Saturday, January 30, 2010

தெரிந்தால் சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....

சென்ற வாரம் பத்திர பதிவுக்காக சென்றிருந்த போது பத்திர பதிவு குறித்த ஆவணங்களைப் படிக்க நேர்ந்தது. இன்றும் பத்திர பதிவுகளில் ஆட்சி செய்யும் இந்த சொற்கள் தமிழ் சொற்கள்தானா என்ற கேள்வி? பதிவு சொந்தங்களை கேட்டுவிடுவோமே என துணிந்துவிட்டேன்.

படித்த சொற்கள்....

பவர் ஏஐண்டாக, லேட், ஜெனரல் பவர் பத்திரம், சர்வ சுதந்திரம்,
கிரையம், சுவாதீனம், பூர்த்தி செய்து கொடுக்கவும், சகல சர்வ வில்லங்கம்,
சர்க்கார், சகல நமுனா, கிரையம், இரத்து, சகல எண்டார்சுமெண்டு,
வக்காலத்து, பைசல், பிரதி பிரயோஐனம், ரீசர்வே, பஞ்சாயத்து, நஸ்டம்,
நெம்பர், வழித்தட பாத்திய சகிதம், தம் மைனர் மக்கள், கார்டியன், விலாசம்...

- இவை யெல்லாம் தமிழ் சொற்கள் தானா? காலங் காலமாய் தொடர்வதால் அப்படியே தொடர்கிறார்களா? தமிழை வாழ வைக்கவே வாழ்ந்து கொண்டு, தமது வாரிசுகளையும் வாழவைப்போர் ஏன் வாய் திறப்பதில்லை?

தெரிந்தா சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....



12 comments:

vasu balaji said...

அது தமிழ் சொல் இருந்தாலும் பயன்பாட்டில புரியாம போயிடுமுங்க. கணினி பத்திரம் கூட இப்படித்தான் எழுதறாங்க.

பழமைபேசி said...

தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்லக் கூடிய மாநாடுதான் இந்த மாநாடு! கோவையிலே எதிர்வரும்....

பழமைபேசி said...

காலக்கொடுமைங்க... தெரிஞ்சாலும் சொல்ல மாட்டாங்க யாரும்!

ஈரோடு கதிர் said...

நல்லாத்தான் கேள்வி கேக்குறீங்க

பதிலுக்குத்தான் யாரத்தேடுறதுன்னு தெரியல

ஆரூரன் விசுவநாதன் said...

பத்திரப் பதிவுத் துறை நாம் எதை எழுதித்தருகிறோமோ அதை அப்படியே பதிந்து கொள்ளும். அது அரசின் ஆவணப்பதிவு மற்றும் நிகழ்வுக்கான சாட்சியாகத்தான் அமையும்.

அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியில் நீங்கள் எதை எழுதித்தருகிறீர்களோ அதை அப்படியே பதிவதுதான் அவர்கள் பணி.

சிக்கல் நம்மிடம் தான். ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட இந்த நடைமுறையில் ஆரம்பகால பத்திர எழுத்தர்கள் பெரும்பாலும், பிராமண வழக்கறிஞர்கள் தான். 19ம் நூற்றாண்டின் தொடக்ககால பத்திரங்களை படிக்கவே முடியாது. பின்னளில் வந்தவர்கள் தான் அதை கொஞ்சம் எளிமைப் படுத்தினர்.

இன்னும் கூட நில அளவீடுகளை குறிக்க செக்குபந்தி என்றுதான் எழுதுகிறோம். அழகுதமிழில் எழுதிக் கொடுத்தால் அவர்கள் அதை பதிவதில் அவர்களுக்குளுக்கு எந்த சிக்கலும் இல்லை.

சட்டப்படி, நாம் எழுதிக் கொண்டுபோய் கொடுக்கும் பத்திரத்தில் அவர்கள் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. சட்டத்திற்கு புறம்பான விவரங்கள் அதிலிருந்தால், பதிய மறுப்பு தெரிவிக்கலாம் அவ்வளவே.

நம் பகுதியில் கிடைத்த செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளில் கூட சமஸ்கிரத வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், இதை,இதற்காக, இப்படி நான் செய்கின்றேன், தவறினால், காராம்பசுவை கொன்ற பாவத்தையும், கங்கை கரையில் பார்ப்பணனை கொன்ற பாவத்தையும் அடைவேன் என்று கூட எழுதப்பட்டிருக்கிறது.

