சின்ன வயசிலே கேட்ட கதை. எங்கிட்ட யாரும் கதை கேட்கவில்லை என்றாலும் பதிவுகளில் சின்ன வயதுகளில் கேட்ட கதைகளை படிக்கும் போது அடடே இப்படி நம்ம கிட்ட என்ன கதை இருக்குதுன்னு நெனைக்க தோணுதுல்ல.. நினைத்ததை எழுதுவோமில்ல... நினைச்சதை எல்லாம் எழுதி அதைப் பத்து பேர் படித்து என்ன சொல்லறாங்க..? அப்படின்னு பார்க்கிறதில்ல ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுதுங்க. எப்படியோ பொழுதை ஒட்டினா சரிதான் என்னைப்போல உள்ளவங்களுக்கு...ஆனால் உங்களில் பலர் காலத்தால் அழிக்க முடியாத படைப்புக்களை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பலர் நினைத்தால் படைக்கலாம்...படைப்பார்களா? என பார்க்கத்தானே போகிறோம்..கதைக்கு வருவோம்.
ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது படிக்கும் காலம்தான் நம்ம பசங்க வாழ்க்கையில் சுகமான காலம். கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவு மற்றும் முழுப்பரீட்சை லீவு இந்த மூன்று லீவுகள் வந்தால் போதும் பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அந்த கடைசிப் பரீட்சை எழுதி, வீடு திரும்பும் போது இருந்த மகிழ்ச்சி இன்று வரை இல்லை. அந்த நாட்களை நினைக்க வைத்தவர்களுக்கு மீண்டும் நன்றி. லீவு விட்டவுடனே பெரியம்மா ஊரு, அக்காஊரு...என ஊர்களுக்கு போக ரகளை பண்ணி அன்றே கிளம்பி விடுவோம்.
முதலில் பெரியம்மா வீடு. அங்கதான் தோட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அப்புறம் பெரியம்மா சொல்லுகிற கதைகள்.. ஆகா..லீவு போறதே தெரியாதே. ஊருக்கு போன மறுநாளே பெரியம்மா வீட்டு அண்ணாக்களுடன் தோட்டத்திற்கு புறப்பட்டு விடுவோம். தோட்டத்திற்கு போன வுடனே முதலில் தேடுவது அண்ணாக்களின் அன்றைய ஒரே பொழுது போக்கு...அந்த கால சினிமா பாட்டு புத்தகங்கள். அண்ணாக்கள் சினிமா புத்தகங்களை சேகரித்து அதை ஓலைகளில் சொருகி வைத்து இருப்பார்கள். அதை தேடித்தேடி எடுத்துப் படித்து மனப்பாடம் செய்து கொள்வோம். அப்ப பச்சுன்னு மனசுலே ஒட்டுனதுதான் இன்னுமும் துடைக்க முடியலை.
மாடுகள் மேய்க்க சின்ன அண்ணாவுடன் மேற்கே கொறங்காடு (சுற்றிலும் அடைப்புள்ள காடு) கிளம்பி விடுவோம். அந்த காட்டில் அந்த வெலா மரத்து நிழல்.. புள்ளை பூச்சி பிடித்து விளையாட சின்ன அண்ணா செய்யும் டெக்னிக். .அந்த காலத்திலே கொறங்காட்டுக்குள்ளே மறைவான இடங்களில் பதித்து வைத்திருக்கும் சாராய ஊறல்கள்... மண்தாழியை மண்ணுக்குள் சுமார் ஆறடி ஆழத்தில் பதித்து வைத்து .. அதற்குள் பழங்கள்.. விலாம்பட்டை..அய்யோ அவ்வளவுதான் எனக்கு தெரியும்சாமி... என்ன என்னமோ சொல்லுவாங்க.. நான் பார்த்ததில்லை.. அதையெல்லாம் போட்டு ஊறல் போட்டிருப்பாங்க..அந்த இடத்தை யாரு கண்ணுக்கும் தெரியாம அவ்வளவு டெக்னிக்கலா மூடி வைத்துதிருப்பாங்க. எங்க சின்ன அண்ணா கில்லாடியல்ல. அதை கண்டு பிடித்து .. தோண்டி மூடு கல்லை எடுத்து என்னை கூப்பிட்டு காட்டுவாரு.. அப்ப எங்க சின்ன அண்ணன் எனக்கு எம்.ஜி.ஆரா தெரிஞ்சாரு. இன்னைக்கு வரைக்கும்தான்.
அப்ப அடித்தது பாருங்க ஓருவாடை ..அய்யோ ..இப்போ நெனைத்தாலும் விடமாட்டீங்குது. நாங்க இந்த வேலையில் இருக்க மாடுகள் கொறையை விட்டு கொறை தாவி அடுத்த தோட்டத்து வெள்ளாமையில் புகுந்து விடும். தோட்டத்துகாரர் பார்த்து எங்களை துரத்தினா...நாங்க எடுத்தா ஓட்டம்...எழுத எழுத எல்லாம் ஞாபகம் வருதுங்கோ. எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. புலி வாலை பிடித்த கதையா இருக்குதே. எது எது ஞாபகம் வருதோ அதெ எல்லாம் எழுதி போடறதுங்கிற முடிவோட உட்காந்தாச்சுங்கோ.
மாலையில் வீடு திரும்பும் போது எருமை மாட்டு மேல என்னை உட்கார வைத்து வீட்டுக்கு கூட்டி வருவார் சின்ன அண்ணா. இரவு நிலா வெளிச்சத்தில் உணவு. எல்லோரும் ஒன்றாக அமர்ந்தவுடன் பெரியம்மா உருண்டை பிடித்து ஆளுக்கு ஒரு உருண்டை கொடுத்து உண்ணும் அழகை பார்த்திருப்பாங்க...அப்புறம் விளையாட்டு.. படுக்க பத்து பதினொரு மணி ஆகிவிடும். அப்போது ஆளுக்கு ஒரு கதைசொல்ல வேண்டும். எல்லோரும் கதை சொன்னார்கள் ...கேட்டேன்..நானும் கதை சொன்னேன். எதுவுமே ஞாபகமில்லை.ஆனால் எங்க பெரியம்மா சொன்ன திருவாத்தான் கதை மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. அது சரி...பள்ளிக்கூடங்கள்தான் லீவு விட்டாச்சே..உங்கள் செல்வங்களை பெரியம்மா சின்னம்மா ஊருக்கு அனுப்பிச்சாச்சா? இந்த காலத்திலே அங்கே போனாலும் நம்ம செல்வங்கள் மட்டையும் கையுமாவுள்ள இருக்கறாங்க. கிராமங்களில் வேகாத வெய்யில் காடுமேடு எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டாவுள்ள இருக்குது.
அந்த காலத்திலே வெளியவே விடமாட்டாங்க. பகலில் அக்காக்களுடன் புளியமுத்தை ஊதி விளையாடும் விளையாட்டை விளையாடுவோம். அதைப்பத்தி உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் கருத்துரையில் சொல்லுங்களேன்.. நல்ல உடல் பயிற்சியான விளையாட்டு. உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க இத்துடன் முடித்துக்கொள்கிறேன். திருவாத்தான் கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி..வணக்கம்.