Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, May 24, 2010

வாங்க காற்று வாங்கலாம்..



வாங்க காற்று வாங்கலாம்.. வெய்யிலிலிருந்து விடுதலை. எங்க ஊரில் காற்று சித்திரையில் சீர் பூட்டி விடும். ஜுன், ஜுலை மாதங்களில் எங்க ஊருப்பக்கம் வந்து பாருங்க. வந்து பார்த்தவங்களுக்கு தெரியும். அடிக்கின்ற காற்றில் அம்மியே பறக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும் சூறைக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சொய்...சொய்வென இறைச்சலுடன் காற்று வீசும் அழகே தனி. காடு மேடெல்லாம் புழுதி பறக்கும். வீட்டுக்குள்ளே மண்ணை கூட்டி மாளாது. பாழாய் போன காத்து என இயற்கையை நொந்தபடி வீட்டை கூட்டுவார்கள் எங்க வீட்டு அரசிகள். அடிக்கின்ற காற்றை அதிசியமாக பார்ப்பார்கள் புதிதாக இந்த பக்கம் வருகிறவர்கள். பழனியை பார்க்க வருகிறவர்கள் எங்க ஊரு வழியாகத்தானே போகணும். அது ஒண்ணுதான் எங்க ஊருக்கு பெருமை.. அப்புறம் காற்று.. காத்துன்னுதான் சொல்லி பழக்கம்.

பாலக்காட்டு கணவாய் இடைவெளியில் எங்கஊரு வருவதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பல்லடம், உடுமலைப்பேட்டை, பழனி, தாராபுரம், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் என ஒருரவுண்டு கட்டி காற்று வீசும். மணல் மழை பொழியறதை நேரில் பார்க்கலாம். இன்னும் பார்த்ததில்லையா? அப்ப கண்டிப்பாக ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் எங்க ஊருபக்கம் வாங்க.. வந்து அடிக்கிற காத்தில கொஞ்ச நேரம்நின்னு பாருங்க. உங்க தலையிலேயே நல்ல மணலை கொண்டு செல்லலாம். பத்து பேரு வந்தீங்கன்னா ஒரு அறை லோடு மணலை கடத்தி விடலாம். அது சரி.. எதையோ சொல்ல வந்து காற்று திசைமாற்றி விட்டது. அக்பர் வரை எல்லோரும் சேட்டையில் விளையாட ஆரம்பித்து விட்டதால் நாமும் கொஞ்சம்..

எதிர் வரும் வாரம் கல்யாண வாரம்.. பகுத்தறியா பதர்கள் நேரம் காலத்தை பகுத்து.. மூகூர்த்த நாள் இதுன்னு குறித்து வைத்து விடுகிறார்களா? எல்லாநாளும் நல்ல நாளே என்ற நினைப்பு மாறி மூகூர்த்த நாள் எதுன்னு பார்த்து ஒரே நாளில் எல்லோரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை வைத்து விடுகிறார்கள்...அதனால் நமக்கில்ல கண்ணுமுழி பிதுங்குது. ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது. எல்லாமே நெருங்கிய சுற்றமும் நட்பும். எங்க போறது என்ன பண்ணுவது ஒண்ணும் தெரியமாடீங்கிது. கோயமுத்தூரில் ஒண்ணு பொள்ளாச்சியில இன்னொன்னு உடுமலையில் மற்றொன்று பழனியிலும் ஒண்ணு.. உள்ளூரில் ஆறு.... ஏ..அப்பா.. போயி தலையை கூட காட்ட முடியாது போல இருக்குதே.. பஞ்சா பறக்க வேண்டியதுதான்.. எங்க போயி மணமக்களை வாழ்த்துவது...

எதை எதையோ புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்க.. இதுக்கு ஒரு மாற்று உட்கார்ந்து யோசிக்க மாட்டேங்கிறாங்களே. என்னமோ நெனச்சேன்...பதிவும் போட்டுட்டேன்.பதில் போடுங்க...




Saturday, January 30, 2010

தெரிந்தால் சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....

