தினமும் இணையத்தில் ஒவ்வொருத்தருடைய பதிவுகளை படிக்கும்போதும் அடடே..இவுங்க இப்படி சிந்தித்திருங்காங்களே.. நமங்கு எங்கே போச்சு புத்தி? (மரியாதையா சொன்னா அறிவு..) நமக்கும்தானே அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கு.. ஆனா அதை ஏன் பதிவா போடலை? போடலாம்ன்னு நமக்கு ஏன் தோணலை? சரி போனது போகட்டும் இன்று பதிவு போட ஏதாவது அனுபவம் கிடைக்குமா? என ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டியது..அங்கே போய் பார்த்தா நம்ம அனுபவத்தையே ஒருத்தர் அனுபவித்து எழுதிருப்பார்...நடுரோட்டிலே லிப்ட் கேட்ட ஒருவன் வழிப்பறியா இருப்பானோ? என நமது மனது நினைப்பதைக்கூட பதிவில் தொட்டுப்பார்க்க கதிர்களால் முடிகிறது. ஏன் நம்மால் முடிவதில்லை..இப்படியே காலத்தை ஒட்டாம...நிகழ்வு ஒன்றை பதிவு செய்வதாக முடிவு செய்தாச்சு..
ஒவ்வொருவரும் பிறந்தவுடன் பல உறவுகள் உண்டாகிறது. அம்மா அப்பாவுக்கு மகனாகிறோம், நமக்கு முன்னே நமது பெற்றோர்களுக்கு பிறந்தவங்களுக்கு தம்பியாகிறோம், தாத்தா..பாட்டிக்கு பேரனாகிறோம், அப்படியே உறவுகள் தொடர்கிறது. பெற்றோர்கள் வைக்கும் பெயருக்கு சொந்தகாரர்களாகிறோம், பள்ளி பருவத்தில் நண்பனாகிறோம், தில் இருந்தா காதலனாகிறோம், கல்யாணம் பண்ணிக்கிட்டா கணவராகிறோம். அதனை தொடர்ந்து உறவுகள் மாமன், மச்சான் என ஓட்டிக்கொண்டு உறவாடி மகிழ்ந்து போகிறோம்.
நமக்கென குழந்தைகள் பிறந்தவுடன் அப்பாவாகிறோம். அந்த குழந்தைகளுக்கு மணம்முடித்தவுடன் சம்மந்தியாகிறோம். நமது குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தாத்தா..பாட்டியாகிறோம். முதலில் மகன் என்ற உறவுடன் வந்த நாம்.. தாத்தாவாகி ஓய்வு பெறுகிறோம். என்ன இது? ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..





