Monday, February 21, 2011

ஏமாந்த கதை - 1

புது வருடம் பிறந்து புறப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகப் போகுது. பொங்கல் வந்துதிட்டு போயிருச்சு. வழக்கமா வாழ்த்துக்களைச் சொல்லி வாழ்த்துக்களைப்பெற்று எப்படியோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லோரும் எல்லாமும் இலவசமா பெற்று நல்லா இருப்போம்...எவன் செத்தா நமக்கென்ன?

எனக்கு உறக்கம் போயி இரண்டு மாசம் ஆச்சு.. எனது ஒய்வுக்கு ஒய்வு கொடுக்க சிலர் விரும்பியதால் தொழிலதிபர் ஆகலாம் என்ற நல்ல ஆசையில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.. என்ன தொழில்? என்ன விபரம்?  என்ற விவரத்தை எல்லாம் சொல்ல கூடாதல்ல.. அது தொழில் ரகசியம். உங்ககிட்ட சொல்லாமையா...பொறுமையா இருங்க சொல்லுகிறேன்.

கரும்பு வியாபாரம் பண்ணுன கதை ஆகிடகூடாதல்ல... அது என்ன கரும்பு வியாபாரம்.. நம்ம வாய் உளறிக்கொட்டி  எப்பவும் மாட்டிக்கும்.. அதையும் சொல்லுகிறேன். அது சரி.. இப்ப நாம எதற்காக வந்தோம்.. என்ன விபரம்.. அப்படிங்கிறதை மட்டும் முதலில் பார்ப்போம். இப்ப நாம எல்லோரும் மே மாதம் விரைவில் வராதா என ஆவலோடு எதிர்பார்க்கிறோம்... மே மாதத்தை நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குதில்ல. அதுக்கு பரிகாரமா மேமாதத்திலேயே முடிவுக்கு வரவேண்டும் என்ற நல்லாசை.
 
நாட்டிலே எங்கபார்த்தாலும் தேர்தல் காய்ச்சல். யாரை தொட்டு பார்த்தாலும் வெது வெதுன்னு இருக்குது. கதை முடிந்தது அப்படின்னு பலபேரு. சிலர் கூட்டணியை பொறுத்துதான் சொல்ல முடியும் அப்படிங்கிறாங்க. இன்னும் சிலர் இலவசம் வெற்றி பெறும் அப்படின்னு குண்டை துக்கி போடறாங்க. பாதாளம் வரைக்கும் பாய வரப்போகுது, எங்க பக்கம்மெல்லாம் இப்பவே வந்துவிட்டது அப்படிங்கிறாங்க. எனக்கு உறக்கமே வர மாட்டேன்ங்குது. 

தமிழ்நாட்டை ‘ஆண்டவனே’ மீண்டும் ஆண்டால், கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது அப்படின்னு சொல்ல யாராச்சும் வருவாங்களா.. என சிலர் ஏங்கி தவிக்கிறாங்க. தினம் தினம் சுடசுடச் செய்திகள்.. கைது  ஒருநாள். டெல்லிக்கே ஓடி இவரு ஓண்ணை சொல்ல  இங்க அவரு ஒண்ணை சொல்ல, உடனே மாத்தி சொல்ல நெருங்கி வருகிற மாதிரியும் தெரிய வைத்து வராத மாதிரியும் புரிய வைத்து..படிக்கிறவனயெல்லாம்  கேனபயலா நினைத்து..வார்த்தைகளில் பம்மாத்து பண்ணி ஊரை ஏமாற்ற போறாங்க. இதே வார்த்தைகளுக்கு மயங்கிதானே நம்மை நாம் தொலைத்தோம். நம்மைன்னு சொல்லலை.. என்னைன்னு சொல்லிக்கிறேன்.  

அப்ப வருடம் 1965..நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று இருந்த கால கட்டம். அப்பத்தான் நான் ஏமாந்தேன். எப்படின்னு நான் சொல்லுவதைவிட..என் வயதை ஒத்த கவி வைரமுத்து அவர்களின்...இதுவரை நான் என்னும்தொடரில் இப்படி சொல்கிறார்..அதில் கொஞ்சம் படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

(அந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தமிழ் இயக்கங்களும் அவற்றின் ருசியான வாக்கியங்களும் மொழியின் மீது நான் கெண்டிருந்த பற்றை வெறியாய் வளர்த்தன, ........ரின் வாலிப வாக்கியங்கள் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்தன. அடடா பரவசமூட்டும்  அந்த பதினாறு வயது வார்தைகளுக்கு இன்னும் வயசாகி விடவில்லை.  

