Thursday, January 28, 2010

நம்புவோம்...

உறவு பெரியவர் ஒருவர் காலமாகி விட்டதால் அதை விசாரிக்க செல்ல வேண்டும். நல்லதுக்கு போக முடியவில்லை என்றாலும் கெட்டதுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பது மரபு ஆயிற்றே. பல நாள் பகை கூட இறப்பில் ஒன்று சேர்வது உண்டு. பெருந்துறை அருகே இன்னும் கிராமச்சுவடு தென்படுகின்ற ஒரு கிராமத்திற்கு பெரியவர் மரணத்தை விசாரிக்க சென்றேன். அவர் காலமாகி மூன்றாவது நாள் . அன்று உறவுகள் ஒன்று கூடி விருந்து படையல். நாம் விருப்பபட்டதை நமக்காக சமைத்து அவருக்காக கூடி உண்பது. முன்பெல்லாம் தினமும் ஒரு உறவு என முறை வைத்து மூன்று மாதங்கள் கூட விருந்து நடைபெற்றது உண்டு. இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து மகா விருந்து வைத்து ஒரே நாளில் முடித்து விடுகின்றனர்.


விருந்து வீட்டில் கேலியும் கிண்டலுமாக உறவுகள் சொல்லி உண்டு மகிழ்ந்து இறப்பு வீட்டை கலகலப்பாக்கி விடுகிறார்கள். அதுலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவேணும் உறவில் யாராவது விரைவில் டிக்கெட் வாங்க வேண்டும் என எண்ண தோன்றும். கூட்டு குடும்பங்களின் சங்கீதம் கேட்காத இந்த நாளில் தன் இறப்பிலாவது ஓன்று கூடி மகிழ்வதை இறந்தவரின் ஆன்மா நிச்சியம் கேட்கும் என நம்புவோம்.




No comments: