Showing posts with label வளர்ப்பு. Show all posts
Showing posts with label வளர்ப்பு. Show all posts

Tuesday, September 21, 2010

இந்த கதை எப்படி?

வாழ்க்கை ஒரு போராட்டம் பல பேருக்கு. வாழக்கை ஒரு தேரோட்டம் சில பேருக்கு. இந்த காலத்தில் பெண்ணை பெத்தவங்க பெண்ணை வளர்த்தி படிக்க வைச்சு, வேலைக்கு அனுப்பி அழகு பார்த்து, ஆளானதும் இனி நாம துள்ள முடியாதே என வருத்தப்பட்டு பின்பு மகிழ்ந்து..காலம்ஓட...பொண்ணு ஜாதகத்தை எடுத்து சோசியம் பார்க்க அலைந்து நல்ல வரன் கிடைக்க வேண்டி..பெண்ணின் ஜாதகத்தை நகல் எடுத்து விநியோகித்து....நல்ல ஜாதகம் இருக்குது அப்படீன்னு தகவல் வந்தா மனசு இறக்கை கட்டி பறந்து...

பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரிந்தா மகிழ்ச்சியா எதிர் நோக்கி..அவர்களுக்கு பிடித்தா நமக்கு பிடிப்பதில்லை...நமக்கு பிடித்தா அவர்களுக்கு பிடிப்பதில்லை என சலித்து...கையில் இருக்கும் காசுயெல்லாம் கரைந்த நிலையில் பக்கத்து வீட்டு வரனே வந்து கதவைத்தட்ட, தடபுடலா திருமணத்தை நடத்த எண்ணி...காஸ்ட்லியான கல்யாண பத்திரிக்கையில் ஆரம்பித்து..இது நமக்கு தேவையா என யோசித்து..கல்யாணம் முடிந்து..அப்பாடாயென உட்கார்ந்தா..அப்பத்தான் கடமையே தொடங்குதாம்.. எல்லாம் இருக்குதுன்னு அக்கா (சம்பந்தி) சொல்லுவாங்க. என்னதான் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவங்களா இருந்தாலும் நம்மாலை இருக்க முடியுதா?

அருவாமனையிலிருந்து கறிவேப்பிலை வரை பார்த்து பார்த்து வாங்கி தனிக்குடித்தனம் வைத்து ...அடிக்கடி விசிட் செய்து .. விசிட் செய்யும் போதெல்லாம் லக்கேஜ்களுடன் மகள் குடித்தனம் நடத்தும் அழகை பார்த்து ரசித்து திரும்பினால்..மகளிடம் இருந்து அம்மாவுக்கு சிறப்புச் செய்தி...நாட்கள் தள்ளிபோய்விட்டது என்று...உடனே இந்த அம்மா மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து...போன வாரந்தானே திரும்பினோம்..மறுபடியும் துணைக்கு கெளரவ அழைப்பாளரா நம்மையும்....

காசை செலவழித்தால் மட்டும் போதாதுங்க..கால முழுவதும் பொண்ணுக்கு நாமதான் துணையிருக்கணும்..அதுதான் கெளரவம்..பாசம்...அப்படின்னு நமக்கே வகுப்பு எடுத்து...மருத்துவ பரிசோதனையில் ஆரம்பிக்கும் செலவு...அடுத்து வளைக்காப்பு..நமக்கு எதிரி வருகிற சம்மந்தியோ..மாப்பிள்ளைகளோ அல்ல...நம்ம வீட்டு தெய்வங்கதான்...வளைக்காப்புக்கு இத்துணை பவுனுக்கு வளையல் போடவேணும் என தூண்டில் போட்டு மீனைப்புடித்து சாதித்து..வளைக்காப்புக்கு எத்தனை பேரை அழைப்பது..எப்படி சமையல்..எங்கு விழா?..என ஒரு மினி திருமணமே நடத்தி..அப்பாடா என இருக்கமுடியுதா?

எப்படா வரும் மகப்பேறுநாள் என எதிர்பார்த்து ..மகளுக்கு வலி என அறிந்ததும் அத்தனையும் மறந்து ஆளாய் பறந்து..எவ்வளவு பணம் செலவானலும்..என் மகளுக்கு வலியே தெரியக்கூடாது...என மருத்துவத்திற்கே மருத்துவம் பார்த்து....அஞ்சு நிமிடத்தில் அழுகை சத்தம்.... அனுபவித்தவர்கள் நினைத்து பாருங்கள்.. அனுபவிக்காதவர்கள் கால ஓட்டத்தில் கண்டிப்பாக அனுபவிக்க வாழ்த்துக்கள்...

என்னடா இது முற்றுப்புள்ளி வைக்காமையே கதை எழுதி கிழித்திருக்காரு.. அப்படீன்னு யாராவது நினைக்க போறீங்க..மூச்சு விட முடிந்தா தானே முற்றுப்புள்ளி வைப்பது. நேத்து ஆரப்பிச்ச மாதிரி இருக்குது. நேற்று பொண்ணு சொல்லுது ‘பிறந்தது பொண்ணா இருந்திருந்தா..பேசாம உங்க பராமரிப்பிலேயே விட்டுவிடலாம் என்று இருந்தேன்.. பையனா போச்சே.. உங்களை நம்மி விட முடியாது..செல்லம் கொடுத்தே கெடுத்து விடுவீர்கள்’ என்று. இந்த காலத்திலே பையனைத்தான் பொத்தி பொத்தி வளர்க்கணும்..அன்பால கட்டிப்போட்டு அறிவை புகட்டணும். அப்பத்தான் உங்களை மாதிரி அம்மா பேச்சை தட்டாம கேட்கிற மாதிரி என் மகன் அவன் மனைவி பேச்சை ஆயுள் முழுவதும் கேட்பான் அப்படீங்குதுங்க.. எப்படி இருக்குது கதை.. வணக்கமுங்க.