நகை நட்டு ஏதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள் புகையொத்த கொடி போல நெளிந்தாடும் உருவத்தாள் இடையோ ஒரு பிடிக்கும் காணாத இளம்பிடி இதழ்களிலோ தேன் ஒரு படி. இந்த வாசனை வாக்கியங்களை நாங்கள் உச்சரித்த உல்லாசப் பொழுதுகளில் காற்றும் நின்று கேட்டு விட்டு போனதே...) இப்படி போகுது அவரு கதை.

அந்த கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்குது... எங்க ஊரு வசந்தா தியேட்டர் பேட்டையில் கூட்டம்.. எங்க அண்ணன் தெய்வசிகாமணி அவர்கள் கூட போனேன். அண்ணன்தான் மாலைமணி முரசொலி போன்ற பத்திரிக்கைகளை எனக்கு  வாங்கி கொடுத்து கர கர குரலில் அடுக்கு மொழிகளைப் படிக்க வைத்து ரசிப்பார். அப்ப தெரியவில்லை அது அடுக்கு மொழியில்லை ‘கொடுக்கு’ மொழின்னு. அந்த வார்த்தை ஜாலங்களில் சிக்கித்தானே என்னை போன்றவர்கள் உடன்பிறப்புக்களாக மாறி எவன் சொல்லுவதையும் நம்பாம அவரு என்ன சொன்னாலும் நம்பி நாசமாப்போனாம். சோலையின் நடுவிலே சோசலிச தந்தை.. அப்படின்னாரு.. நாங்களும் ஊர் ஊருக்கு திண்ணை பேச்சாளர்களா மாறி அவரு சொன்னதை எல்லோரையும் நம்ப வைத்தோம். 

அண்ணா இறந்தாரு.. நாவலரை ஓரங்க கட்டி எம்.ஜி.ஆரை வளைத்துப்போட்டு அண்ணன் மன்னன் ஆனாரு.. அப்புறம்.. காங்கிரஸ் ஒடையுது... மன்னன்  மன்னாதி மன்னன் ஆன கதை.. நான் முதன் முதலில் ஓட்டுப் போட்ட கதை..  இன்னும் பல விபரங்கள்.விரைவில்...வணக்கமுங்க...



.

Monday, December 20, 2010

சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க..

வணக்கம். மாதத்திற்கு ஒண்ணாவது பதிவு கொடுக்கவில்லையென்றால் நம்ம சொந்தங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்து எதையாவது எழுதி விடுவது என முடிவுக்கு வந்துட்டேன்.

தினமும் அதிகாலையில் எழுந்து நெட்டை கனெக்சன் கொடுத்துவிட்டு சுமார் 2கிமீ நடந்திட்டு வருவது.. வந்து மெயில் பார்ப்பது.. பார்த்து.. நம்ம பிளாக்கில் யாராவது புதிய வரவுகள் வழி தெரியாமல் வந்துவிட்டார்களா.. வந்திருந்தா அவுங்க பக்கம் போயி பார்த்து படித்து கருத்தை பதிவு செய்துவிட்டு வருவது. இப்படியே காலம் தள்ளிவிடலாம் என எண்ணி கொண்டு இருந்த வேளையில்...... தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு...

ஈரோட்டுக்கு இருபத்தாறாம் தேதி போகணும். மெனுவேற போட்டு நாக்கில் எச்சை ஊற வைத்துள்ளார்கள். பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் ஈரோடு போரேன் அப்படின்னு சொன்னா என்ன வேலயா போறீங்க...அப்படின்னு ஒருத்தரும் கேட்பத்தில்லை. நானே.. நம்ம   உலகம் முதல் உள்ளுர் வரையுள்ள நம்ம சொந்தங்களைப்பற்றி சொல்ல  மிரள ஆரம்பித்து விட்டார்கள். நானும் இருபத்தாறாம் தேதி வரை பொறுங்க..அப்புறம் இருக்கு.. மனசுக்குள் போட்டோ ஆதாரத்துடன் வருகிறேன் அப்படீன்னு நினைத்து  கொண்டு இருக்கிறேன்.
 

 

 
சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்




! . தமிழ் 25 . !: ஒரே பார்வையில் பயனுள்ளவை பத்து

! . தமிழ் 25 . !: ஒரே பார்வையில் பயனுள்ளவை பத்து

Monday, November 1, 2010

ஒரு எழுத்துப் பிரச்சனை...ங்க...

