Showing posts with label ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label ஆசிரியர்கள். Show all posts

Tuesday, February 2, 2010

எங்கே கூட்டிப்போகிறார்கள்........


நண்பர் ஒருவர் ஆசிரியப்பணியே அறப்பணி என்று வாழ்ந்து வருபவர். அவரை நேற்று சந்தித்தேன்.மிகவும் சோர்வாக இருந்தார். ஏண்டா இந்த வேளைக்கு வந்தோம் என்று இருக்குது என சலித்துக் கொண்டார். நான் கிண்டலாக மவராசன் ஆட்சியிலே உங்களுக்குதான் அள்ளி அள்ளி கொடுத்திட்டாரே.. அப்புறமென்ன நண்பா..என்றேன். அதன் பின்பு அவர்கள் துறையில் போட்டி போட்டு நடந்து வரும் பொறுப்பில்லாத அதிகாரிகளின் போக்கை பார்த்து மனம் வெதும்புவதாக கூறினார். நானும் பதிவுக்கு நல்ல மேட்டர் கிடைக்கும் போல இருக்குது என எண்ணி கொஞ்சம் விரிவாத்தான் சொல்லுங்களேன் என்றேன்.


தமிழ்நாட்டில் பள்ளி கல்வித் துறையில் தேர்ச்சியை அதிகரித்து காட்ட வேண்டும் என்று மானாவாரியாக செயல்பட்டு கல்வியை சீரழித்து வருகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ? என்றார். எப்படி என்று கேட்டேன். ஒரு மாணவன் 25 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சியளிக்கவேண்டும் என்பது பள்ளி கல்வித் துறையின் விதி. மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மேற்காண் விதி முறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.


ஆனால் இன்று நடப்பது என்னவென்றால் ஒருபள்ளியில் தேர்ச்சி விகிதத்தை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற எடுத்துச்சென்றால் 5 சதவீதம், 8 சதவீதம், 10 சதவீதம் உட்பட மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களையும் 25 சதவீதமாக உயர்த்தி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டினால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கும் என சாட்டையடியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். வாத்தியார்களும் ..ஒ..கே.. வாத்தியார்களுக்கே வகுப்பா என ஒருமுடிவுக்கு வந்து எவன் படித்தால் என்ன,,,படிக்காட்டி என்ன..நமக்கு படி வருதா..மானாவாரியா எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக போய் வருக என ஆசி வழங்கி மேல் வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.


போனா போகுது விடு நண்பா என்று ஆறுதல் கூறினால், அவர் மிகவும் வருத்தமாக உள்ளது. தனது மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் தரம் அறியாமல் மாணவர்களின் தராதரம் பார்க்காமல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டின் பள்ளி கல்வியின் எதிர் காலம் என்னாகுமோ என கவலைப்பட்டார். இதனை வெளியே சொல்ல முடியாமல் சில ஆசியர்கள் மனம் வெதும்பி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே விட்டுவிட்டார்களாம். நாட்டு நடப்பை அனுசரித்து நாட்களை கடத்துங்கள் நண்பா என வாத்தியார்ருக்கே வகுப்பு எடுத்து விடை பெற்றேன்.


இதை படிக்கும் யாருக்காவது எதையாவது சிந்திக்க தோன்றினால் வெளியே யாரிடமும் சொல்லாமல் சிந்தித்து சிரிக்க முடிந்தால் சிரித்து அழ முடிந்தால் அழூது தொலையுங்கள். இந்த நாட்டில் எதை எவனிடம் சொல்லி என்ன நடக்கப்போகிறது. வணக்கம். வரட்டுங்களா....