Thursday, April 29, 2010

பசுமை நிறைந்த நினைவுகள்...

சின்ன வயசிலே கேட்ட கதை. எங்கிட்ட யாரும் கதை கேட்கவில்லை என்றாலும் பதிவுகளில் சின்ன வயதுகளில் கேட்ட கதைகளை படிக்கும் போது அடடே இப்படி நம்ம கிட்ட என்ன கதை இருக்குதுன்னு நெனைக்க தோணுதுல்ல.. நினைத்ததை எழுதுவோமில்ல... நினைச்சதை எல்லாம் எழுதி அதைப் பத்து பேர் படித்து என்ன சொல்லறாங்க..? அப்படின்னு பார்க்கிறதில்ல ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுதுங்க. எப்படியோ பொழுதை ஒட்டினா சரிதான் என்னைப்போல உள்ளவங்களுக்கு...ஆனால் உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பலர் நினைத்தால் படைக்கலாம்...படைப்பார்களா? என பார்க்கத்தானே போகிறோம்..கதைக்கு வருவோம்.


ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது படிக்கும் காலம்தான் நம்ம பசங்க வாழ்க்கையில் சுகமான காலம். கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவு மற்றும் முழுப்பரீட்சை லீவு இந்த மூன்று லீவுகள் வந்தால் போதும் பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அந்த கடைசிப் பரீட்சை எழுதி, வீடு திரும்பும் போது இருந்த மகிழ்ச்சி இன்று வரை இல்லை. அந்த நாட்களை நினைக்க வைத்தவர்களுக்கு மீண்டும் நன்றி. லீவு விட்டவுடனே பெரியம்மா ஊரு, அக்காஊரு...என ஊர்களுக்கு போக ரகளை பண்ணி அன்றே கிளம்பி விடுவோம்.

முதலில் பெரியம்மா வீடு. அங்கதான் தோட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அப்புறம் பெரியம்மா சொல்லுகிற கதைகள்.. ஆகா..லீவு போறதே தெரியாதே. ஊருக்கு போன மறுநாளே பெரியம்மா வீட்டு அண்ணாக்களுடன் தோட்டத்திற்கு புறப்பட்டு விடுவோம். தோட்டத்திற்கு போன வுடனே முதலில் தேடுவது அண்ணாக்களின் அன்றைய ஒரே பொழுது போக்கு...அந்த கால சினிமா பாட்டு புத்தகங்கள். அண்ணாக்கள் சினிமா புத்தகங்களை சேகரித்து அதை ஓலைகளில் சொருகி வைத்து இருப்பார்கள். அதை தேடித்தேடி எடுத்துப் படித்து மனப்பாடம் செய்து கொள்வோம். அப்ப பச்சுன்னு மனசுலே ஒட்டுனதுதான் இன்னுமும் துடைக்க முடியலை.



மாடுகள் மேய்க்க சின்ன அண்ணாவுடன் மேற்கே கொறங்காடு (சுற்றிலும் அடைப்புள்ள காடு) கிளம்பி விடுவோம். அந்த காட்டில் அந்த வெலா மரத்து நிழல்.. புள்ளை பூச்சி பிடித்து விளையாட சின்ன அண்ணா செய்யும் டெக்னிக். .அந்த காலத்திலே கொறங்காட்டுக்குள்ளே மறைவான இடங்களில் பதித்து வைத்திருக்கும் சாராய ஊறல்கள்... மண்தாழியை மண்ணுக்குள் சுமார் ஆறடி ஆழத்தில் பதித்து வைத்து .. அதற்குள் பழங்கள்.. விலாம்பட்டை..அய்யோ அவ்வளவுதான் எனக்கு தெரியும்சாமி... என்ன என்னமோ சொல்லுவாங்க.. நான் பார்த்ததில்லை.. அதையெல்லாம் போட்டு ஊறல் போட்டிருப்பாங்க..அந்த இடத்தை யாரு கண்ணுக்கும் தெரியாம அவ்வளவு டெக்னிக்கலா மூடி வைத்துதிருப்பாங்க. எங்க சின்ன அண்ணா கில்லாடியல்ல. அதை கண்டு பிடித்து .. தோண்டி மூடு கல்லை எடுத்து என்னை கூப்பிட்டு காட்டுவாரு.. அப்ப எங்க சின்ன அண்ணன் எனக்கு எம்.ஜி.ஆரா தெரிஞ்சாரு. இன்னைக்கு வரைக்கும்தான்.