எல்லோருக்கும் வணக்கம். நான் நலம். நீங்க நலமா...பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு. எதையாவது பேசனும் அப்படின்னு நெனைச்சுகிட்டு இருந்தப்போ..மாமா என்ற அழைப்புடன் உறவினர் ஒருவர் வந்திருந்தார். வாங்க..வாங்க என வரவேற்று அமரவைத்துபோது.. அழகா தட்டத்தில் தண்ணிருடன் உங்க மொழியில் தங்கமணி.. தண்ணிர் கொடுத்தபடி வரவேற்பு... காபி சாப்பிடுகிறீர்களா?, சாப்பிட்லாம்ங்க....நேற்று இங்க நல்ல மழை போல இருக்குதுங்க.. நம்ம ஊருபக்கம் மழை இல்லைங்களா.? இங்கே போல இல்லைங்க..சும்மா சர்வ வெள்ளம் போல... இப்படியே போச்சுன்னா.. குடிதண்ணிக்கே திண்டாட்டம் வந்திரும்ங்க....புதிதாக பார்க்கிறவர்கள் யாரும் இப்படித்தான் பேச்சை தொடங்குவார்கள்..

ஒரு விசயமாய் உங்களை பார்க்கலாம்மின்னு வந்தேனுங்க..எனது மகள் ஹரிணி பிறப்புச் சான்றிதழில் ஒரு தப்பு ஏற்பட்டு விடட்துங்க..அதை அப்ப சரியா பார்க்காமல் படிக்காமல் விட்டது தப்பா போச்சுங்க..என அவரின் மகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துக்காண்பித்தார். எனது பெயரையும் எனது மகளின் பெயரையும் சரியான உச்சரிப்புடன் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். எனது மனைவி பெயரை கோகிலவாணி என்பதை கோகிலமணி என்றுபதிந்து இருக்கிறது. என் மனைவியின் பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை அனைத்திலும் கோகிலவாணி என்றே உள்ளது..என்ன செய்யலாம்..மாற்றலாமா..இப்படியே விட்டு விடலாமா.. இதில் ஒண்ணும் பிரச்சனையில்லைங்க.. ஒரே எழுத்துத்தான் பிரச்சனை.. நம்ம மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி..ஆகா..வேலை இல்லாம வீட்டில் அதைஎடு.. இதை கொண்டா.. அப்படின்னு அதிகாரம் பண்ணி காலத்தை கடத்துவதிலிருந்து இரண்டு நாளைக்கு விடுதலை.. கவலையை விடுங்க..மாமா எதற்கு இருக்கேன்..நான் பார்த்துக்கொள்கிறேன். முகவரி சான்றுகொடுத்து பெயரை மாற்றி கொள்ளலாம் எனச் சொல்லி...கவனமா படியுங்கள்..நகலை மட்டும் கொடுத்து விட்டு செல்லுங்கள்..மீதியை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன்.

மறுநாள் அய்யா அதி காலையில் எழுந்து சுபயோக சுபவேளை பார்த்து திருத்த பிறப்புச் சான்றிதழ் வாங்க 35 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். காலை மணி 10.30. பிறப்பு இறப்பு பதிவாளர் அறை திறந்தே இருந்தது. யாரையும் காணோம். சரி எங்காவது காபி..கீ.பி..சாப்பிட சென்று இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நின்று கொண்டே இருந்தேன். கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. யாரும் வருவதாக தெரியவில்லை. மே18 யே பொறுத்தவன் இதை பொறுக்க மாட்டேனா. சரியாக 12.24 உதவியாளரைப் போல் ஒருவர் ஒடி வந்து எதையோ எடுத்துக்கொண்டு ஒடினார். ஏதாவது கேட்கலாம் என்றால் ஆள் ஒடியேவிட்டார். சரியாக மணி 1.20 இரண்டு பேர் வந்தார்கள்.ஒருவர் ‘என்னங்க வேணும்? எனக்கேட்க, நான் என் கையில் இருந்த விண்ணப்பத்தை காட்ட..

அதை படித்து விட்டு...அடடே.. ஒரு எழுத்து பிரச்சனை.. சார் அங்கே செல்போன் பேசிக் கொண்டு இருக்காரே அவர்தான் உங்க பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். அவரைப் பார்த்தேன். அவரோ இன்னொரு பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். செல் போனும் கையுமாகவே இருந்தார். இடையில் குறுக்கிட்டால் ‘இன்று போய் நாளை வா’ என சொல்லி விடுவாரோ என்ற பயம். அவரே பேசி முடித்து விட்டு என்னை பார்க்க..நான் உடனே விண்ணப்பத்தை கொடுக்க