சென்ற வாரம் பத்திர பதிவுக்காக சென்றிருந்த போது பத்திர பதிவு குறித்த ஆவணங்களைப் படிக்க நேர்ந்தது. இன்றும் பத்திர பதிவுகளில் ஆட்சி செய்யும் இந்த சொற்கள் தமிழ் சொற்கள்தானா என்ற கேள்வி? பதிவு சொந்தங்களை கேட்டுவிடுவோமே என துணிந்துவிட்டேன்.

படித்த சொற்கள்....

பவர் ஏஐண்டாக, லேட், ஜெனரல் பவர் பத்திரம், சர்வ சுதந்திரம்,
கிரையம், சுவாதீனம், பூர்த்தி செய்து கொடுக்கவும், சகல சர்வ வில்லங்கம்,
சர்க்கார், சகல நமுனா, கிரையம், இரத்து, சகல எண்டார்சுமெண்டு,
வக்காலத்து, பைசல், பிரதி பிரயோஐனம், ரீசர்வே, பஞ்சாயத்து, நஸ்டம்,
நெம்பர், வழித்தட பாத்திய சகிதம், தம் மைனர் மக்கள், கார்டியன், விலாசம்...

- இவை யெல்லாம் தமிழ் சொற்கள் தானா? காலங் காலமாய் தொடர்வதால் அப்படியே தொடர்கிறார்களா? தமிழை வாழ வைக்கவே வாழ்ந்து கொண்டு, தமது வாரிசுகளையும் வாழவைப்போர் ஏன் வாய் திறப்பதில்லை?

தெரிந்தா சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....



Thursday, January 28, 2010

நம்புவோம்...

உறவு பெரியவர் ஒருவர் காலமாகி விட்டதால் அதை விசாரிக்க செல்ல வேண்டும். நல்லதுக்கு போக முடியவில்லை என்றாலும் கெட்டதுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பது மரபு ஆயிற்றே. பல நாள் பகை கூட இறப்பில் ஒன்று சேர்வது உண்டு. பெருந்துறை அருகே இன்னும் கிராமச்சுவடு தென்படுகின்ற ஒரு கிராமத்திற்கு பெரியவர் மரணத்தை விசாரிக்க சென்றேன். அவர் காலமாகி மூன்றாவது நாள் . அன்று உறவுகள் ஒன்று கூடி விருந்து படையல். நாம் விருப்பபட்டதை நமக்காக சமைத்து அவருக்காக கூடி உண்பது. முன்பெல்லாம் தினமும் ஒரு உறவு என முறை வைத்து மூன்று மாதங்கள் கூட விருந்து நடைபெற்றது உண்டு. இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து மகா விருந்து வைத்து ஒரே நாளில் முடித்து விடுகின்றனர்.


விருந்து வீட்டில் கேலியும் கிண்டலுமாக உறவுகள் சொல்லி உண்டு மகிழ்ந்து இறப்பு வீட்டை கலகலப்பாக்கி விடுகிறார்கள். அதுலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவேணும் உறவில் யாராவது விரைவில் டிக்கெட் வாங்க வேண்டும் என எண்ண தோன்றும். கூட்டு குடும்பங்களின் சங்கீதம் கேட்காத இந்த நாளில் தன் இறப்பிலாவது ஓன்று கூடி மகிழ்வதை இறந்தவரின் ஆன்மா நிச்சியம் கேட்கும் என நம்புவோம்.




Monday, January 18, 2010

நீ தமிழனா?? (படித்ததில் பிடித்தது)


ஒரு
நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டபடுகிறாய் ?
நான் கேட்டேன் - கஷ்டபடாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் !

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப்பார் ,
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!

உழைக்காமல் எப்படியப்பா இதனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி சொன்னார்,

நான் யார் தெரியுமா ? தமிழ் நாட்டு குடி மகன்,
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ருபாய் ,
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம் ,
பொழுது போக்கிற்கு வண்ண தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !

மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடபுத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்,
ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால் மாப்பிள்ளையுடம் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும் !!

வியந்து போனேன் நான்!!

என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையுட்டு, மற்றொன்று பிச்சை !!!

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சொம்பெரிகளகிறாய்,
இலவசம் நின்று போனால், உன் நிலை ?
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.

தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில்
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!



இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்...
சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்...