அப்ப அடித்தது பாருங்க ஓருவாடை ..அய்யோ ..இப்போ நெனைத்தாலும் விடமாட்டீங்குது. நாங்க இந்த வேலையில் இருக்க மாடுகள் கொறையை விட்டு கொறை தாவி அடுத்த தோட்டத்து வெள்ளாமையில் புகுந்து விடும். தோட்டத்துகாரர் பார்த்து எங்களை துரத்தினா...நாங்க எடுத்தா ஓட்டம்...எழுத எழுத எல்லாம் ஞாபகம் வருதுங்கோ. எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. புலி வாலை பிடித்த கதையா இருக்குதே. எது எது ஞாபகம் வருதோ அதெ எல்லாம் எழுதி போடறதுங்கிற முடிவோட உட்காந்தாச்சுங்கோ.

மாலையில் வீடு திரும்பும் போது எருமை மாட்டு மேல என்னை உட்கார வைத்து வீட்டுக்கு கூட்டி வருவார் சின்ன அண்ணா. இரவு நிலா வெளிச்சத்தில் உணவு. எல்லோரும் ஒன்றாக அமர்ந்தவுடன் பெரியம்மா உருண்டை பிடித்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்து உண்ணும் அழகை பார்த்திருப்பாங்க...அப்புறம் விளையாட்டு.. படுக்க பத்து பதினொரு மணி ஆகிவிடும். அப்போது ஆளுக்கு ஒரு கதைசொல்ல வேண்டும். எல்லோரும் கதை சொன்னார்கள் ...கேட்டேன்..நானும் கதை சொன்னேன். எதுவுமே ஞாபகமில்லை.ஆனால் எங்க பெரியம்மா சொன்ன திருவாத்தான் கதை மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. அது சரி...பள்ளிக்கூடங்கள்தான் லீவு விட்டாச்சே..உங்கள் செல்வங்களை பெரியம்மா சின்னம்மா ஊருக்கு அனுப்பிச்சாச்சா? இந்த காலத்திலே அங்கே போனாலும் நம்ம செல்வங்கள் மட்டையும் கையுமாவுள்ள இருக்கறாங்க. கிராமங்களில் வேகாத வெய்யில் காடுமேடு எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டாவுள்ள இருக்குது.




அந்த காலத்திலே வெளியவே விடமாட்டாங்க. பகலில் அக்காக்களுடன் புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. நல்ல உடல் பயிற்சியான விளையாட்டு. உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க இத்துடன் முடித்துக்கொள்கிறேன். திருவாத்தான் கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி..வணக்கம்.




44 comments:

VELU.G said...

காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களைதர இயற்கையால் மட்டுமே முடியும் ஐயா

உங்கள் பசுமையான நினைவுகளய் எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

நாடோடி said...

//புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. ///

என‌க்கு தெரிந்து இர‌ண்டு விளையாடுவோம்... ஒண்ணு பாண்டி.... இன்னொன்னு.. வ‌றுத்த‌ புளிய‌ங்கொட்டையில் இருந்து அத‌ன் ஓட்டை ம‌ட்டும் எடுத்து கையின் மொழியில் வைத்து அடித்து ர‌த்த‌ம் வ‌ர‌ வைப்ப‌து.. அப்ப‌டி ர‌த்த‌ம் வ‌ர‌ வைப்ப‌த‌ற்கு அடித்த‌வுட‌ன் கையை சுற்ற‌ வேண்டும்..... இது தான் என‌க்கு தெரியும்....

ப‌ழைய‌ நினைவுக‌ள் அருமை ஐயா?..

vasu balaji said...

ஏற்கனவே இந்த காலத்து பொடுசுங்களுக்கு நம்மள பார்த்தா பொறாமை. இப்புடியெல்லாம் ஏத்தி குடுக்குறீங்களா.:))

பத்மா said...

புளிய முத்து ஊதும் ஆட்டம் நா விளையாடி இருக்கேன் .கோடைல தான் புளி பறிப்பாங்க .எங்க வீட்ல அத நறுக்கி முத்தெடுத்து காயப்போட பத்து நாளைக்கு ரெண்டு பொம்பளைங்க வருவாங்க.அப்போ கிடக்கற புளியான்கொட்டைஎல்லாம் சேகரிச்சு இந்த ஆட்டம் ஆடுவோம்.
குமிச்சு வச்ச புளியமுத்த வேகமா ஒரு ஊது ஊதி கலைக்கணும்.கலைஞ்ச முத்துலேந்து ஒண்ணுன்னா பொறுக்கணும் .இன்னொரு முத்துல பட்டு அது ஆடிட்டா அவுட்.இப்படியே முத்து சேக்கணும் .யாரு ஜெயிசாங்களோ அவங்ககிட்ட தான் ஜாஸ்தி முத்து இருக்கும் .அப்புறம் அதே வச்சு ஒத்தையா ரெட்டையா விளையாடுவோம் .
புளியாம்பழம் இனிப்பா இருந்தா நைசா கொஞ்சம் தின்னுட்டே இருப்போம் ,இதெல்லாம் கொஞ்சம் அந்தி சாயர வரைக்கும் தான் .அப்புறம் இருக்கு ஆட்டம் பாட்டம் .
ஐயோ பெரிய பின்னூட்டமா இருக்கு போல.
அழாக எழுதிருக்கீங்க தாராபுரத்தான் ஐயா

Unknown said...

அய்யா உங்களின் பசுமை நிறைந்த நினைவுகள் சூப்பர். ஏதோ ஒரு வகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அத்தை மாமா சித்தப்பா சின்னம்மா பெரியப்பா பெரியம்மா என்று
உறவுகளோடு வாழ்ந்து விட்டோம். ஆனால் இந்த தலைமுறையில் குடும்பத்துக்கு ஒரே வாரிசு.சொந்தங்களை எங்கே தேடுவது.
அதுவும் இந்தக்கால குழந்தைகளுக்கு
லீவு என்பதே கிடையாது. லீவு உட்டாத்தான் சம்மர் கேம்ப் இருக்குதே. எப்படியோ நாமெல்லாம் தப்புச்சுட்டமுங்கையா.

Chitra said...

உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பலர் நினைத்தால் படைக்கலாம்...படைப்பார்களா? என பார்க்கத்தானே போகிறோம்


...... உங்கள் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் இருக்கும் போது, நிச்சயம் படைக்கலாம். நன்றி, பெரியப்பா.
உங்கள் இடுகையை வாசிக்கும் போது, காட்சிகள் கண் முன்னே விரியும் வண்ணம் இருந்தன. அருமை.

பனித்துளி சங்கர் said...

/////எப்படியோ பொழுதை ஒட்டினா சரிதான் என்னைப்போல உள்ளவங்களுக்கு...ஆனால் உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்..///////

நண்பரே நீங்களும் இன்னும் பல சிறப்பான பதிவுகளை படைத்து சாதனை சிகரம் எட்ட என் வாழ்த்துக்கள் . உங்களின் கதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

"திருவாத்தான்" கதையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!!!

சிநேகிதன் அக்பர் said...

இதுவே சிறந்த படைப்புதான் சார்.

ரொம்ப பிடிச்சிருக்கு. பதின்ம வயதின் நினைவுகள் எத்தனை காலமானாலும் அழியாது என்பதற்கு இது ஒரு சாட்சி.

//திருவாத்தான் கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். //

காத்திருக்கிறோம்.

ஹேமா said...

என் தாத்தா ஞாபகம் கொண்டு வருகிறதி ஐயா உங்கள் பதிவு.
இன்னும் அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன் ஆவலோட.

ஈரோடு கதிர் said...

//தோட்டத்துகாரர் பார்த்து எங்களை துரத்தினா..//

தொரத்தறதோடவா விடுவாங்க...

நொச்சி வெளாறு பிய்ய பிய்ய அடிச்சிருப்பாங்களே

ஈரோடு கதிர் said...

//உங்கள் செல்வங்களை பெரியம்மா சின்னம்மா ஊருக்கு அனுப்பிச்சாச்சா?//

நம்ம பாப்பு... லீவு உட்ட நாள்ல இருந்து இன்னும் ஈரோடு பக்கம் வர்ல... தோட்டத்துல மஞ்சள் காயப்போட்டு, ராத்திரி களத்துல தூங்கிட்டிருக்குதாம்

பிரபாகர் said...

சின்ன வயசு விளையாட்டுக்கள், நிகழ்வுகளை சொன்ன விதம் அழகுங்க!

உங்க அனுபவம் எங்களுக்குப் பாடம்!

பிரபாகர்...

ஜெய்லானி said...

//புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. ///

நாடோடியும், பத்மாவும் சொல்லிட்டாங்க .அப்புறம் நான் என்ன சொல்ல.

பழமைபேசி said...

நினைவுகளும் படமும்....நல்லா இருக்குங்க அண்ணா!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

பசுமையான நினைவுகள்
நல்லா இருக்குங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எல்லோரும் ஒன்றாக அமர்ந்தவுடன் பெரியம்மா உருண்டை பிடித்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்து உண்ணும் அழகை பார்த்திருப்பாங்க//

எங்க பாட்டி இப்படி தான் உருண்டை பிடித்து தருவாங்க..
நல்லா இருக்குங்க..

தாராபுரத்தான் said...

வணக்கம் வேலுஐி வாங்க நாடோடி..ஒ..ஒ இப்படியும் விளையாடலாமா? கிரிக்கெட்டும் கையுமா அலையறதைப்பார்த்தா பாவமா இருக்குதுங்க வானம் பாடிசார்.

தாராபுரத்தான் said...

புளியமுத்தை தம் கட்டி ஊதும் போது சுவாசப்பயிற்ச்சி...முத்து அலராம எடுக்கும் போது கண்ணுக்கும் கையுக்கும் பயிற்ச்சி...அபாரம் பத்மா.

