன ஓட்டியை அனுப்பி வண்டியை பார்த்து விட்டேன்’ என்றார். ‘இன்ன விலைக்கு வந்தா எடுங்க’ என தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி..தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பினார். துணைக்கு தொழில்நுட்ப பணியாளர் வாகன ஓட்டுனர். அலுவலகம் சென்றோம்.

நல்ல நேரம் பார்த்து முன் பிணைய தொகை ரூ.5000 செலுத்தி காத்திருந்தோம். ஏல நேரம் மதியம் மணி 3.00. சரியாக மணி 2.40. ஏலம் நடக்கும் அறை முன்பு கூட்டம் கூடியது. நாங்களும் சென்றோம். அப்போது ஒருவர் கூறினார்..EMT (முன் வைப்பு தொகை) செலுத்தியவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்..எனக்கூறினார். அப்போது தான் தெரிந்தது என்னையும் சேர்த்து 22 நபர்கள் EMT கட்டியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் கூறினார்...‘எல்லோரும் நல்லா கவனிங்க, ஏலம் கேட்டு கவர்மெண்டுக்கு வீணாக காசை கட்டுவதற்கு EMT கட்டியவர்களுக்கு ஆளுக்கு ரூ.1500 தருகிறேன் எல்லோரும் வாங்கி கொண்டு சென்று விடுங்கள்’ என்று.. நானும் கூறினேன்..நான் வேணும்ன்னா ஆளுக்கு ரூ. 1500 தருகிறேன் எனக்கூறினேன். அதில் இன்னொருவர் கூறினார் நான் ஆளுக்கு ரூ.2000ஆக தருகிறேன்... என்று. இதெல்லாம் முடியாது. ஏலமே கூறிக்கொள்ளலாம்..எனக்கூறிக்கொண்டு ஏல அரங்குக்குள் சென்றோம்.

அப்போது உடன்பிறப்பு சீருடையில் நானும் பணம் கட்டியுள்ளேன் என உடன்பிறப்பு வந்தார். ஆளுக்கு ரூ.2500 தருகிறேன் பேசாம வாங்கிட்டு நடையை கட்டுங்க..மீறி ஏலம் கூறினா..என்ன நடக்கும்.. அப்படிங்கிறதை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் என அறிவித்தார். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு ரூ.2500 வாங்கி கொண்டு உடன்பிறப்பை தன் ‘உடன்பிறப்பா’ எண்ணி ‘வாழ்த்தி’ச் சென்றார்கள். நாம ஒரு கணக்கு போட்டோம். வாகனத்திற்கு அரசு விலை ரூ.37000.. அதனுடன் ரூ.1000 சேர்த்து ரூ.38 ஆயிரம் அலுவலகத்தில் செலுத்த வேண்டுமாம்.

உடன்பிறப்பையும் சேர்த்து 22 ல் ஒண்ணு போக 21க்கு தலா ரூ.2500..மொத்தம் ரூ.52500.. அலுவலகச் செலவு ரூ.10000 என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாம். அதையும் சேர்த்து 38+52500+10 ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஐநூறு. நம்ம இலக்கு மீறி போனதாலும், உடன்பிறப்பின் மேல் உள்ள பாசத்தினாலும் (பயம் என நினைத்து உடன்பிறப்பின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் நான் பொறுப்பல்ல) ரூ.2500 அன்புடன் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

அய்யா நம்ம கதையில் வந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே..உண்மையை தவிர வேறில்லை.. அரசின் மானம் மரியாதை கருதி அலுவகத்தின் பெயர் பதிய படவில்லை. கொள்முதல் ரூ.5000 லாபம் ரூ.2500.. அலுவலகத்தை பார்த்து நின்னு ஒரு ராயல் சல்யூட் அடித்து விட்டு வந்தேன். ரூ.5000 மூலதனத்தில் மூன்று மணிநேரத்தில் ரூ.2500 லாபம். நல்ல வேலையா இருக்குதுல்ல..

அடுத்து வாகன ஏலமின்னு பத்திரிக்கையில் வந்தா சொல்லி அனுப்புகிறேன். மறக்காம வாங்க..எல்லோரும் சேர்ந்து கவர்மெண்டை வாழ வைப்போம்ங்க..


25 comments:

சிநேகிதன் அக்பர் said...

அந்த ஐயாயிரம் திருப்பி கிடைக்குமா கிடைக்காதா?

சிநேகிதன் அக்பர் said...

சென்னை பயணம் எப்படி இருந்தது? அது பற்றியும் எழுதுங்கள்.

க.பாலாசி said...

//ரூ.5000 மூலதனத்தில் மூன்று மணிநேரத்தில் ரூ.2500 லாபம். நல்ல வேலையா இருக்குதுல்ல..//

அடடா...இந்தமாதிரி சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கமாட்டுதே.... அடுத்தமுற கண்டிப்பா சொல்லியனுப்புங்க வந்திடுறேன்...

//சிநேகிதன் அக்பர் said...
அந்த ஐயாயிரம் திருப்பி கிடைக்குமா கிடைக்காதா?//

அந்த 5000 + 2500 சேர்த்து கிடைத்ததாக சொல்கிறார்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இப்படியும் நடக்குதுங்களா.. சரியாப்போச்சி..

நாடோடி said...