அந்தந்த கால கட்டங்களில் எழுத்தர்களின் வாழ்வியல் சூழல், மற்றும், அவர்கள் அறிவு ஆகியவையே பத்திரங்களில் பிரதிபலிக்கின்றன.

இன்றய எழுத்தர்களுக்கும் அரசே சொல்லிக் கொடுத்தால், வருங்காலங்களில் நல்ல தமிழில் பத்திரங்கள் பதிவு செய்யப்படலாம். ஆனாலும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்வது இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி வரம்பு மீறலே...

உங்கள் பதிவு வரவேற்கக்கூடியது. வருங்காலமாவது திருந்தலாம்.....

அம்பிகா said...

நியாயமான கேள்வி.
ஆரூரான் விசுவநாதனின் விளக்கமும் அருமை.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கேள்வி

அண்ணன் விசுவநாதனின் பதில் அருமை.

ஹேமா said...

பத்திரம் - இலை,சாசனம்,பாதுகாப்பு

சர்வ(சர்வம்) - எல்லாம்,முழுதும்

சுதந்திரம் - உரிமைப்பேறு

கிரையம் (கிரயம்) - விற்பனை,
விற்பனை நிலை

சுவாதீனம் - சுயேச்சை,உரிமை

பூர்த்தி செய்து கொடுக்கவும் - நிறைவு,திருப்தி

வில்லங்கம் - தடை,துன்பம்,

இரத்து - இல்லாமல் ஆக்குதல்

மக்கள் -மானுட வர்க்கம்

விலாசம் -ஒருவரின் இருப்பிடக் குறிப்பு,அழகு

இந்தச் சொற்கள் நாங்கள் அடிக்கடி பாவிக்கும் சொற்கள்தானே !ஏன் இவைகள் தமிழ்ச் சொற்கள் இல்லையா ?

புலவன் புலிகேசி said...

எங்கள் வீட்டு பத்திரத்தை எத்தனை முறை படிக்க முயன்றாலும் முடியல...

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க வானம்பாடி சார் மன்னிக்கவும் அய்யா. என்ன செய்வது பழக்கம் அப்படி். நீங்களும் வாங்க பழமை பேசி மாநாடு கூட்டி தமிழை வளர்ப்போம். எல்லாம் நீங்க கொடுத்த தைரியம்தான் ஈரோடு கதிர். பதில் பதிவுக்கு மிகுந்த மகிழ்ச்சி அன்புக்குரிய ஆருரன் அவர்களே . நன்றி அக்பர். கேமா தப்பா பெயர் பதிஞ்சதுக்கு மன்னிக்கவும் அச்சடிப்பதில் அறை குறை நன்றி. புலவன் பலிகேசிக்கும் நன்றிங்கோ...

Nathanjagk said...

நீங்க வாங்கி வந்த சொற்களைப் பார்த்தால் நிறைய ஆபீஸ்கள் போய் வந்திருப்பீங்க போல (பாவம் சார் நீங்க!)

இந்த மாதிரியான சொற்கள் இருந்தால்தான் தஸ்தாவேஜுக்கள் புழங்குகிற நம்ம சர்க்கார் ஆபிசுக ஒரு ஜபர்தஸ்தா இருக்கும்!
இதெல்லாம் பிதுரார்ஜிதமா வழங்கப்படுகிற வார்த்தைகள்.. எல்லா ஊர் கஸ்பாவிலும் இருக்கத்தானே செய்யுது!!

எனக்கொரு கேள்வி - உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க:
தாராபுரம்-ங்கிறது தமிழ் வார்த்தையா??
:-)

Nathanjagk said...

இந்த இலையில் குறிப்பிட்டபடி என் உரிமைப்பேறு முழுதும் ஜெகநாதன், தாராபுரம் அவர்களுக்கு விற்பனை செய்து கொடுக்கப்படுவதாக, நான் சுயேச்சையாக நிறைவு செய்து கொடுக்கிறேன். இதில் துன்பம் எதுவும் இல்லை. இந்த இலை எந்த காலத்திலும் இல்லாமல் ஆக்குதல் ஆகாது என்பதற்கு பதிவுலக மானுட வர்க்கத்திடம் கூறிக் கொள்கிறேன்.
இப்படிக்கு....
ஹேமா(சுவிஸ்)

பயப்படாதீங்க... ஹேமா தமிழ்படுத்திய வார்த்தைகளைக் கொண்டு ஒரு பத்திரம் எழுத முயற்சி பண்ணினேன்.

பரவாயில்லை நல்லாத்தான் இருக்கு!சுத்த தமிழில் சொத்தைக் கூட எழுதி வாங்கிடலாம் போல :-)