தாராபுரத்தான் said...

சம்மர் கேம்ப்க்கு அனுப்பி விட்டீர்களா..தாமோதர சந்துரு சார்

தாராபுரத்தான் said...

செல்வங்கள் நலமா சித்ரா..

தாராபுரத்தான் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said நன்றிங்க.

தாராபுரத்தான் said...

சொல்லறேங்க சைவகொத்து புரோட்டா .

தாராபுரத்தான் said...

அக்பர் தம்பி நலமுங்களா?

தாராபுரத்தான் said...

ஹேமா said...நலமா?

தாராபுரத்தான் said...

ஊரில் இருந்து வந்ததும் இந்த மாமா கேட்டதாக சொல்லுங்க கதிர்..

தாராபுரத்தான் said...

ஜெய்லானி நீங்களும் விளையாடியிருக்கறீர்களா?

தாராபுரத்தான் said...

நெனைப்பு பொழைப்பை கெடுக்காம பார்த்துக்கோணும் அப்படித்தானுங்க பழமை பேசி தம்பி.

தாராபுரத்தான் said...

நண்டு @ நொரண்டு நல்லா இருக்கிறீர்களா?

தாராபுரத்தான் said...

ஆனந்தம் ஆனந்தி..

எல் கே said...

adutha kathaikaaga kaathirukiren. naalai ungal oor pakkam varuven

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கலா எழுதியிருக்கீங்க ஐயா..

எனக்கும் என்னோட சிறு வயது நினைவு வருகிறது.

புகைப்படங்கள் அருமை. அதுவும் பசங்க குதிக்கற படம்.. அட்டகாசம்.

தயாளன் said...

என்ன இவ்வளவு சீக்கிரம் முடுச்சுட்டீங்க, அடுத்த பதிவ பெரிய பதிவா போடுங்க.

பிரேமா மகள் said...

தாத்தா.. நானும் விளையாட போகணும்ன்னு கேக்கிறேன்.. எங்க ஆபீஸ்லில் இந்த குட்டி பாப்பாவ, 'விளையாட் போக" விட மாட்டேங்கிறாங்க.. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்...

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சி//எல்கே..

தாராபுரத்தான் said...

மடத்துக்குளம் ஆற்றில் நீங்க செய்யாத அலும்பா? நன்றி செந்தில்.

தாராபுரத்தான் said...

சீனு.. நம்ம ஊரு தம்பியா? சந்திக்கலாம் தம்பி.

தாராபுரத்தான் said...

குட்டி சாத்தான்னு சொன்னது சரியாத்தான் போச்சு.

Ahamed irshad said...

பசுமை+இனிமை நினைவுகள்... அருமைங்கோ....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பசுமையான பதிவுங்க. ஸ்கூல் விடுமுறை நாட்களை கண்ணு முன்னாடி ஓட விட்டுடீங்க. பயம் கவலை கட்டுப்பாடு இல்லாத அழகான நாட்கள். புளிய முத்து வெச்சு பாண்டி ஆடுவோம் அப்புறம் திண்ணைல தேச்சு யாரு அதிகம் சூடு வெக்கரானு ஒரு ஆட்டம், அப்புறம் ஒத்தையா ரெட்டையா இவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சு

ப.கந்தசாமி said...

நல்ல நினைவுகள்.

அன்புடன் மலிக்கா said...

//புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்//

அதுவா ஸ்டீபன். நிறைய புளியங்கொட்டைகளை சேர்த்து அதை ஒரு குவியலாக வைத்து வாய்காற்றைக்கொண்டு ஊதிவிட்டால் சற்று சற்று தள்ளிப்போகும் அதில் ஒன்றை மற்ற காயில் தொட்டுவிடாமல் எடுக்கனும். நாங்களும் இதுபோல் நிறைய விளையாடியிருக்கோம்.

பசுமை நினைவுகள் மிக அருமை..

cheena (சீனா) said...

அன்பின் தாராபுரத்தாரே

பதின்ம நினைவுகள் - அல்ல மழலை நினைவுகள் - நாம் குழந்தைகளாக இருந்து - விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் இப்பொழுது இல்லை - இக்கால மழலைகளின் விளையாட்டே வேறு. நாம் விளையாடிய விளையாட்டினையும், செய்த குறும்புகளையும், நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி நண்பரே !

நல்வாழ்த்துகள் நண்பரே
நட்புடன் சீனா

அண்ணாமலை..!! said...

ஐயா..!! நிறைய தோணுனதை
காலம் கருதி கஷ்டப்பட்டு சுருக்கியிருக்கிறீர்கள்!

மறுபடியும் கிராமத்துக்கே
கொண்டு போகுது உங்க எழுத்து!!

ம்ம்ம்ம்.....!!!!!!!!