இது தான் ப‌ண‌ம் போட்டு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிற‌தா?..... அடுத்த‌ முறை எங்க‌ளுக்கும் சொல்லுங்க‌.. வ‌ண்டி எல்லாம் வேண்டாம் ந‌ல்ல‌ ட்ரெயினா பாருங்க‌, அப்ப‌ தான் அமொண்ட் ந‌ல்லா தேறும்.:)))))))))))

vasu balaji said...

அண்ணே இப்புடி வேறயா:))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மொத்தம் ஒரு லட்சத்து ஐநூறு. //


கண்டம் ஆன வண்டிக்கு இது கொஞ்சம் அதிகத் தொகையாக தெரியவில்லையா சார்.., ஒருவேளை பஸ் மாதிரி ஏதாவது இருக்குமோ..,

Unknown said...

அடுத்த ஏலத்துக்கு கட்டாயம் மெயில் அனுப்புங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கீட்டீங்க போங்க..

அந்த கணக்கு நல்லா இருந்தது.

ஆமாங்க அந்த உடன்பிறப்பு அவ்வளவு ஏமாந்த சோனகிரியா... சந்தேகமா இருக்கே..

பழமைபேசி said...

அண்ணா, வாழ்த்துகள் அந்த 2500க்கு!!!


ஆனா, அந்த வண்டியோட விலை இன்னும் அதிகமா இருந்திருக்கலாமோ? அல்லது, சில பல வண்டிகளோ??

தாராபுரத்தான் said...

ஏலத்தை பற்றி படித்த அனைவரும்...பல சந்தேகங்கள் கேட்டுள்ளனர்..மீண்டும் உண்மையைத்தான் கூறுகிறேன்..75000 மதிப்புக்குரிய வாகனம் என்று ஊங்கு ஒட்டுனர் மதிப்பிட்டார்..ஆனால் ஏலம் எடுத்த பின்பு இன்னொருவர் சொல்லுகிறார்..எடுத்த விலை பரவாயில்லைன்னு ..யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..என பாட்டு பாட வேண்டியது தான்.அப்புறம்..அய்யாயிரம் திருப்பி கிடைக்குமா? எனக் கேட்கிறார்கள்..ஏலம் முடிந்த அடுத்த வினாடியிலே திருப்பி வாங்கிக்கலாம்..அடுத்த ஏலத்துக்கு வாங்க..

Lakshmi said...

உங்களின் கருத்து நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

ஹுஸைனம்மா said...

அட, இது நல்லாருக்கே!! அய்யா, இதுக்குன்னு ஏஜெண்டுகள் இருக்காங்களாங்க - என் சார்புல ஏலத்துல கலந்துக்க? ஒரு நாளைக்கு நாலஞ்சு ஏலத்துல கலந்துகிட்டா இதுவே நல்ல வருமானமாச்சே!!

:-)))))))))

கண்ணகி said...

ஒரு புதிய தொழில் அறிமுகத்துக்கு நன்றி.....?????

Anonymous said...

அப்ப அந்த பணம் போனது போனதுதானா. திரும்பக்கிடைக்காதா

ஈரோடு கதிர் said...

||அடுத்த ஏலத்துக்கு வாங்க..||

குருவே கூப்பிடுங்க

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. ஏலம் எடுக்கறதுல இவ்ளோ உள் விஷயமா??

தகவலுக்கு நன்றி.. அடுத்த முறை ஏலம் எடுக்க முதல் சொல்லிட்டு போங்க.. கும்பலா கூட வரதுக்குத் தான். :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

/////அந்த ஐயாயிரம் திருப்பி கிடைக்குமா கிடைக்காதா? ///

எனக்கும் அதே கேள்வி...!!

priyamudanprabu said...

அடுத்து வாகன ஏலமின்னு பத்திரிக்கையில் வந்தா சொல்லி அனுப்புகிறேன். மறக்காம வாங்க..எல்லோரும் சேர்ந்து கவர்மெண்டை வாழ வைப்போம்ங்க..

/////

HA HA இப்படியெல்லாம் நடக்குதா ......

வடுவூர் குமார் said...

ப‌ர‌வாயில்லையே!! குடுக்க்கிற‌ இல‌வ‌ச‌மெல்லாம் போதாது என்று நினைத்து இப்ப‌டி ஒரு ப‌க‌ல் கொள்ளையா?
ஆண்ட‌வா! சீக்கிர‌மா காப்பாத்து.

அண்ணாமலை..!! said...

லாபத்தைப் பொதுவில்(பார்ப்பதற்கு!) வைத்த ஐயா வாழ்க!
:)

ம.தி.சுதா said...

சமூகத்திற்கு தேவையான ஒரு தகவல் ஐயா... தொடருங்கள்..

ம.தி.சுதா said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

நேரமிருந்தால் நம்ம வீட்டுக்கும் வாங்க.. ஐயா, கீழே சொடுக்கவும்
நனைவோமா?

ப.கந்தசாமி said...

ஆமாங்க, கவர்ன்மென்ட் கான்ட்ராக்ட்டுக்ள எல்லாம் இப்படித்தான் டெண்டர் உடறாங்க, தெரியாதுங்களா. அதுக்குப்போனா லட்சக்கணக்குல பொரட்டுலாங்க. என்ன கொஞ்சம் நெளிவு சுளுவு தெரியோணும்.