அவர் வாங்கி படித்து விட்டு...நாங்கள் எற்கனவே கொடுத்த அசல் சான்றிதழை கேட்டார். நான் ‘அசல் எடுத்து வரவில்லைங்க’ எனச் சொல்ல. அவர் ‘அப்படியா..அப்ப அசல் சான்றிதழ் எடுத்து கொண்டு நாளை வாருங்கள்’ என்றார். எனக்கு சுருக்கென்றது. தப்பு நம்ம மேலேதான் என எண்ணிக்கொண்டு, நம்ம மாப்பிள்ளைக்கு அடித்தேன் போனை. ‘என்னங்க அசல் சான்றிதழை கொடுக்காம போய்விட்டிர்கள்’ என்றேன். ‘நீங்கதானே மாமா நகலைமட்டும் கொடுங்க போதும்’ என்றீர்கள். ‘அப்படிங்களா..தெரியாம சொல்லிட்டேன்.. நாளைக்கு என்னிடம் சேரும்படி அசலை கொடுத்து அனுப்புங்கள்’ என்றேன். சரிங்க ஒருநாள் எப்படியோ நகர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலை ஆள்கின்றவரை வணங்கிவிடடு. அசல் சான்றுடன் சரியாக பத்து மணிக்கு சென்றேன். நம்ம அதிகாரி இருந்தார். நல்ல நேரம் என எண்ணிக் கொண்டு வணக்கம் வைத்தேன். அசல் சான்றுடன் வந்திருக்கிறேன் என்றேன். நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் பொறுங்க அறைச்சாவி வரட்டும் என்றார். சாவி வந்தது. உள்ளே சென்று நம்ம விண்ணப்பத்தை ஆய்வு செய்தார். வெளியே வந்து, அய்யா குழந்தை பிறந்த மருத்துவமனையிலிருந்து திருத்த அறிக்கை பெற்று வரவண்டும் என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘பின்னே’ என்றார். ஓ..நமக்கு நேரம் சரியில்லை என்ற நம்பிக்கையில் தெரிந்த நண்பர் தயவில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்றேன். விசயத்தை சொன்னேன். ஒண்ணும் பிரச்சனையில்லை கோகிலவாணி என்ற பெயருக்கு புருப் நகலுடன் எழுதிக் கேட்டார்கள். நல்லவேளை ஓட்டுனர் உரிமம் கையில் இருந்தது. எழுதிக் கொடுத்தவுடன் வாங்கி கொண்டு ‘இன்று போய் நாளை வாங்க’ என மரியாதையாக சொன்னார்கள். மரியாதையா சொன்னதால் மரியாதையாய் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் ஆண்டவர்களையும், ஆள்பவர்களையும் நினைத்துக் கொண்டு மருத்துவமனையில் திருத்த அறிக்கையுடன் சென்றேன். அய்யா அன்புடன் வரவேற்றார். வாங்கிப் பார்த்தார். விண்ணப்ப வில்லை ஒட்டி பெட்டியில் போடச் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். எப்ப வருவதுங்கு எனக் கேட்டேன். மறுநாள் மாலை வரச்சொன்னார். சென்றேன்..வென்றேன்...

சான்றிதழிலுடன் வெற்றிப்புன்னகையுடன் வெளியே வந்தேன். வம்பர் ஒருவர் சந்தித்தார். மகிழ்ச்சியுடன் தேநீர் வாங்கி கொடுத்து நலம் விசாரித்ததார். என்ன விசியமா வந்தீங்க என்றார். நான் ஒரு வாரமாக அலைந்து ஒரு எழுத்தை திருத்த கதையைச் சொன்னேன். ‘அடப் போய்யா, நீயெல்லாம் எப்படியய்யா அரசு பணியில் இருந்தாய் ஒரு இருநுறு ருபாயை கொடுத்திருந்தால் அன்றே அந்த சான்று கிடைத்திருக்கும்’ என்றார். நண்பா கொடுக்க நான் ரெடி, யாரிடம் கொடுப்பது. யாரும் என்னிடம் கேட்கவில்லையே என்றேன். ‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார். ‘அப்படிங்களா..’என கேட்டு விடைபெற்று வீடு திரும்பினேன்.

வீட்டுத்தொலைக்காட்சியில்..........சுத்துதே சுத்துதே பூமி..போதுமடா போதுமடா சாமீ.. என்கிற பாட்டு. இதனால் அறிவிப்பது என்னவென்றால் சொந்தங்களே... பிறப்பு இறப்பு சான்றுகள் பெறும்போதே கவனமா பொறுமையா எழுத்துக்கு எழுத்து படித்து வாங்குங்கோ. அப்படி வாங்கின்னா உங்க வீட்டில் யாருக்கேனும் ஒரு வாரம் அலைச்சல் மிச்சம் சொந்தங்களே. தீபாவளி யாராவது கொண்டாடினால் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...சுனா..பானா.

***********************************************

Friday, October 1, 2010

ரியல் எஸ்டேட் பிசினஸ்...


கொட்டக்காடு, கோமுட்டி தோட்டம், சாமியங்காடு, குளக்காடு, பாலமரத்துக்காடு, பனைமரத்துத் தோட்டம், ஓட்டையங்காடு, சின்னக்குரை, அனுப்புச்சிகாடு என்னுங்க இது? நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறப்ப... அதாவது 1965/1975 வருடங்களில் இந்த பெயர்களில் விளங்கிய விளைநிலங்கலெல்லாம், அண்ணா நகர், கண்ணன் நகர், சென்னியப்பா நகர், ஹவுசிங் யூனிட், லாயர்ஸ் காலனி, லட்சுமி நகர், ஜீவா நகர் என பெயர் மாறி கான்கீரீட் பயிர்களா உருமாறி காட்சியளிக்குது. என்னைப்போல் உள்ளவங்களுக்கு அந்த காடு தோட்டம் கண்ணுக்குள் வந்து போகுது.

நல்ல விவசாய பூமியெல்லாம் கண் முன்னே கான்கீரிட் பூமியாகுது. அதுமட்டுமல்ல காடு மேடெல்லாம் கல் நட்டு சைட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் அங்கிகெனாதபடி எங்கும் பிரகாசமாய் கொடிகட்டி பறக்குது. ஆளப்பிறந்த பாதி பேருக்கு இது தான் வேலை. மீதிப்பேருக்கு என்ன வேலை. அதை நீங்கதான் சொல்ல வேணும். இந்த பூமி பெயர்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லுவார்கள். அதை கேட்கவே சுவராசியமாக இருக்கும். ஊருக்கு ஊரு அண்ணா நகர். நம்ம அண்ணாவை நினைத்து பெயர் வைத்தார்களா? சைட் போட்டவரு அவுங்க அண்ணனை நினைத்து பெயர் வைத்தாரா? ஒண்ணுமே புலப்படவில்லை.

அதாவது பரவாயில்லை..சென்னியப்பன், சம்பத்(இது வேறு சம்பத்துங்கோ) இவுங்க உல்லாம் யாரு? அப்படின்னு என் பேரன் கேட்டால் நான் ஒரு சொல்லணுமே. நம்ம ஊரை கண்டு பிடித்ததே அவுருதான் அப்படின்னு புதுக்கதை ரெடி பண்ணி வைக்க வேண்டும். சரி விவசாய நிலங்களெயெல்லாம் கூறு போட தடை போடுங்க என்று நமது அரசாங்த்திடம் யாராவது ரகசியமாக சொல்லுங்களேன். அதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம் ஏது? அதுவும் சரிதான்.

நம்ம சங்கதிக்கு வருவோம். இப்போ நமக்கு புது சிக்கல் ஒண்ணு உருவாயிருக்கு. நம்ம பேரருக்கு பெயர் வைக்க வேண்டும். நம்ம பேரர் எதிர் காலத்தில் உங்களைப்போல பதிவு திலகமா திகல வேணுமல்ல. அன்பை புகட்ட நானும்...அதுதானுங்க செல்லம் கொடுக்கறது. அறிவை புகட்ட எனது மகளும் மருமகரும் இருப்பார்கள்.

பெயர் வைக்கிற பொறுப்பை நம்ம கிட்ட ஒப்படைத்து விட்டார்கள். என் மூத்தமகள் பெயர் வித்தியப்பிரியா, இளையவள் தமிழினியா. பெரியவள் சொல்கிறாள்.. பெயர் வைத்தே என்னை பழி வாங்கி விட்டீர்களே அப்பா...‘ஆங்கில அகர வரிசையில் வி..எங்கும் கடைசி..எங்கும் காத்திருப்பதே சோதனையா போகிவிட்டது‘ என்று. அதனால் என் அன்பிக்குரிய இணையச்சொந்தங்களே நல்ல தமிழ் பெயராக சொல்லுங்களேன், உங்களிடம் கேட்கச் சொல்லி என் மகள்தான் சொன்னாள். நம்பிக்கையுடன் சான்..பிளாக் எதுக்கெல்லாம் பயன்படுது என எல்லோருக்கும் புரிய வைப்போம்..தெரிய வைப்போம்.

அன்புடன் சூனா பானா.